Category Archives: Commemoration

Swamiji Commemoration Special Article – 2016

மந்திரச் சொல்

Swami Chidbhavananda 2

தூய்மையிலிருந்து ஆற்றல் மிக்க சொற்கள் பிறக்கின்றன. ‘Out of purity comes words of power’ அச்சொற்கள் கேட்போருடைய உள்ளத்தில் ஆற்றலையும், உறுதிப்பாட்டையும் வளர்க்கின்றன. தூய்மையான உள்ளத்திலிருந்து வரும் சொற்களை ஆராய்ச்சி செய்ய வேண்டுவதில்லை. அவற்றை அப்படியே வாழ்க்கையில் கடைப்பிடிக்கலாம். அவற்றை ஆப்த வாக்கியங்கள் என்றும் மந்திர சக்தி வாய்ந்தவைகள் என்று பகரலாம். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அருளிய சொற்கள் ஆக்ஷேபனையின்றிப் பக்தர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளலாம்.

1. பேச்சாற்றல்:

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்

எனத் திருவள்ளுவர் சொல் வன்மை பற்றிக் கூறுகிறார். இந்தக் குறளுக்கு விளக்கமாக ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் பேச்சாற்றல் அமைந்திருந்தது. இவருடைய பேச்சாற்றலை அனுபவித்த சந்நியாசினி ஒருவரின் அனுபவம்:

“பெரிய சுவாமிஜியுடன் நாங்கள் சிலர் கேரள நாட்டுக்குத் தெய்வப் பயணம் சென்றிருந்தோம். அங்குள்ள பக்தர் சிலரின் அழைப்பை ஏற்று அவர்கள் வீட்டுக்குச் சென்றோம். பக்தர்கள் இவரை வரவேற்பதில் பேரார்வமும், பெருமகிழ்வும் காட்டினர். அவர்களின் பக்தி எத்தகையதாக இருந்தது என்பதை நேரில் கண்டு அனுபவித்தோம். அங்கிருந்து நாகர்கோவில் சென்றிருந்தோம். ஆங்கு ஒரு கல்லூரியில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரை அழைத்திருந்தார்கள். நாங்கள் அங்கு சென்றவுடன் கல்லூரி நிர்வாகி இவரிடம், ‘உங்களுடைய பேச்சைக் கேட்பதற்கு நாங்கள் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறோம். உங்களுடைய பேச்சு மாணாக்கர்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் பயன்படும் என்று நினைத்துத் தங்களை அழைத்தோம். ஆனால், மாணாக்கர்களோ எதிர்ப்புத் தெரிவிக்கின்ற பாங்கில் இருக்கின்றார்கள். ஒரு வேளை கலவரத்தை உண்டு பண்ணிவிடுவார்களோ என்று அஞ்சுகின்றோம். தாங்கள் மாணக்கர்களுடைய நிலையை அறிந்து, அதற்கேற்றவாறு பேச வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றோம்.’ என்று கூறினார்.

சுவாமிஜி அதற்கு ‘அப்படியா!?’ என்று கூறிச் சிரித்துக்கொண்டார். கம்பீரமாக மேடையின் மீது நின்று ஆற்றல், அன்பு, அறிவு என்பனவற்றை விளக்கும் பாங்கில் ஒரு மணி நேரம் உணர்வோடு கூடிய அறவுரை ஆற்றினார். கடவுளைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லை. சுவாமிஜி ஆரம்பிக்கும்பொழுது மாணாக்கர், மாணாக்கியர் சிலர் மன்றத்தின் உள்ளேயும், பலர் வெளியே உள்ள மரத்தின் மேலேயும் அமர்ந்திருந்தார்கள். பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில் மரத்தின் மேலிருந்த மாணக்க மாணாக்கியர் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து மன்றத்தினுள் அமைதியாக அமர்ந்து சொற்பொழிவை மிக்க ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சொற்பொழிவு முடிந்த பிறகு நிர்வாகியும் கல்லூரி முதல்வர், ‘தங்கள் பேச்சை மாணாக்க மாணாக்கியர் ஆழ்ந்து கேட்டனர். தாங்கள் அடிக்கடி வந்து இங்குப் பேச வேண்டும்’ என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார். கல்லூரியில் உள்ளோர் எங்களிடம் 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது அவசியம் சுவாமிஜியை அழைத்து வர வேண்டும் என்னும் கருத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். இவருடைய பேச்சைக் கேட்ட மாணாக்க மாணாக்கியர் முகங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடியதைப் பார்த்தோம்.”

2. விஷமே மருந்து:

சிறுமை கண்டு பொங்குதல் பெரியோர் இயல்பு. நாரதர் கலகமும், துருவாசர் கோபமும் நன்மையே விளைவித்தன. சில வேளைகளில் விஷமே மருந்தாகப் பயன்படும். பிறரைத் திருத்தியமைக்கக் கோபத்தைப் பயன்படுத்தும்பொழுது அது அவருக்கு ஆசீர்வாதமாக அமைகிறது. ஒரு சமயம் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் நடாத்திய அந்தர்யோகத்தில் ‘சிவபுராணம்’ ஓதும்போது அன்பர் ஒருவர் இடையில் எழுந்து சென்றார். அவருடைய பெயரைக் கூறி அவரைக் கோபத்தோடு நோக்கினார். எழுந்துபோன அன்பர் அமைதியாக அமர்ந்தார். அச்செயலை உடனிருந்து பார்த்த பக்திமதி ஒருவர் இந்நிகழ்வினின்று ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொண்டார். அன்று முதல்  அந்த பக்திமதி வழிபாடு முடிகின்ற வரையில் இடையில் எழுந்து போவதில்லை. இது அவரும், எழுந்து சென்றவரும் கற்றுக் கொண்ட பாடம்.

3. நடக்கும் போ!:

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் தம்மிடம் அருள் நாட்டம் கொண்டு வந்தவர்கள் எல்லாரையும் ஆசீர்வதித்தார். அவரிடம் ஆசி பெற்று அருள்துறையில் பலர் முன்னேற்றம் அடைந்தனர்.  ஒரு சிலர் லௌகிக நோக்கத்துடன் சுவாமிஜியிடம் ஆசீர்வாதம் பெற வருவதுண்டு. காமியப் பிரார்த்தனை சுவாமிஜிக்கு சிறிதும் ஒவ்வாது என்றாலும், அப்படி ஆசி பெற வந்த அன்பர் ஒருவர், “நான் விசைத்தறி போடப் போகிறேன்; நன்றாக நடக்குமா?” என்று கேட்டபோது, “நடக்கும் போ!” என்று கோபமாகச் சொன்னார். சுவாமிஜி கோபமாகச் சொன்னாலும் நன்றாக நடந்து வருகிறது. சுவாமிஜியினுடைய கோபம் லௌகிகத்தைப் பற்றிக் கேட்காதே என்பதை உணர்த்துவதோடு மட்டுமல்லாமல், யாரிடம் எதைக் கேட்கவேண்டும் என்பதையும் புகட்டுகிறது.

4. நடக்காது போ!:

அன்பர் ஒருவர் மலாய் நாட்டு விநாயகர் கோவிலுக்கு இந்தியாவிலிருந்து தேர் செய்யும் பணியை ஏற்றுக்கொண்டு அதனைச் சிறப்பாகவும் செய்து முடித்தார். தேருக்கு உரிய பாகங்களை எல்லாம் முறையாகப் பெட்டியில் அடுக்கிக் கப்பலில் அனுப்பக் கொண்டுபோனபோது, ‘எல்லாப் பார்சல்களையும் பிரித்துப் பார்க்க வேண்டும். இல்லையேல் அனுப்ப முடியாது’ என்று சுங்க அதிகாரிகள் கூறினர். அவ்வாறு பிரித்துக் காட்டினால் தேர்ப்பாகங்கள் பழுதுபடும், உரிய காலத்திலும் மலாய் நாட்டுக்குப் போய்ச் சேராது என்று அதிகாரியிடம் எடுத்துச் சொன்னார். அதிகாரிகள் கேட்காத நிலையில் குழம்பிய மனத்துடன் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரை அணுகினார். அவர் இச்செய்தியைக் கேட்டு “ஒன்றும் நடக்காது போ” என்று கூறினார். அவ்வாறே இந்தியாவிலும், மலாய் நாட்டிலும் அவை சுங்க அதிகாரிகளால் பிரித்துப் பார்க்கப்படவில்லை. உரிய காலத்தில் தேர் மலாய் நாட்டுக்குப் போய்ச் சேர்ந்தது. நல்ல காரியமானது சுவாமிஜி சங்கற்பித்துக் கூறிய அருளாசியின்படியே இடையூறின்றி நிகழ்ந்ததை இன்றும் எண்ணி எண்ணிப் பெருமகிழ்வு எய்துவதாக அவ்வன்பர் கூறினார்.

5. ஒரு பயனும் ஏற்படாது:

சுவாமி சித்பவானந்தரிடம் பயிற்சி பெற்று வந்த துறவியர்களுள் ஒருவர் சாதனைக்காக நான் உத்திரகாசி சென்று ஆறு மாதம் இருந்துவிட்டு வருகிறேன் என்று கேட்டபொழுது, “அப்படியா! நல்லது. அவ்வாறே அங்கு சென்று சாதனை செய்துவிட்டு வா!” எனக்கூறி அனுமதி வழங்கினார்.

பிறகு பரிவ்ராஜகனாகச் சிறிது காலம் வாழ்ந்து வர விரும்புகிறேன் என்று கேட்டபொழுது, “அவ்வாழ்வினால் உனக்கு ஒரு பயனும் ஏற்பட்டுவிடாது. போனால் புரிந்துகொள்வாய். போய்விட்டுவா!” என்று என் விருப்பத்தை ஆமோதித்தார். அவர் கூறியது முற்றிலும் மெய்யானது என்பது என் பரிவ்ராஜக வாழ்க்கையில் எனக்கு அனுபவம் ஆயிற்று.

6. ‘பொருள் பற்று’ ஒழிய உபாயம்:

சுவாமிஜி நேர்மையான முறையில் பொருளைச் சம்பாதிக்கவும் அவ்வாறே பொதுப்பணிக்கென்று அப்பொருளைச் செலவழிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அன்பர்களுக்கு எடுத்துரைப்பார். ஒரு சமயம் தம்மிடம் பொருளைப் பற்றிய பிரச்சனை ஒன்று வந்தபோது அதனைத் தீர்த்து வைத்த பாங்கு கவனிக்கத் தக்கது. தபோவனத்தில் பயின்ற பழைய மாணவர் ஒருவர் இரும்புக்கடை வைத்திருந்தார். திடீரென்று இரும்பு விலை ஏறியதால் கொள்ளை லாபம் வைத்து விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இரும்பை முன்னைய விலைக்கு விற்றால் அதை வாங்கியவர் பெருத்த லாபத்தை அடைவார். இந்நிலையை எப்படி சமாளிப்பது என ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரைக் கேட்டார். சுவாமிஜி, “ஒருவனுக்கே லாபம் போகக்கூடாது. தற்பொழுது கூடியுள்ள விலைக்கே இரும்பை விற்றுவிடு. வருகின்ற லாபத்தில் உனக்கு உரியதை எடுத்துக்கொள். அதற்குமேல் உள்ள லாபத்தைப் பொதுப்பணியை நன்முறையில் ஆற்றுகின்ற பல நிறுவனங்களுக்குப் பிரித்து நன்கொடையாகக் கொடுத்துவிடு. அந்த லாபம் பலருக்கும் பயன்பட்டால் அது ‘ஈஸ்வர ஆராதனை’ ஆகும். வாணிகத்தில் இது போன்ற எதிர்பாராத வாய்ப்பு அமையும் காலத்தில் உனக்குப் பொருள் பற்று வாராதிருக்க இந்த முறையைக் கையாண்டுவா” என்று அறிவுறுத்தினார்.

7. உன்னை நீ திருத்திக்கொள்:

  • தாமரை இலை நீரில் இருக்கும். ஆனால் அதில் நீர் ஒட்டாது. அது போன்று நீ உலகத்தில் இருக்கலாம். உலகப் பற்று உன் உள்ளத்தில் இருக்கக்கூடாது.

-ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

  • நாய் வால் போன்றது உலகம். அதனைத் திருத்த உன்னால் இயலாது. உன்னை நீ திருத்திக்கொள், நீ திருந்துமளவு உலகுக்குப் பயன்படுவாய்.

-சுவாமி விவேகானந்தர்.

இவ்விரண்டு கோட்பாடுகளையும் நடைமுறைக்குக் கொண்டுவரும் சந்தர்ப்பம் ஒருவருக்கு ஏற்பட்டது. தபோவன பழைய மாணவர் ஒருவர் கோவில் நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். கோவில்களில் நடக்கும் ஊழல்களைப் பார்த்து அவர் மனம் நொந்து கோவில் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தும் வழி யாது என்று ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரிடம் கேட்டார். அவருக்கு சுவாமிஜி கூறியது: “கடவுளுக்கு பயந்து நடக்கின்றவர்கள் இப்பொழுது இல்லை. மக்களிடையே இன்று சுயநலம் மிகுந்து லௌகிக மனப்பான்மை அதிகரித்திருக்கிறது. ஆகையால் இன்றைக்குப் பொதுச் சொத்தைத் தமக்கு உடைமையாக்கிக் கொள்கின்றவர்தாம் பெரும்பாலோர் ஆவர். அவர்கள் மீது நீ நடவடிக்கை எடுக்க இயலாது. அப்படி எடுப்பாயானால் சில சமயம் உனக்கே ஆபத்தாக வந்து முடியும். நீ இப்பொழுது செய்ய வேண்டியது என்னவென்றால் உன் அளவில் நீ தூய்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்வதே ஆகும். உன் நடத்தையைப் பார்ப்பவர் தாம் செய்யும் தவறுகளைக் குறைத்துக் கொள்வர். இதுதான் நீ தற்காலச் சூழ்நிலையில் கோயிலுக்குச் செய்யும் நன்மையாகும்.”

8. சொப்பன தீக்ஷை:

ஆத்ம சாதகர்கள் சிலர் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரிடமிருந்து மந்திரதீஷை பெற வேண்டும் என்று விரும்பினார்கள். இறைவனுடைய நாமங்கள் யாவும் உச்சரிக்கும்பொழுது மனம் அவற்றில் ஈடுபட்டிருந்தது என்றாலும் இஷ்ட மந்திரம் எது என்பதை அறிந்துகொள்ள முடியாதவராக ஒரு அம்மையார் இருந்தார். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அந்த அம்மையார் கனவில் தோன்றி இஷ்ட மந்திரம் ‘சக்தி நாமம்’ என்பதைக் காட்டித் தந்ததாக அவர் கூறினார்.

9. ஆத்மாவை பட்டினி போடக்கூடாது:

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் தம்மை நாடி வந்தவர்களுக்கு வேண்டியதை வேண்டியவாறு வழங்கி வந்தார். அருள் நாட்டம் கொண்டிருந்த அன்பர் ஒருவர் தமக்கு சுவாமிஜி அருள்பாலித்ததைக் கூறியுள்ளார். “வித்யாவனப் பள்ளியில் நான் 20 ஆண்டுகள் மாணவர்களுக்கு தமிழ் மொழி பயிற்றும் பணியைச் செய்து வந்தேன். சுவாமிஜி இயற்றியுள்ள நூல்கள் பலவற்றுக்கு அவரோடு கலந்து உரையாடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அது அறிவுத்துறையில் முன்னேற்றம் அடைவதற்குத் துணையாக இருந்ததை நான் உணர்கிறேன். ஆனால் பணியில் இருந்தபொழுது என்னை அறியாது என் உள்ளத்தில் ஆன்மீக உணர்ச்சி அரும்பிக் கொண்டிருந்தது. ஓய்வுபெறும் காலம் வரவர அது வெளிப்பட ஆரம்பித்தது. ஓய்வு பெறும் ஆண்டில் என் உள்ளத்தில் வளர்ந்து வந்த ஆன்மீக உணர்வானது சுவாமிஜியிடம் உபதேசம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்னும் எழுச்சியைத் தூண்டியது. நான் சுவாமிஜியை அணுகி, ‘நான் தங்களிடம் மந்திரோபதேசம் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ எனக் கூறினேன். அதற்கு சுவாமிஜி, “ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துத் துறவியாகிய நான் யாருக்கும் தீட்சை செய்வதில்லை. ‘அவரவர் ஆத்மாவே அவரவர்க்கு ஆத்ம குரு’ என்றாலும் உங்களுக்கு விதிவிலக்கு உண்டு. இப்போதே அமருங்கள்” என்று கூறி மந்திரோபதேசம் செய்தார். என் வேண்டுகோளுக்கிணங்க நான் தந்த ஜபமாலையைச் சிவராத்திரியன்று முதலில் தம் கழுத்தில் அணிந்து, பிறகு இரவு 12 மணி வரையில் தம் கையால் ஜபம் செய்து என் கழுத்தில் தம் கையாலேயே அணிவித்தார். அடுத்த நாள் என்னை அழைத்து ஜபம் செய்ய வேண்டிய முறையைக் கூறி, “இன்று முதல் நீங்கள் வானப்பிரஸ்தர். ஒரு நாள் ஜபம் செய்யாது போனாலும் ஆத்மாவைப் பட்டினி போட்டதாகும். ஆகையால் தினமும் ஜபம் செய்து வாருங்கள்” என்று ஆசீர்வதித்தார்.

நவீன உலகம் எதை விரும்புகிறது, எதைப் பாராட்டுகிறது என்பதற்கு முக்கியத்துவம் தராமல் நவீன உலகுக்கு எது தேவையோ அதையே வழங்கினார். இங்ஙனம் வாழ்வு முழுவதும் விளம்பரத்திற்கு இடந்தராது நடந்துகொண்ட பெருமை ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தருக்கு உரியது.

சிங்கத்தின் பராக்கிரமத்தை மற்றொரு சிங்கம்தான் அறிந்துகொள்ள முடியும். அது போன்று சான்றோர் பெருமையை சான்றோர்தான் அறிந்து கொள்ள முடியும். ஏனையோர் அறிந்துகொள்ள முடியாது. சான்றோர் கூட்டத்தில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் ஒருவராவார். ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தருடைய பெருமை சிறிய அளவு மேலே தரப்பட்டுள்ளன.

(இன்று பெரிய சுவாமிஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு பதிவேற்றப்பட்டுள்ள இந்த கட்டுரை சுவாமி நித்தியானந்தர் அவர்கள் இயற்றிய ‘பராய்த்துறை மேவிய பரமபுருஷர்’ புத்தகத்திலிருந்து எடுத்து தொகுக்கப்பட்ட செய்திகளாகும். 2015ஆம் ஆண்டு நவம்பர் 16ல் பதிவேற்றப்பட்ட கட்டுரையை வாசிக்க:

English Article: https://swamichidbhavananda.wordpress.com/2015/11/16/life-history-of-swami-chidbhavananda/

Tamil Article: https://swamichidbhavananda.wordpress.com/2015/11/16/swamiji-commemoration-special-article-2015/ )

Advertisements

Swamiji Commemoration Special Article-2015

1998ஆம் ஆண்டு ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் பெரியோர் பலர் சொற்பொழிவாற்றினர். பெரிய சுவாமிஜியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்ற அவர்கள், பல்வேறு நிகழ்வுகளில் சுவாமிஜியுடன் பழகிய பழைய ஞாபகங்களை, பேசிய உரையாடல்களை அப்போது பகிர்ந்துகொண்டனர். அவைகளை வாசிப்பவர் யாராகிலும், நிச்சமயமாக பெரிய சுவாமிஜி மீது நல்ல அபிமானம் கொள்வர் என்பதில் ஐயமில்லை. மேடையில் பேசியதன் சுருக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.

Swamiji 100
சுவாமிஜியின் நூற்றாண்டு விழா சமயத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம்.

1. யதீஸ்வரி சிவப்ரியா அம்பா அவர்கள் (ஸ்ரீ சாரதா சமிதி, மதுரை.):

சுத்தானந்த பாரதியார் நம் சுவாமி சித்பவானந்தரிடம் கேட்டார்,
“தங்கள் திட்டங்களை, செயல்களை ‘கல்கி’, ‘விகடனில்’ போடலாமே…” என்று.

“கல்கியைத் தெரியும். என் சம்மதம் இருந்தால்தான் போடுவார்கள்.”

“உங்கள் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும்.” என்றார்.

“நான் தினமும் கொண்டாடுகிறேன்” என்றார்கள் சுவாமி சித்பவானந்தர்.

ஞானி, துறவி திருமேனி உள்ளபோது பிறந்தநாள் கொண்டாட வேண்டியதில்லை. அதன்பின் கொண்டாடலாம். சுவாமி சித்பவானந்தரைப் பற்றிப் பேசாத நாளெல்லாம் நமக்குப் பிறவா நாளாகும். நாமும் நம் பிறந்த நாளைச் சுவாமி சித்பவானந்தரைப் போல் தினமும் கொண்டாட வேண்டும். சுவாமி சித்பவானந்தர் நம்மிடம் இருக்கிறார். எங்கும் நிறைந்த பொருள் திருப்பராய்த்துறையில் இருக்கிறது. சுவாமி சித்பவானந்தர் அக்ஞானத்தை அகற்றி ஞான தீபத்தை ஏற்றி வைத்திருக்கிறார்.


2. ஸ்ரீமத் சுவாமி போதானந்த அவர்கள் (பொருளாளர்):

பெற்றோர் வைத்த பெயர் சின்னு. குருநாதர் வைத்த பெயர் சித்பவானந்தர். இரண்டிலும் முதல் எழுத்து ‘சி’. ஆங்கிலத்தில் ‘சி’ என்றால் ‘பார்’ என்பது பொருள். சுவாமிகளுடைய வாழ்க்கையைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்பது அவருடைய பெயருக்கு உள்ள விளக்கமாகும்.


3. ஸ்ரீமத் சுவாமி திவ்யானந்த அவர்கள்:

வாழ்க்கையின் குறி, நெறி ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கொண்டு சென்றார்கள். சுவாமி சித்பவானந்தரின் சிறப்பு அவரிடம் சேர்பவர்கள் ஒருபடி மேலே செல்வர்.


4. திரு ராமமூர்த்தி அவர்கள் (பழைய மாணவர் சங்க செயலர்):

உபநிஷதங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை. இப்போது ஆராய்ச்சி செய்தாலும் புதிய ஊற்று ஊறுகிறது. சுவாமி சித்பவானந்தர் அவர்கள் உபநிஷத் அடிப்படையில் இன்றைய விஞ்ஞான உண்மைகளைக் கலந்து சொன்னார்கள். அதனால்தான் எல்லோரையும் ஈர்த்தது. முன்பு வைத்தியர் பொடியை வெற்றிலையில் வைத்துத் தேன் கலந்து சாப்பிடுங்கள் என்பார். இப்போது மாத்திரை கூடு வந்துவிட்டதுபோல் விஞ்ஞான முன்னேற்றம் தத்துவத்திற்கு வந்தாக வேண்டும். நம் சுவாமி சித்பவானந்தர் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள். பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியன்.


5. டாக்டர். வி. கனகராஜ் அவர்கள் (தபோவன மகாசபை உறுப்பினர்):

பத்து வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தர் அவர்களிடம் பழகி இருக்கிறேன். தேங்காய் லட்டு கொடுப்பார்கள். அதே பழக்கம் கடைசி நாள் வரை இருந்தது. எந்தக் காரியத்திலும் சுவாமி சித்பவானந்தர் ஆலோசனையின்படிதான் நடப்போம்.

காலையில் வீட்டில் எல்லோரும் சேர்ந்து கூட்டு வழிபாடு செய்ய வேண்டும் என்பார்கள். மதியம் ஒரு மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். உன் உடலைக் கவனிக்க வேண்டும் என்பார்கள்.

என் குழந்தையைக் கூட்டிச் சென்றபோது விளையாடிக்கொண்டே படிக்க வேண்டும்; கன்றுக்குட்டியை வண்டியில் பூட்டுவதுபோல் அதிகச் சுமை கூடாது என்றார்கள்.

ஆப்ரேஷன் செய்த அன்று தாங்கக்கூடிய வலிதான் உள்ளது. அதனால் ‘தூக்க மருந்து வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்கள். எனக்கும், என் அண்ணனுக்கும் இரவெல்லாம் கதைகள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

உடலுக்கு நோய் வந்தபோது சென்னையிலிருந்து வந்த டாக்டரை அழைத்து வந்தேன். சாப்பிட்டுவிட்டுப் போகச் சொன்னார்கள். சாப்பிட்டு விட்டு வந்தபோது கீழே வந்து உட்கார்ந்திருந்தார்கள். “என்னிடம் சொல்வதற்காக மேலே மாடி அறைக்கு வருவீர்கள். அதனால்தான் கீழே வந்துவிட்டேன்” என்றார்கள். கடைசியில் உடல் நலம் குறைந்தபோது சிகிச்சை வேண்டாம் என்றார்கள். வற்புறுத்திக் கேட்டபோது “உடலிலிருந்து உயிரைப் பிரித்துக்கொள்கிறேன். உடலுக்கு வேண்டியதைச் செய்துகொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார்கள். நம் சுவாமி சித்பவானந்தர் தூய்மை, எளிமை, தொண்டு மூன்றும் உருவாக அமைந்தவர்.


6. திருமதி சி.ஆர். சகுந்தலா அவர்கள் (முன்னாள் முதல்வர், ஸ்ரீ சாரதா கல்லூரி, சேலம்.):

சுவாமி சித்பவானந்தர் அவர்கள் நமக்கு வைத்துச் சென்றவை அந்தர்யோகமும், ஆன்மிக நூல்களுமாகும். திருவாசகத்திற்குச் சுவாமி சித்பவானந்தரின் விளக்கம் வேதாந்த-சித்தாந்த இணைப்பாகும்.


7. ஸ்ரீமத் சுவாமி சிதானந்த அவர்கள் (தலைவர், தெய்வீக வாழ்க்கைச் சங்கம், ரிஷிகேஷ்.):

சுவாமி சித்பவானந்தர் இருந்தபோது நம்மை எப்படி உயர்த்தினார்களோ அப்படியே இப்போதும் நாம் சுவாமி சித்பவானந்தரை ஸ்மரணம் செய்தால் உயர்த்துவார்கள். வாழ்க்கை, தத்துவ உபதேசம், தபோவனம் ஆகிய மூன்றையும் சுவாமி சித்பவானந்தர் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். என்னுடைய குருநாத சொல்வார், “என்னை வணங்குவதும் நல்லதுதான். ஆனால் நான் சொன்னபடி நடப்பதுதான் சிறப்பு.” சுவாமி சித்பவானந்தரின் வாழ்க்கை வரலாறு தமிழில் வந்திருக்கிறது. அதை ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

இந்த விழாவானது முதலில் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா. அடுத்து இரண்டாவது நூற்றாண்டு விழாவின் பிராரம்பம்.


8. ஸ்ரீலஸ்ரீ சாது சண்முக அடிகளார் அவர்கள் (தலைவர், சாதுசாமி மடம், பழனி.):

1964அம் ஆண்டு சித்திரச்சாவடி ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த ஆச்ரமத்திற்கு அடிக்கடி செல்வேன். அப்போது எனக்குச் சுமார் 12 வயது இருக்கலாம். ஆச்ரமத்திற்குப் பக்கத்தில் வீடு உள்ளது. ஆச்ரமம் பலருக்கும் பயன்படக்கூடியது. ஆங்கு இலவசமாகச் சாப்பிடக்கூடாது என்று வீட்டிலிருந்து கட்டுச்சோறு கட்டிக்கொடுத்துவிடுவார்கள். அங்கு ஸத்ஸங்கத்தில் கலந்துகொண்டு ஆற்றங்கரையில் வைத்துச் சாப்பிடுவேன். சுவாமி சித்பவானந்தர் அவர்கள், ‘எதைச் செய்தாலும் ஒழுங்காகச் செய்’ என்பார்கள். சுவாமி சித்பவானந்தரின் எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றாக இருக்கும். யாரையும் உயர்வாகவோ, தாழ்வாகவோ பேசமாட்டார்கள்.

சாது சாமி மடம் எந்த ஆதாரமும் இல்லாமல் தினமும் வடை, பாயசத்துடன் அன்னதானம் நடத்தி வருகிறது. இங்கு எல்லாத் துறவிகளுக்கும் வேலை இருக்கும். ஆயிரம் கோயில்கள் கட்டி கும்பாபிஷேகம் செய்வதைவிட ஒரு துறவிக்கு உணவளிப்பது புண்ணியம்.

தலைவர்கள் அதிகம்; வழிகாட்டிகள் குறைவு. நம் சுவாமி சித்பவானந்தர் வழிகாட்டி.


9. டாக்டர் கே. சுப்ரமண்யம் அவர்கள் (முதல்வர், விவேகானந்த கல்லூரி, திருவேடகம்.):

பட்டினத்தார், சித்தார்த்தன் இவர்களுக்குப் போக, பாக்கியங்களுக்குக் குறைவில்லை. மோக்ஷத்திற்காகத் துறவை ஏற்றனர். அதனால் இவர்கள் துறவு சிறப்பு. புத்தரிடம் சித்துக்கள் கிடையாது. குழந்தையை இழந்த மாதுவுக்கு ஞானம் புகட்டினார். ரமணர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் இவர்களுக்கு மக்களை மயக்குகிற சித்துக்கள் இல்லை.

திருவேடகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. எழுதியர் ‘குழந்தை குருடு, செவிடு; விபூதி கொடுங்கள்’ என்று எழுதியிருந்தார். ‘இந்த சுவாமியிடம் சித்துக்கள் கிடையாது என்று எழுதிப்போடு’ என்று சொன்னார்கள். என் மகனுக்கு மூன்று வயதாயிருந்தபோது காய்ச்சல் வந்து மூன்று நாட்களாக விடவில்லை. விபூதி பூசுகிறீர்களா என்று கேட்டேன். “என்னிடம் இப்படி ஒரு வேண்டுகோள் விடுக்கலாமா?” என்றார்கள். நான் வேண்ட, விபூதி பூசினார்கள். ஜுரம் குறைந்தது. “சுவாமி விபூதி பூசியதால் ஜுரம் குறைந்தது” என்றேன். “திரும்பவும் தப்பு பண்ணுகிறீர்கள். எனக்குச் சித்துக்கள் கிடையாது. நான் விபூதி பூசாவிட்டாலும் ஜுரம் குறைந்திருக்கும்” என்றார்கள்.


10. யதீஸ்வரி சாவித்ரிப்ரியா அம்பா அவர்கள் (சிவசக்தி ஆனந்த ஆச்ரமம், சாண்டியகோ, யு.எஸ்.ஏ):

1973ஆம் ஆண்டு சுவாமி சித்பவானந்தரைச் சந்தித்தேன். 1975ஆம் ஆண்டு சந்நியாச தீக்ஷை கொடுத்தார்கள். நான் உங்களில் ஒருத்தி. என் கண்ணையும், தோலையும் பார்த்து வேறு என்று எண்ணிவிடாதீர்கள். சுவாமிகள் புகட்டியது ப்ரக்ஞானம் ப்ரஹ்மம். இப்போது விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து அதைத்தான் கூறுகிறார்கள்.


11. திருமதி கே. நாகமணி அவர்கள், விருதுநகர்:

1967ஆம் ஆண்டிலிருந்து நானும் என் கணவரும் அந்தர்யோகங்களுக்குச் சென்று பயன் பெற்றோம். சுவாமி சித்பவானந்தர் எது சொன்னாலும் அது சரியாக இருக்கும். அவைகள் ஆப்த வாக்கியங்கள். ஆராய்ச்சி பண்ண வேண்டியதில்லை. அப்படியே கடைப்பிடிக்கலாம் என்பது எங்களுடைய திடநம்பிக்கை.

“சாதனையின் ஆரம்ப காலத்தில் வேகமாக முன்னேறுவது போல் இருக்கிறது. பிறகு அப்படி இல்லையே! அதற்குக் காரணம் என்ன சுவாமி?” என்று கேட்டேன்.

சுவாமி சித்பவானந்தர், “சிற்பம் செதுக்கும்போது முதலில் கல்லிலிருந்து உருவம் சீக்கிரம் வந்துவிடும். பின் கண், மூக்கு போன்ற உறுப்புகள் செதுக்கும்போது அதிகநேரம் ஆகிறது. மான்குட்டி பிறந்து ஈரம் உலர்ந்தவுடன் சுமார் இரண்டு மணி நேரத்தில் தாய்க்கு நிகராக ஓடுகிறது. மனிதக் குழந்தை பிறந்து மேஜராவதர்கு 18 வருடங்கள் ஆகின்றன. அதற்குக் காரணம் மனம் பண்பாடு அடைவதால் அதிக நாட்கள் எடுத்துக்கொள்கிறது. பூமி சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. வியாழன் சூரியனைச் சுற்ற 60 வருடங்கள் ஆகின்றன. சம்பந்தர் 3 வயதில் ஞானம் பெற்றார். எத்தனையோ வயதாகியும் ஞானம் பெறாதவர்கள் உண்டு. ஆனால் எல்லாரும் என்றாவது ஒரு நாள் பல ஜன்மங்களுக்குப் பிறகாவது ஞானம் பெறுவர்.

“ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேர் சிஷ்யர்கள் எவ்வளவு சாதனைகள் செய்தார்கள். வராஹ நகர் மடத்தில் உணவு, உறக்கத்தை மறந்து சாதனைகள் செய்தார்கள். அது போல நம்மால் செய்ய முடியவில்லையே…” என்று ஒருதடவை சுவாமி சித்பவானந்தரிடம் கேட்டேன்.

“ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேர் சிஷ்யர்கள் அருள்நாட்டத்தில், சாதனையில் பெரிய பணக்காரர்கள். நாம் சிறிய பணக்காரர்கள். ஆனால் பணக்காரர்கள் இல்லை என்று சொல்ல முடியுமா? நமக்கு வேண்டியது பிரார்த்தனையும் தீவிர முயற்சியுமாகும்” என்று பதில் சொன்னார்கள்.

சுவாமி ஒரு தீர்க்கதரிசி. நாம் தினசரி படித்துப் பயன்பெரும் தினசி தியானத்தில் உள்ள தலைப்புகள் இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமாக உள்ளன.


12. திரு அர்ஜுனராஜா அவர்கள்:

நம்மை நாம் உயர்த்திக்கொள்ள சுவாமி சித்பவானந்தரின் நூற்றாண்டு விழா பயன்பட வேண்டும்.


13. ஸ்ரீமத் சுவாமி ஸதானந்த அவர்கள் (காரியதரிசி, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை.):

இன்று ஹோமம் நடந்தது. ஸ்வாஹா சொல்லி அர்ப்பணம் பண்ணியதால் உள்ளம் தூய்மையாகியது. தூய மனத்தில் சங்கல்பம் செய்ய வேண்டும்; கேட்ட கருத்துக்களைக் கடைபிடிப்பேன் என்று ராமானுஜர் போல் விடாமுயற்சி வேண்டும்.


14. ஸ்ரீமத் சுவாமி பரமானந்தர் அவர்கள் (ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை.):

சுவாமி சித்பவானந்தர், “விவேகானந்த விவரணம்” என்ற நூலை எழுதினார்கள். அதேபோல் “சுவாமி சித்பவானந்தர் விவரணம்” என்ற புத்தகம் வெளியிடலாம்.


15. யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் (முதல்வர், ஸ்ரீ சாரதா கல்லூரி, திருநெல்வேலி.):

சேலம் ஸ்ரீ சாரதா கல்லூரி ஆரம்பித்த போது ஏற்பட்ட சில கஷ்டங்களைப் பற்றி சுவாமி சித்பவானந்தரும், பெரிய அம்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். திருநெல்வேலியில் அவ்வளவு கஷ்டம் இராது என்றார்கள் சுவாமி சித்பவானந்தர். அதுபோல் திருநெல்வேலியில் கஷ்டமான பகுதிகளை சுவாமிகள் பார்த்துகொள்கிறார்கள். அம்பாக்களும், சகோதரிகளும் பள்ளி, கல்லூர் வேலைகளைப் பார்த்துக் கொள்கிறோம்.

திருநெல்வேலியில் காந்திமதியம்மன் சிலை வைக்கும்போது கோயிலிலுள்ள அம்பாக்களுக்கு மேல் சற்றுப் பெரிதாக இருக்க வேண்டும் என்றார்கள் சுவாமி சித்பவானந்தர். “தேவியின் வடிவம் நன்கு அமைய ஆசீர்வாதம் செய்யுங்கள் சுவாமி” என்றார் சிற்பி. “ஆசீர்வாதமா? தியானமே செய்து கொண்டிருக்கிறேன்” என்றார் சுவாமி சித்பவானந்தர்.


16. திரு எஸ். ஈஸ்வரன் அவர்கள் (தலைமை ஆசிரியர், ஸ்ரீ விவேகானந்த வித்யாவன குருகுல உயர்நிலைப்பள்ளி, திருப்பராய்த்துறை.):

ருதம் என்றால் நேர்கோடு. சுவாமி சித்பவானந்தரின் செயல்கள் நேர்மையானவை. எந்தச் செயலும் குறித்த நேரத்தில் செய்வார்.


17. திருமதி ஏ.வி.பி. லக்ஷ்மி அம்மாள் அவர்கள் (அங்கேரிபாளையம், திருப்பூர்.):

குருநாதரைத் தேடிச் செல்ல வேண்டாம். சாதனை செய்தாலே போதும் என்றார்கள் சுவாமி சித்பவானந்தர்.


18. திரு வி. சண்முகநாதன் அவர்கள், சென்னை.:

சமூக நல உணர்வோடு அன்னதானம், அறிவுதானம், ஆன்மதானம் செய்தவர் நம் சுவாமி சித்பவானந்தர் அவர்கள்.


19. திரு ஏ.கே.டி. தர்மராஜா அவர்கள் (தபோவன மஹாசபை உறுப்பினர்.):

1945லிருந்து என் பெற்றோர் சுவாமி சித்பவானந்தருடன் ஈடுபாடு கொண்டிருந்தனர். ‘எங்கள் மகன் தங்கள் பார்வையில் வளர் வேண்டும்’ என்றனர். பள்ளிக்குப் போகவில்லை. சுவாமி சித்பவானந்தருடனேயே இருப்பேன். அவர் ஊருக்குப் போனால் நானும் உடன் போவேன். அடி வாங்குவேன். மூன்று மணிநேரத்தில் அதை மறந்து சுவாமி சித்பவானந்தருடன் செல்வேன். சுவாமி சித்பவானந்தர் குடும்பத்தாருடன் சுவாமி சித்பவானந்தர் அனுமதியுடன் பழகினேன். உடல் நலமில்லாமல் மூன்று முறை வைத்தியத்திற்குச் சென்னை வந்தபோது சுவாமி சித்பவானந்தர் எங்கள் வீட்டில் தங்கியிருந்ததைப் பெரிய பாக்கியமாக எண்ணுகிறோம்.


20. யதீஸ்வரி விநாயகப்ரியா அம்பா அவர்கள் (ஸ்ரீ சாரதா ஸமிதி, சேலம்.):

1836ல் ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜயந்தி, 1853ல் ஸ்ரீ சாரதா தேவியார் ஜயந்தி, 1863-ல் சுவாமி விவேகானந்தரின் ஜயந்தி, 1898-ல் நம் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் தோன்றினார்கள். இவர்கள், 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய மஹான்கள்.


21. திரு எஸ்.வி. அழகப்பன் அவர்கள் தலைமையுரை (தபோவன மஹாசபை உறுப்பினர்.):

சுவாமி சித்பவானந்தரின் அருளால் நாற்பதுக்கும் மேற்பட்ட ஊர்களில் அந்தர்யோக முறையில் சுவாமி சித்பவானந்தரின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடந்துள்ளது. இது சுவாமி சித்பவானந்தருக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலி.

சுவாமி சித்பவானந்தர் நூற்றாண்டு விழா துவக்க விழாவின்போது பொள்ளாச்சியில் அன்பர்களின் பைகள் வரத் தாமதமாகிவிட்டது. “தூங்குங்கள், பைகள் வந்துவிடும்” என்றோம். “நாங்கள் தூங்குவதற்கு வரவில்லை” என்றனர் தாய்மார்கள். சுருளியில் நடந்த நூற்றாண்டு விழாவில் ஓர் அம்மா பேசுகிறேன் என்று வந்து பேச முடியாமல் கண்ணீர் வடித்தார்கள். திருப்பராய்த்துறை தாருகாவனேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகமும் இப்போது நடந்தது சிறப்பாகும்.


22. திரு எஸ். கோபால்ரத்னம் அவர்கள் (பொறியாளர், திருச்சி.):

சுவாமி சித்பவானந்தர் நினைவு மண்டபத்திற்கு வடிவமைத்துக் கொடுக்கும் பேறு பெற்றேன்.

ஆர்.எஸ்.எஸ்-க்காகத் திருச்சியில் நான்கு லட்ச ரூபாய் கடன் வாங்கி ஒரு கட்டிடம் வாங்க நினைத்தோம். சுவாமி சித்பவானந்தரிடம் கேட்டோம். “சேவை செய்வீர்களா? கடனைக் கட்டுவீர்களா? சேவை செய்யுங்கள். மற்றெல்லாம் தானே வரும். நான் நான்கு அணா மூலதனத்துடன்தான் வந்தேன்” என்றார்கள்.

புத்தாநத்தத்தில் ஊர்வலம் போகப் போலீச் தடை விதித்தது. என்ன செய்வது என்று சுவாமி சித்பவானதரிடம் கேட்டோம். “ஐம்பது பேர் போனால் அடித்து விரட்டுவார்கள். ஐம்பதாயிரம் பேர் போனால் கும்பிட்டு வரவேற்பார்கள்” என்றார் சுவாமி சித்பவானந்தர் அவர்கள்.


23. திரு பி. சிதம்பரம் அவர்கள் (தபோவன மஹாசபை உறுப்பினர்.):

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வழிபாட்டிற்கு வருவோம். ஒரு மாதம் வராவிட்டால் அந்த மாதம் இரண்டு தடவைகள் வரவேண்டும் என்பார்கள் சுவாமி சித்பவானந்தர். சுவாமி சித்பவானந்தரின் நூற்றாண்டு விழா நேற்றோடு பூர்த்தியாகிவிட்டது. இன்று 101வது ஆண்டு ஆரம்பம்.


24. திரு வேங்கடபதி அவர்கள், கோத்தனூர். (தபோவன பழைய மாணவர்.):

1947-ல் எட்டாவது வகுப்பில் சேர்ந்தேன். ஒழுக்கம், பண்பு, கல்வி என்னிடம் குறைவு. நம் தபோவனம் உருப்படி அல்லாதவர்களை உருப்படியாக்கி வெளியே அனுப்புகிறது. டைனிங் ஹாலில் பேசித் தலையில் தட்டை வைத்துக்கொண்டு நின்றிருக்கிறேன். பெஞ்ச் அடி வாங்கியிருக்கிறேன். ஒரு தடவை காலில் கொப்புளம் வந்துவிட்டது. சுவாமி சித்பவானந்தர் அவர்களே மருந்து வைத்துக் கட்டினார்கள்.

செப்டிக் டாங்க் நிறைந்துவிட்டது. வாளியால் மொண்டு வெளியில் ஊற்றினோம். வாளியில் அள்ள முடியாத அளவு வந்தவுடன் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் உள்ளே இறங்கினார்கள். நானும் இறங்கி மொண்டு கொடுத்தேன்.

ஒரு தடவை ரயிலில் ரிசர்வ் செய்து மாணவர்களைப் பழனிக்கு அழைத்துச் சென்றார்கள். அந்தப் பெட்டியில் ஒரு பெரியவர் ஏற வந்தார். ‘இது ரிசர்வ் செய்த பெட்டி, ஏறக்கூடாது’ என்றார்கள். ‘நீங்கள் யாரய்யா?’ என்றார் அந்தப் பெரியவர். ‘நான் மனிதன்’ என்றார் சுவாமி சித்பவானந்தர்.


25. ஸ்ரீமத் சுவாமி சங்கரானந்த அவர்கள்:

சுவாமி சித்பவானந்தரின் நூற்றாண்டு விழா நம் நாட்டில் மட்டுமன்று வெளி நாட்டிலும் கொண்டாடப்படுகிறது. சுவாமி ஓங்காரனந்தர் அவர்கள் ஹாங்காங் சென்றபோது சுவாமி சித்பவானந்தர் நூற்றாண்டு விழாவிற்காக நான் போக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சுவாமி சித்பவானந்தரின் நூற்றாண்டு விழாவை நாமும் கொண்டாடுவோமே என்று அங்கு அன்பர்கள் கேட்டிருக்கிறார்கள். ஓங்காரனந்த சுவாமிகள் சம்மதித்துவிட்டார். அவர்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறார்கள். ஆனால் சுவாமி ஓங்காரனந்தரிடம் படம் இல்லை. என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டிருந்தபோது ரமணருடைய புத்தகம் ஒன்றைப் படிக்க எடுத்தபோது அதில் சுவாமி சித்பவானந்தரின் படம் ஒன்று சிறியதாக இருந்திருக்கிறது. அதை அங்குள்ள அன்பர்களிடம் கொடுக்க அவர்கள் அப்படத்தைப் பெரியதாக்கி விழாவையும் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் சுவாமி சித்பவானந்தரின் நூற்றாண்டு விழாவை நடத்த முதலில் பணம் சரியாக வசூலாகவில்லை. அதை ஏற்பாடு செய்தவர் என்னிடம் வந்து என்ன செய்வது சுவாமி என்றார். சுவாமி சித்பவானந்தர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு வேலைகளைப் பாருங்கள் என்றேன். பின் பணமும் வந்து விழாவும் சிறப்பாக நடந்தது.


26. ஸ்ரீமத் சுவாமி நித்தியானந்தர் அவர்களின் நிறைவு உரை:

நம் மதம் பரந்த மதம். கடலில் பல நதிகள் கலக்கின்றன. நதிகளில் பல உபநதிகள் கலக்கின்றன. கடல் – பரப்ரஹ்மம், நதிகள் – ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர், உபநதி – சுவாமி சித்பவானந்தர். ஓடை – நாம் எல்லாரும். சுவாமி சித்பவானந்தரின் விழாக் கொண்டாடுவது பரப்ரஹ்மத்திற்குக் கொண்டாடும் விழா. ஸ்ரீ ராமகிருஷ்ணர், ஸ்ரீ சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர், சுவாமி சித்பவானந்தர் எல்லாரும் பரப்ரஹ்மம்.

மூன்று நாட்கள் விழா ஆனந்தமாக இருந்தது. இந்த ஆனந்தம் வீட்டிலும் வர வேண்டும். வீட்டில் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு வேளையாவது பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு வேளை சேர்ந்து உண்ண வேண்டும். இங்குபோல் காலையிலும், மாலையிலும் வழிபாடு செய்ய வேண்டும். இதெல்லாம் என்னால் செய்ய முடியுமா? இத்தனை பேரை என்னால் வழி நடத்த முடியுமா? என்று எண்ண வேண்டாம். என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். இல்லறத்தாரும் ஆச்ரமவாசிகளாக வேண்டும். ஆச்ரம வாழ்க்கை என்றால் நல்லொழுக்கம் நிறைந்த வாழ்க்கை என்று பொருள். ஒவ்வொரு ஊரிலும் நான்கு குடும்பங்கள் ஆச்ரம வாழ்க்கை வாழ்ந்தால் ஊர் சிறக்கும். நான்கு ஊர்கள் இத்தகைய வாழ்க்கை வாழ்ந்தால் நாடே சிறக்கும். ஸ்ரீ ராமகிருஷ்ணர் உங்களிடம் இருக்கிறார். அன்னையார் உங்களிடம் இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் உங்களிடம் இருக்கிறார். நம் சுவாமி சித்பவானந்தர் உங்களிடம் இருக்கிறார். அவர்கள் எல்லாரும் உங்களுக்கு உதவுவார்கள்.

उपद्रष्टानुमन्ता च भर्ता भोक्ता महेश्वरः ।
परमात्मेति चाप्यक्तो देहेऽस्मिन्पुरुषः परः ॥

உபத்ரஷ்டானுமன்தா ச பர்தா போக்தா மஹேச்வர: |
பரமாத்மேதி சாப்யக்தோ தேஹேऽஸ்மின் புருஷ: பர: ||

கடவுளை நினைக்காதவர்களுக்கு அவர் உபதிரஷ்டாவாக சாக்ஷியாக இருக்கிறார். நாம் நல்வழியில் செல்ல நினைத்தால் அனுமந்தாவாக நல்வழி காட்டுகிறார். அதனால் நமக்கு வரும் கஷ்டங்களைப் பர்த்தாவாகத் தாமே ஏற்றுக்கொள்கிறார். அதில் வரும் பயனை அனுபவிப்பவராக இருக்கிறார். அதன்பின் நாம் செய்யும் செயல்கள் எல்லாம் பரமாத்மாவின் திட்டம். பின் பரமாத்மாவாகவே ஆகிறோம். கடவுளை நெருங்குமளவு நாம் அவர் மயம் ஆகிறோம் என்கிறார் பரமஹம்ஸர். நாம் பக்திமான்கள் பக்திமதிகள் ஆகப் பரமஹம்ஸர் அருள்புரிவாராக!


shrine

(இந்த கட்டுரை 1998ஆம் ஆண்டு மே மாத ‘தர்ம சக்கரம்’ இதழிலிருந்து எடுக்கப்பட்டது. சக்கரம் 47 ஆரம் 5. தொடரை எழுதியவர் கே. நாகமணி. 1998ஆம் ஆண்டில் பேச்சாளர்கள் என்ன பதவியில் இருந்தனரோ அதையே கொடுத்திருக்கிறோம். தற்போதைய பதவி பற்றியோ அல்லது காலஞ்சென்றவர் என்றோ இங்கு குறிப்பிடவில்லை.)