Category Archives: Life History

Life History of Swami Vivekananda-Part 6

இரண்டாம் முறை மேல் நாட்டுப் பயணம்:

swami-turiyananda

சுவாமி துரியானந்தர்

தாம் மீண்டும் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யும்பொழுது தலைசிறந்த யோகி ஒருவரை அழைத்துவருவதாக சுவாமிகள் அமெரிக்க சிஷ்யர்களுக்கு வாக்கு கொடுத்திருந்தார். தாம் கருதியவண்ணமே துரியானந்த சுவாமிகளையும், சகோதரி நிவேதிதையுடன் 1899ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கல்கத்தாவிலிருந்து கப்பலில் செங்கடல், மத்திரயத்தரைக்கடல் வழியாக லண்டன் போய்ச் சேர்ந்தனர். அவர் லண்டனில் தங்கியிருக்க வசதிகளையெல்லாம் அன்புடன் செய்து வைத்தவர் சகோதரி நிவேதிதையின் அன்னையார் ஆவார். சகோதரி நிவேதிதையை சிலநாள் லண்டனில் இருக்கச் செய்துவிட்டு அமெரிக்க சிஷ்யகளுடன் அமெரிக்கா சென்றார்.

கலிபோர்னியா:

swami-abhedananda

சுவாமி அபேதானந்தர்

ஏற்கனவே நியுயார்க் நகருக்கு வந்திருந்த அபேதானந்த சுவாமிகளுடன் துரியானந்த சுவாமிகளை இருத்திவிட்டு மேற்குப் பிரதேசம் புறப்பட்டார். கலிபோர்னியா மாகாணத்தின் பற்பல ஊர்களில் சுமார் நூறு உபந்நியாசங்களுக்கு மேல் செய்தார்.

சுவாமிகளின் சிஷ்யர்களுள் ஒருவர் கலிபோர்னியாவின் மலைப்பிரதேசத்தில் 160 ஏக்கர் பூமியை சுவாமியின் வசம் ஒப்புவித்தார். யோக சாதனம் பயிலுதற்காக அங்கு “சாந்தி ஆஸ்ரமம்” என்ற பெயரில் நிலையமொன்று நிறுவப்பட்டது. அமெரிக்காவிற்கு அது முற்றிலும் அவசியமானது.

Nortern California San Francisco

சான்பிரான்ஸிஸ்கோ நகரில் வேதாந்த சிரவணம் பண்ணிவைப்பதற்கும் சாந்தி ஆசிரமத்தில் சாதகர்களுக்கு யோகம் பயிலுவிப்பதற்கும் யோகீஸ்வரராகிய துரியானந்த சுவாமிகளை நியூயார்க் நகரிலிருந்து வரவழைத்தார்.

Turiyananda, Abedananda 8 to 18, Sep. 1899.

இடதுபுறத்திலிருந்து சுவாமி விவேகானந்தர். நிற்பவர்கள் – சுவாமி அபேதானந்தர், சுவாமி துரியானந்தர்.

சான்பிரான்ஸிஸ்கோவில் சுவாமிகள்

பாரிஸ் நகர சர்வமத மகாசபை:

ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உலகக் கண்காட்சியைச் சார்ந்து அனைத்து மதங்களின் உற்பத்தியை ஆராய்வதென மகாநாடு கூட்டினார்கள்.  சுவாமி விவேகானந்தரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டிருந்தார். சொற்பொழிவுகள் அனைத்தும் பிரெஞ்சு மொழியில் நடைபெறுவதாயிருந்தன. எனவே அம்மொழியை கற்று 2 மாதத்தில் பிரசங்கம், சம்வாதம் செய்ய வல்லவரானார்.

ஒவ்வொரு மதங்களின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் ஆராய வேண்டுமென்பதே இந்த மகாநாட்டின் நோக்கம். பண்புடன் உருவெடுத்திருப்பதில் கிறிஸ்தவ மதத்துக்கு நிகரானது வேறு எதுவும் இல்லை என்று நிரூபிக்க கிறிஸ்தவர்கள் முயன்றனர். ஹிந்து மதத்தின் பல அம்சங்கள் அநாகரிகமாகத் துவங்கியவைகள் என்று எடுத்துக்காட்ட கிறிஸ்தவ நிபுணர்கள் முயன்றனர். சுவாமிகள் ஹிந்து மதத்தின் மகோன்னத வளர்ச்சியை சாஸ்திரபூர்வமாக விளக்கிக் காட்டியதை மறுக்க அவர்களுக்கு இயலவில்லை. எனவே இந்த மகாசபையிலும் ஹிந்துமத வளர்ச்சியே மேன்மையுற்று விளங்குவதாயிற்று.

கீழ்வங்காள விஜயம்:

சுவாமிகள் தலைமை மடத்திற்கு வந்து 2, 3 மாதங்களுக்கு முன்பே கீழ் வங்காளத்துக்கு விஜயம் செய்யவேண்டுமென்று அம்மாகாணவாசிகள் பலமுறை வேண்டினர். இங்கு அவர் வேதாந்தத்தின் மாண்பைப்பற்றி அரிய சொற்பொழிவுகள் இரண்டு நிகழ்த்தினார்.

உடல் உபாதை:

சுவாமிகளை வாட்டி வந்த ஈளைநோய் டாக்காவிலிருந்தபோது அதிகமாக அல்லல்படுத்தியது. பிறகு மலைப்பிரதேசமான அஸ்ஸாம் மாகாணத்தின் தலைநகர் ஷிலாங் சென்றால் சுவாசகாசம் குணமடையலாம் என்று கருதி அங்கே அழைத்துச் செல்லப்பட்டார்.

ஷிலாங்கில் உடல்நிலை சரியில்லாதபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

அஸ்ஸாம் மாகாணத்துக்கு அப்போது Sir H.E.A. Cotton என்பார் கவர்னராக இருந்தார். சுவாமிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருந்தார். அவரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். ஷிலாங்கில் இருந்த அரசாங்க டாக்டரைக்  கொண்டு சர் காட்டன் சுவாமிகளின் சுவாசகாசத்தை குணப்படுத்த முயன்றார். அது திருப்திகரமான பலன் அளிக்கவில்லை.

தேசிய காங்கிரஸ் கூட்டம்:

1901ஆம் வருடத்தின் இறுதியில் இந்திய தேசிய காங்கிரஸின் ஆண்டுக் கூட்டம் கல்கத்தாவில் நிகழ்வதாயிற்று. இந்தியாவில் உள்ள மாகாணங்கள் அனைத்திலிருந்தும் தேசாபிமானிகள், கல்விமான்கள் வந்திருந்தனர். கிட்டத்தட்ட அவர்கள் எல்லாரும் சுவாமி விவேகானந்தரைப் பற்றி அறிந்திருந்தனர். திட்டம் வகுத்து நடந்த காங்கிரஸ் கூட்டம் கல்கத்தா நகரில் நிகழ்வதாயிற்று என்றால் திட்டம் போடாது அந்நியோந்நியமாக சுவாமிகளின் முன்னிலையில் மற்றொரு சிறிய காங்கிரஸ் கூட்டம் நிகழ்வதாயிற்று எனலாம்.

புத்த கயை, காசி யாத்திரை:

புத்த மதத்தின் சார்பில் ஜப்பானில் சர்வமத மகாசபை ஒன்று கூட்டுவதற்கு அந்நாட்டு மக்கள் முயன்று வந்தனர். அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க வேண்டுமென்று திரு. ஓதா, திரு. ஆகாகுரா என்ற இருவர் சுவாமிகளை மிக வேண்டினர். அதற்குத் திருவருள் சம்மதிக்கவில்லை என்று இயம்பினார். அவர்களைத் திருப்திபடுத்துதற்பொருட்டு அவர்களுடன் புத்தகயைக்கும், காசிக்கும் யாத்திரை போய்வர சுவாமிகள் சம்மதித்தார். அவர் மனதில் சங்கற்பித்திருந்தபடியே 1902ஆம் வருடத் துவக்கத்தில் சுவாமிகள் புத்த கயைக்குச் சென்றார். ஆங்கு மடாலயம் ஒன்றுக்கு அதிரபராயிருந்தவர்க்கு சுவாமிகளின் வருகை ஆனந்தத்தை அளித்தது.  உலகப் பிரசித்தி பெற்ற விவேகானந்தரைத் தாம் நேரில் சந்திக்க வேண்டுமென்று மடாதிபதி எண்ணியிருந்தார்.

The Temples and Ghats of Varanasi (Benares) - c1900

காசிக்கு சென்றபோது, சுவாமிகளால் ஏற்கனவே அங்கு அனுப்பப்பட்டிருந்த சிஷ்யர் கல்யாணானந்தர் அரிய முறையில் நோயாளிகளுக்கு மருத்துவப் பணிவிடைகள் செய்து வந்தததைக் கண்டு மகிழ்வுற்றார். சுவாமிகள் காசியில் தங்கியிருந்தபோது அறிஞர்கள் பலர் அவரை அணுகி காசி க்ஷேத்திரத்திலே ராமகிருஷ்ண மடாலயம் ஸ்தாபிப்பது அவசியம் என்று வேண்டிக்கொண்டனர்.

02 swami-shivananda 1922-1934

சுவாமி சிவானந்தர்

சுவாமிகள் பேலூர் மடத்துக்குத் திரும்பிய பிறகு தமது குரு சகோதரர் சுவாமி சிவானந்தரையும், அவருடன் இரண்டொரு சீடர்களையும் காசிக்கு அனுப்பி வைத்தார். சுவாமி சிவானந்தர் காசிக்குச் சென்று “ஸ்ரீ ராமகிருஷ்ண அத்வைத ஆச்ரமம்” என்னும் மடாலயத்தை நிறுவி நடாத்தி வந்தார்.

Adhvaitha Ashrama, Varanasi

ஸ்ரீ ராமகிருஷ்ண அத்வைத ஆச்ரமம்

துர்க்கை பூஜை:

வெறும் தத்துவபோதத்தைப் பொதுமக்களுக்கிடையில் வழங்கினால் அவர்களுக்கு அது ஏற்புடையதன்று. விழாக்கள் மூலமாக சாமானியமான வழிபாட்டு முறைகளையெல்லாம் கையாண்டால் அது பொதுமக்கள் கருத்துக்கு எட்டுகிறது. ஆதலால் நாட்டில் ஐதிகமாக வந்துள்ள விழாக்கள் சிலவற்றைக் கொண்டாடவேண்டுமென்று சுவாமிகள் முடிவெடுத்தார். அம்முடிவுக்கு ஏற்ப 1902ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் பேலூர் மடத்தில் துர்க்கை பூஜை கொண்டாடுதற்கு ஏற்பாடாயிற்று. துர்க்கா பூஜையைத் தொடர்ந்து லக்ஷ்மி பூஜை பௌர்ணமியன்றும், அதைத் தொடர்ந்து வந்த அமாவாசையன்று காளி பூஜையும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ண ஜெயந்தி விழா:

விவேகானந்தர் திருமேனி தாங்கியிருந்தபொழுது கலந்துகொண்ட விழாக்களில் இறுதியாக நிகழ்ந்தது ஸ்ரீ ராமகிருஷ்ண ஜெயந்தியாகும். 1902ஆம் வருடம் மார்ச் மாதத்தில் பேலூர் மடத்தில் நடைபெற்றது. அத்தருணத்தில் அவர் முக்கியமான கருத்து ஒன்றைத் தெரிவித்தார். பரமஹம்சரின் பெயரால் பல்லாயிரம்பேர் ஒரு தினம் கூடி ஆடிப்பாடி ஓலமிட்டுவிட்டுப் பிரிந்து போவதில் அதிக நன்மை விளையாது. பரமஹம்சர் புகட்டிய பாரமார்த்திகப் பெருநெறிகளையெல்லாம் துருவி ஆராய்தற்கும், அவைகளை அனுஷ்டிப்பதற்கும் சந்தர்ப்பங்கள் அளிக்க வேண்டும் என்று எடுத்துரைப்பாராயினார்.

சுவாமி விவேகானந்தர் மகாசமாதி:

1902ஆம் ஆண்டு ஜூன் மாதம் முழுவதிலும் சுவாமி விவேகான்ந்தர் உடலை உகுப்பதற்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார். அச்செயல்கள் மற்றவர்கள் மனதில் படவில்லை.

  1. ஓராண்டுக்கு முன்பு கீழ்வங்காளத்துக்குப் போயிருந்தபொழுது “நான் இவ்வுலகில் இன்னும் ஓராண்டுதான் உடல் தாங்கியிருக்கப்போகிறேன்” என்று பேச்சுக்களுடையில் அவர் பகர்ந்ததைக் கேட்டவர்கள் வெறும் பேச்சென்று தள்ளிவிட்டனர்.
  2. காசியிலிருந்து திரும்பி வந்தான பிறகு தமது சந்நியாசி சிஷ்யர்களை ஒருவர் பின் ஒருவராக சந்திக்க விரும்பினார். தமது கருத்தைத் தெரிவித்து அவர்களுக்குக் கடிதங்களை எழுதினார். இணங்கி பலர் அவரை வந்து சந்தித்தனர். வேறு சிலர் அவசரமான அலுவல்கள் காரணமாக வர இயலவில்லை என்று கடிதம் வரைந்தனர்.
  3. “தான் யார் என்பதை நரேந்திரன் என்று அறிந்துகொள்கிறானோ அன்று அவன் உடலை உதறித் தள்ளிவிட்டு முக்திநிலை எய்துவான்” என்று பரமஹம்ஸர் கூறியிருந்தார். அதை மற்ற குரு சகோதரர்களும் அறிவர். ஏதோ சில பேச்சுக்களுக்கிடையில் “நீங்கள் யார் என்பதை அறீந்தீர்களா?” என்னும் கேள்வி வந்தது. “ஆம், நான் யார் என்பதை இப்பொழுது அறிகிறேன்” என்று விவேகானந்தர் விடைவிடுத்தார்.
  4. தாம் உடலை உகுக்க இன்னும் மூன்று நாட்கள் இருந்தபொழுது கங்கைக் கரையோரம் மூன்று பேருடன் உலாவிக்கொண்டிருந்தபோது ஓரிடத்தில் நின்றார். மடத்து நிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் வில்வமரம் ஒன்று இருந்தது. அந்த வில்வ மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வது சுவாமிகளின் வழக்கம். அந்த வில்வமரத்தைச் சுட்டிக்காட்டி தாம் தேகத்தை உகுத்த பின்பு அதை இம்மரத்துக்கு அருகில் வைத்து தகனம் செய்துவிடும்படி சுவாமிகள் உத்தரவிட்டார். இந்த பேச்சைக் கேட்டவர்களுக்கு என்ன விடை சொல்வது என்று விளங்கவில்லை.
  5. சடலத்தைத் துடைப்பதற்கு இரண்டு நாளைக்கு முன்பு சுவாமிகள் தாமே அமுது சமைத்து அதைத் தமது சிஷ்யர்களுக்கு வழங்கினார். சிஷ்யர்களுக்குத் தம் கைப்படப் பரிமாறினார். உணவு அருந்தியான பின்பு கையலம்புதற்குத் தாமே நீர் வார்த்தார்.
  6. ஜூலை 4ஆம் நாள் அமெரிக்கா சுதந்திர தினமாகும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே காஷ்மீரில் அமெரிக்க சிஷ்யர்களுடன் அவர்களது சுதந்திரத் திருநாளைக் கொண்டாடியபோது சுவாமிகள் அதே ஜூலை 4ஆம் நாள் தமது மேனியினின்று விடுதலை பெறப்போவதாகவும், தமது பூலோக காரியங்கள் நிறைவேற்ற இன்னும் 4 ஆண்டுகள் மீதம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவர் குறிப்பிட்ட நாள் 1902ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள் இப்போது வருவதாயிற்று. இந்த நாளை பஞ்சாங்கத்தில் விடுதலைக்குரிய நாளாகக் குறிப்பிட்டு வைத்திருந்தார். அன்று மாசிய சிவராத்திரி. அதுவும் முற்றிலும் பொருத்தமான நாளாயிருந்தது.

ஜூலை 4ஆம் நாள் வழக்கத்துக்கு மாறாக காலையில் 8 மணியிலிருந்து 11 மணிவரை குருதேவரது பூஜையறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டு தியானம் செய்தார். ஜன்னல்களையும் மூடி வைத்துக்கொண்டார். இறுதிக் காலத்தில் சிறிது ஆகாரத்தை உண்பவர் வழக்கத்துக்கு மாறாக நண்பகலில் தமது குரு சகோதரர்களுடனும், சிஷ்யர்களுடனும் பந்தியில் அமர்ந்து ஆகாரம் ஏற்கலானார். அவ்வேளையில் குதூகலமாக அனைவருடனும் உரையாடியது பந்தியில் இருந்தவர்களுக்கெல்லாம் பரமானந்தத்தை ஊட்டியது. நண்பகல் ஆகாரத்திற்குப் பிறகு சிஷ்யர்களை ஒன்று திரட்டி வைத்துக்கொண்டு 3 மணி நேரம் சம்ஸ்கிருத இலக்கணத்தைப் பற்றி சுவாமிகள் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

அன்று மாலையில் தமது குரு சகோதரர் பிரேமானந்த சுவாமிகளைத் தம்முடன் அழைத்துக்கொண்டு சுவாமி விவேகானந்தர் 2 மைல் தூரம் வெளியில் சென்று உலாவி வந்தார். மடத்துக்குத் திரும்பி வந்த சுவாமிகள் கங்கைக் கரையோரம் அமர்ந்து அனைவருடனும் ஆனந்தமாக உரையாடினார்.

சந்தியாவேளை வந்தது. குருதேவர் ஆலயத்தில் ஆராதனைக்கான மணி அடிக்கப்பட்டது. எல்லாரையும் அதில் கலந்துகொள்ளும்படி பணித்தார். சுவாமிகல் தனியாக தியானம் செய்ய தமது அறைக்கு பிரம்மச்சாரி ஒருவருடன் சென்றார். அறையினுள் ஆசனம் விரித்து கிழக்குமுகமாக கங்கையை நோக்கிய விதத்தில் சுவாமிகள் தியானத்தில் அமர்ந்தார். சுமார் 8 மணிக்கு அந்த பிரம்மச்சாரியை அருகில் அழைத்துத் தமது தலைக்கு மேலே விசிறி வீசும்படி வேண்டினார். பிறகு “தியானம் செய்துகொண்டு வாயிலில் காத்திரு” என்று சுவாமிகள் பணிவிடை செய்து வந்த பிரம்மச்சாரிக்குப்  பகர்ந்தார். இதுவே சுவாமிகள் பேசிய அருள் உரைகளில் இறுதியானது. இரவு 9 மணி 10 நிமிடங்களுக்கு சுவாமிகள் அகண்ட சச்சிதானந்தத்தில் நிர்விகல்ப சமாதி எய்திவிட்டார்.

V48

சாய்ந்து கிடந்த சரீரத்துக்கு என்னென்னவோ சிகிச்சை முறைகளை டாக்டர்களும், மற்றவர்களும் கையாண்டு பார்த்தார்கள். நாசித் துவாரத்திலும், நாவிலும் இரண்டொரு துளி இரத்தம் கட்டியிருந்ததாகத் தென்பட்டது. குண்டலினி சக்தி பிரம்மரந்திரத்தைத் துளைத்துக்கொண்டு மேல் நோக்கிச் சென்றதன் புற அடையாளமாக அது நிகழ்ந்திருக்கலாம். இதைப் பற்றிய செய்தி தந்தி வாயிலாக உலகில் பல இடங்களுக்குப் பறந்தது. கணக்கற்றோர் மறுநாள் காலையில் கல்கத்தா வந்து கூடினர். ஒரு கட்டிலில் வைக்கப்பட்டிருந்த திருமேனியை ஆயிரக்கணக்கானோர் தரிசித்து வணங்கினர். அன்று மாலை கங்கைக் கரையோரம் வில்வமரத்தடியில் அம்மேனியானது அக்னி பகவானுக்கு அர்ப்பிக்கப்பட்டது.

Swami Vivekananda Temple Belur Mathசுவாமி விவேகானந்தர் நினைவு ஆலயம் – பேலூர்

belurmath

“நான் விரைவில் உடலை உகுத்துவிட்டு உருவமற்ற ஓசையாக இலங்குவேன் – I shall be a voice without form” என சுவாமிகள் சில நாளைக்கு முன்பு பகர்ந்திருந்தார். அன்றும், இன்றும், என்றுமே இனி அவர் உருவமற்ற அருள் ஓசையாக இருந்து வருவார்.

(நிறைவு.)


இந்த 6 பாக குறிப்புகள் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் இயற்றிய “ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்” என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை. சுவாமி விவேகானந்தர் மகாசமாதி தினத்தையொட்டி இன்று பதிவேற்றப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் 150 பிறந்த தின ஆண்டில் (2013-2014)

  1. http://vivekanandam150.com/
  2. http://www.facebook.com/SwamiChidbhavananda/
  3. http://rkthapovanam.blogspot.in/ (2012ல்)

ஆகிய தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தது.

Advertisements

Life History of Swami Vivekananda-Part 5

இலங்கை:

கொழும்புவில் எடுக்கப்பட்ட புகைப்படம்

1897ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் நாள் சுவாமிகள் ஊர்ந்து வந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நுழைந்தது. வரவேற்புக் கழகத்தார் சுவாமிகளுக்கு மாலை சூட்டி, பாத பூஜை செய்து, இரட்டைக் குதிரை பூட்டிய விமானமொன்றில் அமரவைத்து ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். சுவாமிகளை தரிசிக்க ஆயிரக்கணக்கானோர் வீதியின் இருபுறங்களிலும் நின்றுகொண்டிருந்தனர். பிறகு விடுதியை வந்தடைந்து ஆசனமொன்றில் வீற்றிருக்கச் செய்து ஊரார் அனைவரும் வரவேற்புப் பத்திரங்களை வாசித்தனர்.

கண்டியிலும், யாழ்ப்பாணத்திலும் அவரை எதிர்கொண்டு அழைத்தனர். வீதிதோறும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பக்தியும், விசுவாசமும் பொதிந்துள்ளதுதான் மெய்யான மத அனுஷ்டானம் என்னும் கருத்தடங்கிய உபந்நியாசங்கள் சிலவற்றை நிகழ்த்தினார். மக்களை வாழ்த்திவிட்டு, விடைபெற்று இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

ராமநாதபுரம்:

Ramnadapuram Palace Old

ராமநாதபுரம் அரண்மனை

பாம்பனில் சுவாமிகளது நல்வரவை ராமநாதபுரம் சம்ஸ்தானமும், மகாராஜா பாஸ்கர சேதுபதியும் பேராவலுடன் எதிர்பார்த்திருந்தது. வெளிநாடுகளில் வேதாந்தக் கொடியேற்றிய விவேகானந்தர் தாய் நாட்டிலே திருவடிகளை நாட்டியபோது அதிர்வேட்டுகள் ஆகாயத்தைப் பிளந்தன; ஜய பேரிகைகள் முழங்கின.

ராமேஸ்வரம் கோயிலில் இவரைக் காணச் சூழ்ந்திருந்த ஜனங்களுக்கு மெய்யான சிவபூஜையைப் பற்றிய உபந்நியாசம் நிகழ்த்தினார். விக்கிரகத்தைக் கடவுளாக பாராட்டுவது போல துக்கவேடமும், தரித்திர வேடமும் தாங்கியிருக்கும் மக்களையும் கடவுள் சொரூபமாக  வணங்கவேண்டும் என்பது அதன் அடிப்படையான கருத்து.

பிறகு இராமநாதபுரம் அரண்மனைக்கு ராஜரீதியுடன் அழைத்துச் செல்லப்பட்டார். அவரை ரதத்தில் இருத்தி மக்களும், அரசனும் வடம் பிடித்து இழுத்து வலம் வந்தனர். ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வாழ்த்துக்கள் வாசிக்கப்பட்டன. ஆங்கு கூடியிருந்தவர்களுக்கு உபந்நியாசம் ஒன்று செய்தருளினார்.

மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம்:

சென்னையை நோக்கி வடதிசையாக அவருடைய திருக்கூட்டம் புறப்பட்டது. மதுரையில் சுவாமிகள் மூன்று நாள் தங்கியிருந்தார். அப்பொழுது பக்தி விசுவாசத்துடன் வணங்க வந்தவர்களைக் கணக்கிடுவது இயலாத காரியமாயிற்று. பிறகு ரயில் மார்க்கமாக கும்பகோணம் புறப்பட்டார். திருச்சி, தஞ்சை முதலிய இடங்களில் வரவேற்புப் பத்திரங்கள் ஸ்டேஷனிலேயே வாசித்து அளிக்கப்பட்டன. கும்பகோணத்தில் மட்டும் சிரம பரிகாரம் செய்துகொள்ளுதற்காக சுவாமிகள் 3 நாள் தங்கியிருந்தார். அப்போது, ‘வேதாந்தத்தின் போதனை’ என்னும் விஷயத்தைப் பற்றி அரிய உபந்நியாசம் செய்தார். பிறகு சென்னை நோக்கி புறப்பட்டார்.

சென்னை:

சுவாமிகள் எழுந்தருளவிருந்த நன்னாளன்று அதிகாலையிலிருந்தே பெரும் ஜனத்திரள் எழும்பூர் ஸ்டேஷனை நோக்கிச் சென்றது. 1897ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் நாள் காலையில் ரயில் வண்டி ஸ்டேஷனில் நுழைந்ததும் இடியிடித்தாற்போல் மக்களது ஆரவாரச் சத்தம் ஒலித்தது. வண்டியிலிருந்து சுவாமிகள் இறங்கியதும் திருநாம கோஷம் கொட்டகையைத் தூக்கிற்று; பூமாரி பொழிந்தது. மக்கள் சார்பாக நீதிபதி சுப்பிரமணிய ஐயர் மாலை சூட்டினார். ஊர்வலம் துவங்கியது. சுவாமிஜி சென்ற குதிரை வண்டியிலிருந்து குதிரைகளை அவிழ்த்துவிட்டு இளைஞர்களே அதனை இழுத்தனர். மெல்ல நகர்ந்து சென்ற ஊர்வலம் திருவல்லிக்கேணியில் கடலோரம் இருக்கும் ‘காசில் கர்னன்’(Castle Kernan) அல்லது ஐஸ் ஹவுஸ் மாளிகைக்கு(தற்போது விவேகானந்தர் இல்லம்) போய் சேர்ந்தது. அங்குதான் சுவாமிகளுக்கு விடுதி ஏற்பாடாகி இருந்தது.

800px-Vivekanandar_Illam

Castle Kernan (தற்போது விவேகானந்தர் இல்லம்)

பத்திரிக்கைகள் அவரது விஷயத்தை விரிவாக வர்ணித்து எழுதலாயின. The Hindu பத்திரிக்கை வர்ணித்ததாவது: “இத்தகைய வரவேற்பு இதுவரை யாருக்குமே கிடைத்ததில்லை. நவீன ஆச்சாரியரான ஸ்ரீமத் சுவாமி விவேகானந்தருக்கு அளிக்கப்பட்ட்து போன்ற வரவேற்பும், மக்களின் அன்பும் மரியாதையும் வேறு எந்த அரசனாவது, ராஜபிரதிநிதியாவது இந்தியாவில் எப்போதும் பெற்றது கிடையாது.” சாமானிய மனிதன் ஒருவனைத் தலைபுரளப் பண்ணிவிடுவதற்கு இந்த ஆரவாரங்களில் ஒரு சிறு பகுதியே போதுமானது.

Victoria Hall

சென்னையில் சுவாமிகள் உபந்நியாசம் நிகழ்த்திய விக்டோரியா ஹால்

சென்னையில் அவர் வசித்திருந்தது 9 நாட்கள். சென்னையில் சுவாமிகள் நிகழ்த்தின உபந்நியாசங்கள் 5. அல்லும் பகலும் அவரைக் காண பண்டிதர்களும், பாமரர்களும் வந்த வண்ணம் இருந்தனர். காசில் கர்னன் மாளிகையின் வெளிப்பக்கத்தில் கொட்டகை அமைக்கப்பட்டது. சில நிகழ்ச்சிகளை மட்டும் பார்ப்போம்.

பண்டிதர் ஒருவர் முன் வந்து மாயாவாதத்தைப் பற்றி என்னென்னவோ பிரச்சனைகளைக் கிளப்பினார்.

மாயை என்பது வாதத்துக்குரிய விஷயமன்று. பிரபஞ்சத்தின் நடைமுறையைப் பற்றிய தத்துவம் மாயையெனப்படுகிறது என்று சுவாமிகள் மறுமொழி கூறினார். இத்தகைய விளக்கத்தை ஜகத்குரு சங்கரர் இம்முறையில் எங்குமே தமது பாஷியங்களில் பகரவில்லையே என்று பண்டிதர் தடை கூறினார். எதைப் பகராது சங்கரர் மீதி வைத்திருந்தாரோ அதைத் தெளிவுபடுத்தி நிறைவாக்குதல் பொருட்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இக்காலத்தில் தோன்றி வந்துள்ளார் என்று சுவாமிகள் விடையளித்தார். பண்டிதரும் அக்கூற்றை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.

சென்னையில் எடுக்கப்பட்ட புகைப்படம்

துண்டுக் காகிதங்களில் வினாக்கள் எழுதி அனுப்பப்பட்டிருந்தன. ஒருவர் வினாக்களை வாசிக்க, சுவாமிகள் அதற்கு விடைகளைக் கூறினார். இறுதியாக ஒரு வினா: “மக்கள் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் யாது?” விடை: “துன்பங்களுக்கெல்லாம் மூலகாரணம் அக்ஞானம், அக்ஞானம், அக்ஞானம்”.

சென்னைஅன்பர்களுடன் சுவாமி விவேகானந்தர். இந்த புகைப்படத்தில் சுவாமிகளுக்கு பின்னால் வலதுபுறம் நிற்பவர் சுவாமிகளின் உபந்நியாசங்களை சுருக்கெழுத்தில் பதிவேற்றிய சிஷ்யர் அவர்கள்

சென்னையில் தங்கியிருந்த சில நாட்களுக்கிடையில் தமிழ் சொற்கள் பலவற்றை சுவாமிகள் கற்றுக்கொண்டார். சமையல்காரனோடு சில தமிழ் வார்த்தைகள் அவர் உரையாடினது கேட்டவர்களுக்குப் பெருமகிழ்வூட்டியது.

MadrasGroupPhoto

சென்னைஅன்பர்களுடன் சுவாமி விவேகானந்தர்.

(இந்த புகைப்படத்தில் சுவாமிகளுக்கு பின்னால் வலதுபுறம் நிற்பவர் சுவாமிகளின் உபந்நியாசங்களை சுருக்கெழுத்தில்(Short Hand) பதிவேற்றிய சிஷ்யர் J.J. Goodwin அவர்கள்.)

இலங்கையிலிருந்து சென்னை வரை செய்த பிரயாணத்தாலே சுவாமிகளுக்குப் போதிய அளவு ஓய்வும் உறக்கமும் இல்லாது போய்விட்டன. இரவும் பகலும் இடையறாது மாந்தர் அவரை மொய்த்துக்கொண்டேயிருந்தனர். கல்கத்தா போய்ச் சேர ஆயிரம் மைல் பயணம் செய்ய வேண்டும். நிலமார்க்கமாக சென்றால் மாந்தர் அவரை அன்பால் அலைகழித்திருப்பார்கள். எனவே, சென்னைலிருந்து கப்பலேறி, கடல் மார்க்கமாய் கல்கத்தாவுக்குப் புறப்பட்டார். விரிகடலிலே அவரது உடல் ஓய்வுற்றிருந்தது.

Thiruvallaikeni 1900

சுவாமி விவேகானந்தர் சென்னையில் தங்கியிருந்தபோது வழிபட்ட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில்

கல்கத்தா:

கல்கத்தா வாசிகளுக்கு சுவாமிகளது வரவு எத்தகைய இன்பத்தை ஊட்டியிருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். தங்கள் மாகாணத்தில் பிறந்த மகான் அல்லவா அவர்! துறைமுகத்தினின்று சுவாமிகளை ஏற்றி வந்த ரயில் வண்டியும் கடைசியாகக் கண்ணுக்குப் புலப்பட்டது. சுவாமிகள் தங்களெதிரே தோன்றவே தலைகள் அத்தனையும் ஒருமித்துச் சாய்ந்து வணங்கின.

calcutta-1897-feb28-2-w-arr

சுவாமிகளுக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி

7 ஆண்டுகளுக்கு முன்பு வாரநகர் மடத்தில் குரு சகோதரர்களை விட்டுப் பிரிந்த சுவாமிகள் திரும்பவும் சந்தித்தார். சர்வமத மகாசபையில் பிரசித்தி அடையும் வரை அவர் எங்கு இருந்தார் என்பதே அவர்களுக்குத் தெரியாது. பரமஹம்ஸர் சுவாமிகளைப் பற்றி முன்பு கூறியதெல்லாம் இப்போது பிரத்தியட்சமாய் நடைபெற்று வருவதைக் கண்டு மகிழ்வுற்றனர்.

calcutta-1897-3

குரு சகோதரர்கள், சிஷ்யர்கள் மற்றும் சுவாமிஜி

கல்கத்தாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில 1897:

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் நிறுவுதல்:

1897ஆம் ஆண்டு மே மாதத்தில் பரமஹம்ஸரின் சிஷ்யர்கள் அனைவரையும் சுவாமிகள் கல்கத்தாவிலே ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்தார். சத்சங்கமொன்று நிறுவப்பெற்றது. அதில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் என்றும், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் என்றும் இணைபிரியாத அம்சங்கள் இரண்டு அமைக்கப் பெறுவனவாயின.

முந்தையது முற்றும் பாரமார்த்திகமானது. யோகங்கள் வாயிலாக சந்நியாசிகளும், பிரம்மச்சாரிகளும் கடவுளை அடைய முயலுவதற்கென அது ஏற்பட்டுள்ளது.

பிந்தியது பரோபகார சம்பந்தமானது. பிரசாரம் செய்தல், பள்ளிகளை கட்டுதல், மருத்துவமனை நடத்துதல், கஷ்டநிவாரண ஊழியங்கள் புரிதல் ஆகிய பல அலுவல்களை அதே சந்நியாசிகளும், பிரம்மச்சாரிகளும் இந்த அங்கத்தின் மூலமாக நிர்வகித்து வருகின்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பின்பற்றுகிற ஒவ்வொருவனிடத்திலும் இந்த இரண்டு அம்சங்களும் இருக்க வேண்டும்.

அல்மோரா:

ஓய்வில்லாத உழைப்பால் உடல் நலம் குலைந்திருந்த சுவாமிகளின் உள்ளமும் தளர்வுற்றிருந்தது. ஆகவே மலைநாடு சென்று ஓய்வெடுப்பது என்று இணங்கி இமயமலையிலுள்ள அல்மோரா போய்ச் சேர்ந்தார். அல்மோராவாசிகளது விருப்பத்துக்கிணங்கி சுவாமிகள் ஆங்கு ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் உபந்நியாசங்கள் செய்தருளினார்.

220px-Annie_Besant_in_1897

அன்னி பெஸண்ட் அம்மையார்

அல்மோராவில் வசித்திருந்த சமயம் பிரம்ம ஞான சபைக்குத் (Theosophical Society) தலைமை வகித்திருந்த அன்னி பெஸண்ட் அம்மையார்(Mrs. Annie Besant) அவ்வூரில் ஓய்வின் பொருட்டு தங்கியிருந்தார். பெஸண்ட் அம்மையார் சுவாமிகளை அல்மோராவில் சந்தித்து தம்மையும் தமது சபையையும் பற்றித் தாக்கிப் பேச வேண்டாம் என்று வணங்கி வேண்டினார். அதுமுதல் சுவாமிகள் அச்சபையைப் பற்றிய கருத்துக்களை வெளியிடாமல் தம்மோடு வைத்துக்கொண்டார். இது சுவாமிகளின் உதார குணத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

காஷ்மீர் சொற்பொழிவு:

kashmir-1897-group

காஷ்மீரில் எடுக்கப்பட்ட புகைப்படம்

அநேக இடங்களுக்கு சுவாமிகள் வர வேண்டுமென்று அழைப்புக் கடிதங்கள் வந்தன. அவைகளுள் ஒன்று காஷ்மீரிலிருந்து வந்தது. ஊராரது வேண்டுகோளுக்கிணங்கி சுவாமிகள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் உபந்நியாசங்கள் செய்தார். ஹிந்துக்கள், ஆரிய சமாஜத்தினர், முகமதியர்களிடையே இருந்த சில பிணக்குகளையும் அபிப்பிராய வித்தியாசங்களையும் போக்குதற்கு அவருடைய சொற்பொழிவுகள் பெரிதும் பயன்பட்டன.

காஷ்மீரில் சுவாமிஜி

பிறகு பாஞ்சாலம், இராஜபுதனத்தில் ஆள்வார், கேத்திரி சமஸ்தானங்களுக்கு சுவாமிகள் விஜயம் செய்தார். இங்கு அவர் நிகழ்த்திய உபந்நியாசங்களின் வாயிலாக நாட்டை உய்விப்பதற்கான கருத்துக்களை வெளியிட்டார்.

பேலூர்:

வாரநகர் மடத்தில் சுவாமிகள் வசித்திருந்தபோது தங்களுக்கு நிலையான ஸ்தலம் நதியின் மேற்குக் கரையில்தான் அமையுமென்று சுவாமிகள் சொன்னார். அவ்வாறே 1898ஆம் ஆண்டின் துவக்கத்தில் மேற்கு திசையில் பேலூர் கிராமத்தில் பதினைந்து ஏக்கர் பூமியொன்றை விலைக்கு வாங்கினார். அதற்கான பெருநிதி சுவாமிகளின் மேல்நாட்டு சிஷ்யர்கள் காணிக்கையாகச் செலுத்தினர்.

அமர்நாத் யாத்திரை:

Amarnath_Yatra_Camp

அமெரிக்காவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் சிஷ்யர்களும், நண்பர்களும் சுவாமிகளை நாடி வந்தனர். அந்த கோடைக்காலத்தில் அவர்களை கல்கத்தாவில் அமர்த்துவது சரியல்ல என்று எண்ணி இமாலய பர்வதத்துக்கு அழைத்துச் சென்றார். நைனித்தால், அல்மோரா, ஸ்ரீ நகர் போன்ற இடங்களில் கொஞ்ச காலம் தங்கியிருந்தனர். ஹிமாலயத்தில் இருக்கும் அமர்நாத் சிவஸ்தலத்துக்கு யாத்திரை செல்ல ஆயத்தமானார்கள். கடல் மட்டத்துக்கு மேல் 18,000 அடி உயரத்தில் இருக்கிறது. பனிக்கட்டி மீது குறிகலான பாதை வழியாகப் பெரிய கும்பல் நடந்து சென்றது. அமர்நாத் தலத்தை அணுக அணுக சுவாமிகளிடத்தில் சிவபோதம் அதிகரித்துக்கொண்டே போயிற்று. தலத்தை அடைந்ததும் புற உணர்ச்சி அறவே இழந்துவிட்டு பரசொரூபத்தில் புதைந்தார்.

Lord_Amarnath

அமர்நாத் பனி லிங்கம்

பேலூர் மடம்:

காஷ்மீரில் நேர்ந்த ஒரு உபாதையால் நைந்து போன திருமேனியுடன் சுவாமிகள் பேலூர் வந்தார். மடாலயக் கட்டிட வேலை பூர்த்தியாயிருந்தது. குருதேவர் தம்மீது சுமத்தியிருந்த பெருங்காரியமொன்றை நிறைவேற்றிவிட்ட திருப்தி உள்ளத்தில் அவருக்கு எழுந்தது. ஒரு சுப தினத்தன்று குருநாதர் படத்தை வைத்து, பூஜை, ஹோமம், சடங்குகள் செய்தார். இன்றைக்கு உலகெங்குமுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடங்களுக்கு தலைமை மடமாக இது திகழ்ந்து வருகிறது.

bm temple

பேலூர் ராமகிருஷ்ண மடம் 1940 (West Side View)

பேலூர் மடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 1899:

பத்திரிக்கைகள்:

“பிரபுத்த பாரதம்” (விழிந்தெழுந்துள்ள இந்தியா) என்ற பெயர் பூண்ட மாதாந்திரப் பத்திரிக்கை ஆங்கிலத்திலும், “உத்போதனம்” (நல்லறிவு) என்ற பத்திரிக்கை வங்காள மொழியிலும் சுவாமிகள் துவக்கி வைத்தார்.

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்:

swami-ramakrishnananda

ஸ்ரீ  ராமகிருஷ்ணானந்தர்

பேலூர் மடம் தென்னிந்தியாவில் முதன்முதலில் நிறுவிய கிளை ஸ்தாபனம் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஆகும். சென்னை அடியார்கள் சுவாமி விவேகானந்தரிடம் கேட்டுக்கொண்டதர்க்கிணங்க தமது குரு சகோதரர் ராமகிருஷ்ணானந்தரை சென்னைக்கு அனுப்பி ஒரு ஸ்தாபனத்தை நிறுவ ஆயத்தப்படுத்தினார். மெரினா கடற்கரையில் காஸில் கெர்னன் அல்லது ஐஸ் ஹவுஸில் (தற்போது விவேகான்ந்தர் இல்லம்) இயங்கி வந்த மடம் 1906ஆம் ஆண்டு மயிலாப்பூருக்கு மாற்றப்பட்டது.

Chennai Ramakrishna math

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர் – பழைய திருக்கோயில்

தொடரும்…