Category Archives: Mahathma Gandhi

Swamiji Meeting with Mahathma Gandhi

நான் கண்ட காந்தி

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

(காந்தி ஜெயந்தி – சிறப்புப் பகிர்வு)

[பெரிய சுவாமிஜி உதகை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராயிருந்த பொழுது, குன்னூர்க்கு வருகை புரிந்திருந்த மகாத்மா காந்தியை சந்தித்து பேட்டி கண்டதையும், அதனைத் தொடர்ந்து உதகையில் 3 இடங்களுக்கு மகாத்மா காந்தி அவர்கள் வருகை புரியவேண்டும் என்னும் பெரிய சுவாமிஜியின் விண்ணப்பத்திற்கிணங்கி மகாத்மா காந்தி வருகை புரிந்ததையும், மகாத்மாவுடனான தனது அனுபவத்தை விரிவாக சுவாமிஜியே எழுதியிருக்கிறார். அதனை மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி பதிவிடுகிறோம்.]

1934ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஹரிஜன இயக்கத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். அந்த ஆண்டின் இறுதியில் அவர் நீலகிரியில் குன்னூரிலே சில நாள் தங்கியிருக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. நவம்பர் மாதமோ அல்லது டிசம்பர் மாதமோ அது ஞாபகத்தில் இல்லை. குன்னூரில் மௌண்ட் பிளஸண்ட் (Mount Pleasant) வனப்பு வாய்ந்த பகுதியாகும். அப்பகுதியில் நான்கு திக்குகளிலும் நல்ல காட்சியளித்துக்கொண்டிருந்த பங்களா ஒன்று மகாத்மாவுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவரும், அவருடன் வந்திருந்த தேச பக்தர்களும், தொண்டர்களும் தங்குவதற்கு வேண்டிய விரிவான இடவசதி அப்பங்களாவில் இருந்தது. அவர் வருவதற்கு முன்பே நீலகிரி ஜில்லா முழுதிலும் பேரூக்கமும், பொருத்தமான ஏற்பாடுகளும் தென்படுவனவாயின.

gandhi

(இணைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் 1942ல் பம்பாய் நகரில் எடுக்கப்பட்டதாகும்.)

ஸ்ரீமத் பகவத்கீதையில் இரண்டொரு கருத்துக்களை மகாத்மாவோடு கலந்து பேசுவதற்குப் பேட்டி தர வேண்டுமென்று நான் கடிதம் எழுதினேன். அப்பொழுது நான் உதகமண்டலம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் வசித்து வந்தேன். ஒரு நாள் மாலை 4 மணிக்கு 10 நிமிஷம் பேட்டி காண்பதற்குப் பதில் கடிதம் வந்தது. சரியாக மாலை 4 மணிக்கு குறிப்பிட்ட அறைக்குள்ளே நான் நுழைந்தபொழுது மற்றோரு வாயிலில் மகாத்மாவும் அவ்வறைக்குள் நுழைந்தார். அவரைப் பின்பற்றி அவருடைய காரியதரிசிகள் இருவர் வந்தனர். என்னை அமரச் சொல்லிவிட்டு மகாத்மாவும் தரையில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தின் மீது அமர்ந்தார். அவருக்கு எதிரிலே மடக்குப் பெட்டிச் சர்க்கா ஒன்று விரித்து வைக்கப்பட்டிருந்தது. இருமருங்கிலும் இரண்டு காரியதரிசிகளும் அமர்ந்தார்கள். அவர்கள் இருவர் கையிலும் கடிதக் கட்டுகள் இருந்தன. முதல் காரியதரிசி ஒரு கடிதத்தில் இருந்த கருத்தை ஒரு வாக்கியத்தில் தெரிவித்தார். அதற்கு இன்ன பதில் எழுது என்று மகாத்மா ஒரு வாக்கியத்தில் பதில் கொடுத்தார். மற்ற காரியதரிசி ஆங்கிலக் கடிதங்களில் ஒன்றின் கருத்தைத் தெரிவித்தார். அதற்கு விடையை ஒரு வாக்கியத்தில் தெரிவிப்பதற்கிடையில் சர்க்காவைச் சுழற்ற ஆரம்பித்தார். இந்தச் சூழ்நிலையில் கீதா தத்துவத்தை ஆராய முடியுமா என்ற ஐயம் என் உள்ளத்தில் எழுந்தது. சர்க்காவைச் சுழற்றுதற்கிடையில், ‘சுவாமிஜி நீங்கள் பேச விரும்பும் விஷயம் யாது?’ என்றார் காந்தி மகான்.

நான் கேட்டது: மகாத்மாஜி! ஒரு குடும்பத்தில் பிறந்துள்ள நான்கு சகோதரர்களுள் ஒருவன் பிராமணனாகவும், இன்னொருவன் க்ஷத்திரியனாகவும், வேறொருவன் வைசியனாகவும், மற்றொருவன் சூத்திரனாகவும் இருப்பது சாத்தியம் என்பது என் கருத்து. நீங்கள் அதை ஆமோதிக்கின்றீர்களா?

மகாத்மாஜி: இல்லை, நான் ஆமோதிப்பதில்லை.

கேள்வி: குணத்தையும், கர்மத்தையும் முன்னிட்டுத்தானே வருண பேதத்தைக் கீதா சாஸ்திரம் வகுத்து வைக்கிறது?

மகாத்மாஜி: அது வாஸ்தவம். வருணத்தில் நான் வைசியன். அது சமுதாய அமைப்பு. அதை நான் மாற்றிக்கொள்ள முடியாது. என் மக்களும் வைசியர்களே. நானும் என் மக்களும் வைசிய கர்மங்களையே முறையாகச் செய்ய வேண்டும்.

கேள்வி: அருள் நாட்டம் கொள்ள வேண்டிய அந்தணர் இக்காலத்தில் வெறும் பொருள் நாட்டம் ஒன்றிலேயே உழல்கின்றனர்; அவர்களை நீங்கள் பிராமணர் என்று அங்கீகரிக்கின்றீர்களா?

மகாத்மாஜி: சமுதாய அமைப்புப்படி அவர்கள் பிராமணர்கள், ஸ்வதர்மத்திலிருந்து பிசகினால் அவர்கள் பதிதர்கள் ஆகிறார்கள். வேறு வருணத்தைச் சேர்ந்தவர்களாகமாட்டார்கள்.

கேள்வி: அப்படியானால் வருணம் பிறப்பை ஒட்டியது என்பதுதானே உங்கள் கருத்து?

மகாத்மாஜி: பிறப்பை யாரும் புறக்கணிக்கலாகாது. பதிதராயிருந்தும் பின்பு பழைய பெரிய நிலைக்கு வர, மேல் வருணத்தார் முயல வேண்டும்.

இக்கொள்கையைப் பற்றி மேலும் விவாதிக்க நான் விரும்பவில்லை. இப்பேச்சுக்கிடையில் நிகழ்ந்துகொண்டிருந்த செயல்கள் ஈன் உள்ளத்தைக் கவர்வனவாயின. இப்பேச்சுக்கு இடைஞ்சல் இல்லாது காரியதரிசிகள் இருவருக்கும் மகாத்மாஜி ஒவ்வொரு சொல்லின் வயிலாக வேலை கொடுத்துக் கொண்டேயிருந்தார். அவர்களும் விரைந்து கடிதங்களை எழுதிக்கொண்டே இருந்தனர். மகாத்மாவின் கரங்கள் இரண்டும் சர்க்காவிலே தம் திறமைகளை ஓயாது தெரிவித்துக்கொண்டே இருந்தன. காலத்தை அவர் எப்படிப் பயன்படுத்திக்கொண்டு வந்தார் என்பது கண்கூடாக விளங்கியது. “யோக: கர்மஸுகௌசலம்” என்பது கீதா சாஸ்திரத்தின் கோட்பாடு. “செய்வதைத் திறம்படச் செய்வது யோகம்” என அக்கோட்பாடு பொருள்படுகிறது. மகாத்மாவின் செயல் அதற்குச் சிறந்ததொரு விளக்கமாகத் தென்பட்டது.

கேள்வி: இக்காலத்திய இளைஞர்களுக்குப் பிராமண தர்மம், க்ஷத்திரிய தர்மம், வைசிய தர்மம், சூத்திர தர்மம் ஆகியவைகளை ஒன்றாகத் தொகுத்தே வழங்க வேண்டும். புதிய கல்வித் திட்டம் அதற்கு ஒத்ததாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அதைப் பற்றித் தாங்கள் பகர்வது யாது?

மகாத்மாஜி இரண்டொரு வினாடி சிந்தனையில் மூழ்கியிருந்துவிட்டு இக்கொள்கையை ஆமோதித்தார்.

“மகாத்மாஜி, எங்கள் ஆஸ்ரமத்தில் ஹரிஜன சிறுவர், சிறுமிகளுக்கு நாங்கள் பஜனை புகட்டி வருகின்றோம். நீங்கள் உதகமண்டலத்துக்கு வரும்பொழுது எங்கள் ஆஸ்ரமத்துக்கு விஜயம் செய்து அச்சிறுவர்களின் பண்பைப் பார்வையிட்டால் நாங்கள் திருப்தியடைவோம்” என்னும் கருத்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. மகாத்மா ஜி அதற்குச் சம்மதம் கொடுத்தார்.

“மகாத்மாஜி, இன்னும் இரண்டு விண்ணப்பங்கள்” என்றேன்.

அகன்ற முகமலர்ச்சியுடன், “அவை யாவை?” என்றார் அவர்.

“உதகமண்டலத்தில் காந்தல் என்னும் பகுதியில் கொஞ்ச காலத்துக்கு முன்பு ஹரிஜனப் பெரியார் ஒருவர் மடம் ஒன்று ஸ்தாபித்திருக்கின்றார். அதில் அக்கூட்டத்தார் எத்தகைய பண்பைப் பெற்றுவருகிறார்கள் என்பதை உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். இது முதல் வேண்டுகோள்.

மகிழ்ச்சியுடன் அதற்குச் சம்மதம் வந்தது.

“உதகமண்டலத்தில் கோடப்பமந்து என்னும் பகுதியில் உள்ள கணேசர் கோயில் ஒன்றில் ஹரிஜனங்கள் பிரவேசிப்பதற்குத் தாங்கள் துவக்கம் செய்து வைத்தால் அதை ஆமோதிக்கவும், தொடர்ந்து ஹரிஜனங்களுக்கு அக்கோயிலில் வழிபாடு செய்ய உரிமை தருவதற்கும் கோயில் அதிகாரிகள் சம்மதம் கொடுத்திருக்கிறார்கள். அப்புனித கைங்கர்யத்தை நீங்கள் துவக்கி வைப்பீர்களா?”

மகிழ்வுடன் மகாத்மா இந்த இரண்டாவது விண்ணப்பத்துக்கும் இசைந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் 10 நிமிஷம், காந்தல் மடத்தில் 10 நிமிஷம், கோடப்பமந்துக் கோயிலில் 10 நிமிஷம் இருக்க அவர் இசைந்தார். இந்த மூன்று இடங்களுக்கும் மோட்டார் காரில் போவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று கேட்டார். காலத்தில் அவ்வளவு கண்ணுங்கருத்துமாக அவர் இருந்தார்.

மூன்று இடங்களிலுள்ள நிகழ்ச்சிகளுக்கும், போக்குவரத்துக்கும் சேர்ந்து 1 ½ மணி நேரமாகும் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. காரியதரிசிகளோடு அவர் கலந்து பேசினார். உதகமண்டலம் குதிரைப் பந்தய மைதானத்தில் பொதுக்கூட்டம் 5 ¾ மணிக்கு முடிவு பெறும் என்றும், அது முடிந்ததும் மகாத்மாவை இந்த மூன்று இடங்களுக்கும் அழைத்துச் சென்று 7 ½ மணிக்குள் நிகழ்ச்சிகளை முடிவுக்குக்கொண்டு வர வேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

சொல்லியபடி மகாத்மாஜி உதகமண்டலம பொதுக்கூட்டத்தினின்று வெளியே வந்தார். இரண்டு காரியதரிசிகளும் அவரும் ஒரு மோட்டார் காரில் ஏறிக்கொண்டார்கள். அவரை அழைக்க வந்த நாங்கள் மூவர் மற்றோரு காரில் முன் சென்றோம். இரண்டு மோட்டார் கார்களும் மாலை 6 மணிக்கு உதகமண்டலம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தன. ஆஸ்ரம மண்டபத்துக்குள் நாங்கள் நுழைந்தபொழுது தாய்மார்கள் அதில் நிறைந்து உட்கார்ந்திருந்தனர். அவர்களில் பெரும்பான்மையோர் அரசாங்க உத்தியோகஸ்தர்களின் மனைவிமார் என்பதை வெளியுலகம் அறியாது. அக்காலத்தில் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் வெளிப்படையாக மகாத்மாவைப் பேட்டி காணப்போனால் அவர்கள் மீது அன்றைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கொள்ளும். ஆதலால் அவர்களின் பிரதிநிதிகளாக தாய்மார்கள் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்துக்கு ரகசியமாக வந்து சேர்ந்திருந்தார்கள்.

கூட்டத்துக்குள் நாங்கள் நுழையும்பொழுது ஹரிஜனச் சிறுவர்கள் அருமையாக பஜனை பாடிக்கொண்டிருந்தார்கள். அவருக்கென்று அமைக்கப்பட்டிருந்த ஒரு பீடத்தின் மீது மகிழ்வுடன் மகாத்மா அமர்ந்தார். பக்தி ததும்பிய பஜனையில் அவர் லயித்திருந்தார். நைவேத்தியம் செய்யப்பட்டிருந்த பழத்துண்டுகள் அடங்கிய தட்டு ஒன்று அவர் முன் வைக்கப்பட்டது. இடையிடையே வலக்கையில் பழத்துண்டு ஒன்றை எடுத்து வாயில்போட்டுக்கொண்டார். அது அசாதாரணமான செயல். ஏனென்றால் குறிப்பிட்ட வேளையில் அல்லாது இடைவேளையில் அவர் எதையும் அருந்தமாட்டார். தாய்மார்கள் ஒருவர்பின் ஒருவராக தங்களது தங்கநகைகளைக் கழற்றி மகாத்மாவிடம் சமர்ப்பித்தார்கள். இடக்கையில் அவைகளை ஏற்று காரியதரிசிகளிடம் ஒப்படைத்தார். அவர்கள் அவைகளுக்கு ஜாபிதா எழுதிக்கொண்டிருந்தார்கள். பஜனையை ரசிப்பது, பழத்துண்டை அருந்துவது, ஆபரணங்களை ஏற்பது ஆகிய மூன்று செயல்களும் ஒருங்கே நிகழ்ந்துகொண்டிருந்தன. ஒதுக்கி வைத்த 10 நிமிஷம் 15 நிமிஷமாக அதிகப்பட்டுவிட்டது. ஆயினும் அச்சூழ்நிலையில் மகாத்மா பரமானந்தத்தில் மூழ்கியிருந்தார். காலம் வரம்பு கடந்து போனதை அவர் பொருள்படுத்தவில்லை.

வந்திருந்த தாய்மார்களில் ஓர் அம்மா தன் சொந்த மோட்டார் வண்டியில் வந்திருந்தார். உளவு அறியும் போலீஸ்காரர் அம்மோட்டார் வண்டி அங்கிருந்த காட்டு இலாகா அதிகாரி (Conservator of Forests) என்பாருக்கு உரியதென்று கண்டுபித்தார்கள். அதன் விளைவாக மூன்று நாளைக்குள் அவருக்கு ஊர் மாற்றம் உத்தரவு வந்துவிட்டது. நீலகிரி ஜில்லாவிலிருந்து விசாகப்பட்டணம் ஜில்லாவுக்கு அவர் விரைந்தோட வேண்டிய விபத்து நேர்ந்தது. எத்தகைய சூழ்நிலையில் அப்பொழுது நாட்டு மக்கள் இருந்தார்கள் என்பதற்கு இது பொருந்தியதொரு எடுத்துக்காட்டு ஆகும்.

ஸ்ரீ ராமகிருஷ்ண ஆஸ்ரமத்திலிருந்து காந்தல் மடத்துக்குப் போகும்பொழுது மகாத்மாவுக்கு அருகில் நான் அமர்ந்துகொண்டு சென்றேன். செல்லும்பொழுது அந்த மடத்தை ஸ்தாபித்த ஆதிமூல சுவாமிகளின் வரலாற்றை அவருக்கு விளக்கிக்கொண்டு போனேன். முழு மனதைச் செலுத்தி அவ்வரலாற்றை அவர் கேட்டுக்கொண்டிருந்தார். காந்தல் மடத்தினுள் நுழைந்ததும் நேராக ஆதிமூல சுவாமிகளின் சமாதிக்கு மகாத்மா அழைத்துச் செல்லப்பட்டார். பக்கம் பக்கம் இரண்டு சமாதிகள் இருக்கின்றன. அதைப் பற்றி மகாத்மா விசாரித்தார். ஆதிமூல சுவாமிகள் சமாதியடைந்த பிறகு அவருடைய தர்மபத்தினியார் தாம் இனி உடல் வாழ்க்கை வைத்திருக்க விரும்பவில்லையென்று ஆழ்ந்து சங்கல்பித்து 5ஆம் நாள் அவ்வம்மையாரும் உடலை உகுத்துவிட்டார். ஆக அவ்விருவர்கள் சமாதிகள் பக்கம் பக்கம் வைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தபொழுது, அது வியப்புக்குரிய விஷயம் என்று இயம்பி மகாத்மா சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கியிருந்தார்.

அரசாங்கத்தில் சிப்பந்தி வேலைகளில் ஈடுபட்டிருந்த ஹரிஜனக்கூட்டத்தார் ஒரு பகுதியினர் மகாத்மாவைத் தரிசிக்க மடத்துக்கு வரவில்லை. மடத்து அங்கத்தினர் என்றாலும் அப்போது ஆங்கு செல்லுவது தங்களுக்கு உபத்திரவமாக முடியும் என்பது அன்னவர்களின் திகில். கூடியிருந்த அங்கத்தினர்களிடன் தென்பட்ட தெய்வபக்தி, சதாசாரம் முதலியவற்றை மகாத்மா விரிவாக விசாரித்து வந்தார். சமயத்தோடு சம்பந்தப்படுத்துகிற சமுதாய சீர்திருத்தம் எத்தகைய தூய பலனைத் தருகிறதென்பதை அவர் ஆழ்ந்து கவனித்தார். காந்தல் மடவிஜயம் மகாத்மாவுக்குப் பேரானந்தத்தை ஊட்டியது. ஆங்கும் காலம் வரையறையைச் சற்றுக் கடந்து போயிற்று. ஆயினும் மகாத்மா அதைப் பொருள்படுத்தவில்லை.

கடைசியாகக் கோடப்பமந்து கணேசர் கோயிலுக்கு நாங்கல் போய்ச் சேர்ந்தோம். பெரும் கூட்டம் ஆங்கு கூடியிருந்தது. ஒதுக்கப்பட்டவர் சிலர் நீராடி தூய உடை அணிந்துகொண்டு ஆங்குக் கூடியிருந்தனர். அவர்கள் மகாத்மாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்கள். சாஷ்டாங்கமாக அவர்கள் வீழ்ந்து வணங்கியது மகாத்மாவுக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அதைத் தடுக்க அவருக்கு இயலாது போயிற்று. பூட்டி வைத்திருந்த கோயிலின் சாவி மகாத்மாவின் கையில் தரப்பட்டது. கோயிலைத் திறந்து ஹரிஜனங்களைத் தம்முடன் அழைத்துக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தார். தீபாராதனை நிகழ்ந்தது. சுண்டல் பிரசாதம் ஜாதி வேற்றுமையில்லாது எல்லார்க்கும் வழங்கப்பட்டது. மகாத்மாவும் இரண்டொரு சுண்டல்மணி ஏற்று மகிழ்வுடன் அருந்தினார். மக்கள் எல்லாரிடத்தும் காட்டிய சம அன்பு கணேசருக்கு முற்றிலும் உகந்தது என்றும், அக்கணம் முதற்கொண்டு அக்கோயிலுக்குப் புதிய அருள்நிலை வந்துள்ளது என்றும் மகாத்மாஜி பகர்ந்தருளினார். இரவு 8 மணிக்கு அங்கிருந்து விடைபெற்றுக்கொண்டு அவர் நேரே குன்னூருக்குத் திரும்பிப் புறப்பட்டார்.

குன்னூரிலே மகாத்மாஜி நிகழ்த்திய கூட்டுப் பிரார்த்தனைகள் இரண்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மகாத்மாஜி தங்கியிருந்த பங்களாவை ஒட்டி விசாலமான மைதானம் ஒன்று இருந்தது. ஆயிரக்கணக்கான பேர் ஆடவரும், மகளிரும் கூடி கூட்டு வழிபாட்டுக்காக அமைதியாக அமர்ந்திருந்தனர். மலைவாசிகளாகிய படுகப் பெண்மக்கள் தூய வெள்ளை ஆடைகள் அணிந்துகொண்டு அணியணியாக அமர்ந்திருந்தது மகாத்மாஜிக்குப் பேரானந்தத்தை ஊட்டியது. ஜாதிமத வேற்றுமையின்றி கணக்கற்ற பேர் அக்கடவுள் வழிபாட்டில் கலந்துகொண்டனர். முன்பு ஒரு காலத்தில் கண்ணன் ஊதிய குழல் ஓசைக்கு வசப்பட்டுப் பறவைகளும், விலங்குகளும் தங்களுக்கிடையிலிருந்த வேற்றுமைகளை மறந்துவிட்டு கண்ணன் முன்னிலைக்கு வந்து சேர்ந்தன. அதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இன்று நாம் கண்கூடாகக் கண்ட காட்சி ஜாதி, மத, மொழி வேற்றுமைகளைச் சிறிது நேரத்துக்காவது மறந்துவிட்டு மகாத்மாவின் கூட்டு வழிபாட்டில் மக்கள் எல்லோரும் கலந்துகொண்டனர்.

சிறிது நேரத்துக்கு ராமநாம பஜனை. அதைத் தொடர்ந்து சில நிமிஷங்களுக்கு மௌன வழிபாடு, அடுத்தபடியாக பகவத்கீதையில் இரண்டாம் அத்தியாயத்தில் இறுதியில் அமைந்துள்ள ஸ்திதப்ரக்ஞனுடைய லக்ஷணம் ஓதப்பெற்றது. சுருக்கமாக கருத்துரை ஒன்றை மகாத்மா வழங்கினார். ஒவ்வொரு வாக்கியமும் நிறைமொழிக்கு எடுத்துக்காட்டாக விளங்கிற்று. பின்பற்றியவர்கள் உள்ளத்தில் அக்கருத்து ஊடுருவிப் பாய்ந்தது. வேறு ஓர் இடத்தில் மகாத்மா பகர்ந்திருந்த கருத்து ஒன்றை ஈண்டு ஞாபகத்துக்குக் கொண்டுவருவது பொருந்தும். ‘நான் உணவு உண்ணாது ஒரு நாள் இருந்தால் அதில் நஷ்டம் ஒன்றுமில்லை. ஒரு விதத்தில் லாபமே உண்டகிறது. ஆனால் ஒரு நாள் பிரார்த்தனை பண்ணாது கழித்தால் அந்த நஷ்டத்துக்கு எவ்விதத்திலும் ஈடு செய்ய முடியாது. ஆயிரக்கணக்கான மக்களுக்கிடையில் ஒரு மகாத்மா இருந்து பிரார்த்தனை பண்ணியது அத்தனை பேருக்கும் அருள்விருந்து வழங்கியதற்கு நிகரானது. இறைவனுடைய அருளுக்குப் பாத்திரமாயிருந்ததினால் இத்தகைய தெய்வீக கைங்கரியத்தைச் செய்ய அவருக்கு இயன்றது. மகாத்மாவுக்கு மானுட வர்க்கம் முழுதும் ஒரே குடும்பம். எங்கு சென்றாலும் அங்கிருந்த மக்களுக்கு அவர் சொந்தம். அவருக்கு மக்கள் சொந்தம். இப்படி அருள்துறையிலே மாந்தரை இணைத்து வைத்து தெய்வ பக்தியை அவர் வளர்த்து வந்தது செயற்கரிய செயலாகும்.

இந்தியாவின் ஜீவ நாடி ஆத்மீகம். ஆத்மீகத்தில் ஊறியவர்களே இந்நாட்டு மக்களுக்குத் தலைவர்கள் ஆக முடியும். வாழையடி வாழையாக இந்நாட்டில் வந்துள்ள பெருமக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர் மகாத்மா காந்தி. ஆதலால்தான் நாடு முழுவதும் ஒன்று கூடி அவரை அருளாளராக ஏற்றுக்கொண்டது. மகாத்மாவும் அவர் போன்ற பெருமக்களும் வழங்கியுள்ள நன்னெறியைக் கடைப்பிடிக்குமளவு நாடு உய்வு அடையும்.

(நிறைவு.)

Advertisements