Category Archives: Series

Sri Paramahamsarin Apta Mozi – 69

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 69

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(இன்றைய ‘மொழி’ சென்ற வாரத்தின் தொடர்ச்சி. ‘பிரம்மமும் சக்தியும் ஒன்றே’ என்ற தலைப்பின் கீழ் வரும் செய்திகளை ஒருமுறை வாசித்துவிட்டு பின்பு இதனை வாசிக்கத் தொடங்குவது நலம். முந்தைய பகுதி: https://swamichidbhavananda.wordpress.com/2015/12/24/sri-paramahamsarin-apta-mozi-68/)

பிரம்மமும் சக்தியும் ஒன்றே

பக்தியின் பெருக்கால் ஆனந்த பரவசம் அடைந்துவிடுபவர்களுக்கு அன்னையின் தரிசனம் அகப்படுகிறது. பிரம்மம் என்னும் மெய்ப்பொருளையே அன்னை என்று பக்தர்கள் அழைக்கின்றார்கள். நிர்க்குண வஸ்து அதே வேளையில் சகுண வஸ்துவாகவும் இருக்கிறது. பிரம்மமும் சக்தியும் ஒன்றே. கர்மத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் அது பிரம்மம் என அழைக்கப்படுகிறது. சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகிய கர்மங்களைச் செய்து கொண்டிருக்கின்றபொழுது அதே பொருள் மூலப் பிரகிருதி எனவும் ஆதி சக்தி எனவும் அழைக்கப்படுகிறது. தீயும் தீயில் இருக்கும் வெப்பமும் இணைபிரியாதவைகள். தீ வேறு, அதன் வெப்பம் வேறு அல்ல. அங்ஙனம் பிரம்மமும் சக்தியும் ஒன்றே. அக்னியைப் பற்றிப் பேசும்பொழுது உஷ்ணத்தைப் பற்றி இயம்புங்கால் அக்னியைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம். அக்னி உஷ்ணம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை ஏற்றுக்கொண்டால் அது மற்றதையும் ஏற்றுக்கொண்டதற்குச் சமானமாகிறது. பிரம்மத்தையே அம்பிகை என்று அழைக்கின்றோம். ஏனென்றால் அவள் நம் தூய அன்புக்கு இலக்கு ஆகின்றாள். பக்தியின் மூலமே பரம்பொருள் அறியப்படுகிறது. மெய்ம்மறந்த பேருணர்வு, பேரன்பு, பக்தி, விசுவாசம் ஆகிய இவைகளைக் கொண்டே கடவுளை அடையலாம்.

ஈசுவரசந்திர வித்யாசாகர் வீட்டில் நடந்த சம்பாஷணைக்கிடையில் பரமஹம்ஸர், “பாடல் ஒன்று பாடுகிறேன். அதைக் கவனித்துக் கேளுங்கள்’ என்று பாட ஆரம்பித்தார்.

“ஒரு மனிதனுடைய எண்ணத்துக்கு ஒப்ப அவன் உள்ளத்தில் அன்பு உருவெடுக்கிறது. அன்பு எத்தகையதோ அதற்கேற்ற அருட்பேறு பக்தனுக்கு உண்டாகிறது. எண்ணம், அன்பு ஆகிய அனைத்துக்கும் அடிப்படையாய் இருப்பது விசுவாசம். அன்னையின் திருவடியாகிய அமிர்த சாகரத்தில் என் மனது மூழ்கியிருக்குமாகில் பின்பு ஆராதனைக்கும், நித்திய கர்மத்துக்கும், யாகத்துக்கும் பயன் யாது உளது? தெய்வத்தின்பால் பேரன்பு கொண்டு அவ்வன்பிலே லயித்திருப்பது சாதகன் ஒருவனுக்கு முற்றிலும் அவசியமானது. இந்த அமிர்த சாகரமே மூவாமருந்து எனப் பெயர் பெறுகிறது. மரணத்தினின்று மனிதனைப் பாதுகாக்கும் தன்மை அதனிடத்திருப்பதால் அவன் மரணமிலாப் பெருவாழ்வை ஆங்கு பெற்றுவிடுகிறான். கடவுளைப் பற்றி மிகைபட எண்ணினால் மனத்தகத்துக்குத் தடுமாற்றம் ஏற்பட்டுவிடும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். அவர்கள் கருத்தில் பொருள் ஒன்றுமில்லை. அமிர்த சாகரத்தில் மூழ்குபவர்க்கு அழிவோ, கேடோ எங்ஙனம் உண்டாகக்கூடும்? கேடுகள் அனைத்துக்கும் அதுவே மருந்து. அதை அடைகின்ற ஒருவனுக்கு மரணம் போன்ற கேடு ஒன்றுமில்லை. அவன் அமிர்த சொரூபி ஆகின்றான். மரணம் என்னும் இருளைக் கடந்தவன் ஆகின்றான் அவன். கடவுளிடத்து உள்ளன்பு உருவெடுத்து வருமாகில் பிறகு இத்தகைய புறச் சடங்குகளுக்குத் தேவை ஒன்றும் இல்லை. ஒரே புழுக்கமாக இருக்கும்பொழுது வீசுதற்கு ஒருவனுக்கு விசிறி அவசியம். மெல்லிய தென்றல் வீச ஆரம்பித்துவிடும்பொழுது விசிறிக்குத் தேவை ஒன்றும் இல்லை. அத்தென்றலுக்கு ஒப்பானது தெய்வபக்தி.”

(தொடரும்…)

மூலம்: மஹேந்திரநாத குப்தா

விளக்கம்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Sri Paramahamsarin Apta Mozi – 67

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 67

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி-மொழி 66: https://swamichidbhavananda.wordpress.com/2015/12/10/sri-paramahamsarin-apta-mozi-66/)

பகுத்தறிவும் கடவுள் காட்சியும்

புன்னகை பூத்தவராகப் பரமஹம்ஸ தேவர் வித்யாசாகரிடம் வினவினார்:

“கடவுளிடம் நீங்கள் எத்தகைய இணக்கம் கொண்டவராக இருக்கிறீர்கள்?”

வித்யாசாகர்: அதை நான் தனியாகத் தங்களிடம் ஒரு நாள் சொல்கிறேன்.

பரமஹம்ஸர்: வெறும் புத்தி சாதுர்யத்தால் கடவுளை அடைய முடியாது. அவரிடம் சரணாகதி அடைய வேண்டும். ஏட்டுக் கல்வியோடு ஒட்டிய விசாரம் அவரை அடைதற்கு உதவாது. அவரிடம் தொண்டனாக இருப்பது மிகவும் நன்று. முற்றிலும் அவரைச் சார்ந்திருந்து பணிவுடன் அவரிடம் பிரார்த்தனை பண்ண வேண்டும்.

பக்திப் பரவசம் அடைந்தவராகப் பரமஹம்ஸர் பாட ஆரம்பித்தார்.

“அம்பிகை காளிகா தேவியை முற்றிலும் அறிந்து கொள்ள வல்லவர் யார்? ஆறு தர்சனங்களும் ஒன்று கூடி அவளை அறிய வல்லவை ஆகமாட்டா. யோகி ஒருவனுடைய அந்தராத்மாவாயிருப்பவன் அன்னை பராசக்தி என்று சாஸ்திரங்கள் முறையிடுகின்றன. அந்தராத்மாவாயிருக்கும் அன்னையின் சொரூபமே அகிலாண்டம் என்பதை அறியும் யோகி அதைக் குறித்து ஆனந்தம் அடைகின்றான். தன்னுடைய கருணையினால் அவள் அனைத்தும் ஆகி இருக்கின்றாள். அண்டமும் அணுவும் அன்னையின் அருளில் அடங்கிக் கிடக்கின்றன. அன்னையின் சொரூபம் அளப்பரிய அகண்டாகாரமானது. மூலாதாரத்தில் வீற்றிருப்பவளாக அவள் வணங்கப்படுகின்றாள்; ஆறு ஆதாரங்களையும் கடந்து ஸஹஸ்ராரத்தில் வீற்றிருப்பவளாகவும் அவள் வணங்கப்படுகிறாள். அவளுடைய சொரூபம் எத்தகையது என்பதைச் சாக்ஷாத் சிவன் அன்றி வேறு யார் அறிந்துகொள்ள முடியும்! மானஸ வெளியிலே அவள் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்றாள். அந்தத் தாண்டவத்துக்குச் சாட்சியாகச் சிவனார் அங்கு வீற்றிருக்கின்றார். ஜீவர்களுள் யார்தான் அவள் சொரூபத்தை உள்ளபடி அறிந்துகொள்ள முடியும்! கரை காணாத கடலை நீந்தித் தாண்டுவது யாருக்கும் இயலாது. அன்னை பராசக்தியை அறிந்துகொள்ள முயலுதல் அதைவிடக் கடினமானது. அவளை அறிந்துகொள்ள முடியும் என்று எண்ணுவது நகைப்புக்குரிய விஷயமாகும். பக்தியால் அவளைச் சிறிது அறிய முடியும். ஏனென்றால் பக்தியின் மூலம் மனது மேலும் மேலும் தூயது ஆகிறது. தூய மனமுடையவரே அம்பிகையைக் காண வல்லவராகின்றனர். வெறும் விசாரத்தால் அவளைச் சிறிதேனும் அறிய முடியாது. கைக்கண்ணாடியில் சந்திரனைக் கட்டிவிடலாம். பக்தி பண்ணுமளவு மனது கண்ணாடி போன்று தெளிவடைகிறது. தெளிந்த மனதில் அன்னையையும் ஏகதேசம் அறிந்து கொள்ள முடியும்.”

பரமஹம்ஸர் மேலும் பகர்ந்தார்:

“வெறும் வாசா ஞானத்தால் மட்டும் கடவுளை அறிந்துகொள்ள முடியாது. பக்தியும் விசுவாசமும் பகவானிடத்து வைக்க வேண்டும்.” விசுவாசத்தின் வல்லமை எத்தகையது என்பதைப் பகர்கின்றேன் கேளும்.

(தொடரும்…)

மூலம்: மஹேந்திரநாத குப்தா

விளக்கம்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.