Category Archives: Sister Nivedita

Clarion call of Mother India

ஆசிமொழி

இந்தியாவில் கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்து வந்தவர் (Missionary) ஒருவர் அயர்லாந்துக்குத் திரும்பிப் போய்ச் சேர்ந்தார். நன்மகன் சாமுவேல் நோபிலை அவர் சென்று சந்தித்தார். அத்தருணத்தில் அவருடைய புதல்வி மார்கரெட் எலிஜபெத்துடன் உரையாடும் வாய்ப்பு அந்த மதபோதகருக்கு உண்டாயிற்று. ஆணித்தரமாக அவள் பேசவல்லவள் என்பது வந்தவருக்கு விளங்கிற்று. விடைபெற்றுப் போகும்போது சிறுமியின் முகத்தை அன்புடன் தடவிக் கொடுத்து அவர் இங்ஙனம் ஆசீர்வதிப்பாராயினர்:

“தன் தெய்வத்தைத் தேடிக் கண்டு கொள்ள இந்தியா தேசம் ஆர்வத்துடன் முயன்று கொண்டிருக்கிறது. என்னைத் தன்னிடம் வரவழைத்தது போன்று ஒரு வேளை உன்னையும் இந்திய நாடு தன்னிடத்து வரவழைக்கும். ஆங்கு செல்ல யாண்டும் ஆயத்தமாயிரு.”

இக்கூற்றைக் கேட்டதும் மார்கரெட்டினுடைய உள்ளத்தில் உணர்வும், ஊக்கமும் பொங்கி எழுந்தன. அவள் உடல் விதிர் விதிர்த்தது. தேசப்படத்தில் இந்தியா இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டும்படி பிதாவிடத்தில் அவள் பதைபதைப்புடன் வேண்டிக் கொண்டாள். பிறகு தன் சுட்டு விரலால் அத்தேசத்தை அவள் விளம்பினாள். கண்களில் ஒளி வீசியது. ஓர் உயர்ந்த லட்சியத்துக்குத் தான் ஒப்படைக்கப்பட வேண்டுமென்று பிரார்த்தனை பண்ணிவிட்டு அன்று இரவு அவள் படுக்கப்போனாள்.

மூதுரை கேட்க அழைப்பு

ஆசிரியை மார்கரெட் எலிஜபெத் நோபில் மனதுக்குள் சமய உணர்ச்சியைப் பற்றிய போராட்டம் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. சமயக்கோட்பாடுகளை அடிப்படையாகக்கொள்ளாத வாழ்வு நல்வாழ்வு ஆகாது என்பது அவளுடைய துணிபு. ஆத்ம ஞானத்துக்கு மக்களை ஆயத்தப்படுத்தாத வாழ்வு பயனற்றது என்றும் அவள் உணர்ந்தாள். சுக்கான் இல்லாத படகு காற்றடித்த பக்கம் மோதப்படும். சமய நெறியைப் பின்பற்றாத வாழ்வும் அத்தகையது. ஆனால் சமயக்கோட்பாடுகளிலோ மாறுபடும் கருத்துக்கள் பல இருக்கின்றன. அவைகளில் சில யுக்திக்குப் பொருந்தாதவைகளா யிருக்கின்றன. பிரபஞ்சத்தின் நடைமுறைக்கு விளக்கமாக வந்தமைபவைகளைக் காண்பதோ அரிதிலும் அரிதாயிருக்கிறது. கார் இருளில் நடப்பதற்கு வழிகாணாது தவிப்பவர் நிலையில் மார்கரெட் இருந்தாள். ஞான விளக்கு என்பது ஒன்று இருந்தே ஆக வேண்டும். அதை அடையப் பெற்றாலொழிய வாழ்வு என்னும் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாது. இதுதான் அவளுடைய உள்ளத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த போராட்டம். அதைப் பற்றி அவளுடைய நண்பர்களில் சிலர் அறிந்திருந்தனர்.

கலைமன்றம் ஒன்றினில் கலை வல்லுநர் பலர் கூடி இருந்தனர். கலை ஞானத்தைப் பற்றி உரையாடி மகிழ்வது அவர்களுடைய சீரிய பொழுதுபோக்கு ஆகும். அக்கற்றறிஞர் கூட்டத்தில் மார்கரெட்டும் ஒருத்தி. ஒருநாள் அத்தகைய கலைக்கூட்டம் ஒன்றுமுடிந்த பிறகு அதன் அங்கத்தினர் ஒருவர் மார்கரெட்டை நோக்கி, “சீமாட்டி இஸாபெல் மார்கஸெனுடைய மாளிகையில் ஹிந்து சந்நியாசி ஒருவர் தத்துவ விளக்கம் செய்யப் போகிறார். அதைக் கேட்க நீயும் வருகின்றாயா?” என்று வினவினார்.

இத்தகைய அழைப்பு ஒன்றை மார்கரெட் ஆசிரியை ஒரு நாளும் எதிர் பார்க்கவில்லை. அப்பேச்சைக் கேட்க அவளுக்கு ஆவல் மிக உண்டாயிற்று. எனவே ஆங்கு செல்ல இசைந்தாள். குறித்திருந்த நாளன்று மாலையில் அவள் ஆற்றுதற்கிருந்த வேறு அலுவல்களையெல்லாம் ஒதுக்கி வைத்தாள். “அந்த மனிதர் யார்? அவர் என்ன விஷயத்தைப் பற்றிப் பேசுவார்?” – இப்படியெல்லாம் மார்கரெட் தனது மனதில் எண்ணிக் கொண்டிருந்தாள். பின்பு பிரசங்கத்துக்கும் புறப்பட்டுப் போனாள். ஆனால் அதற்குரிய கூட்டத்துக்குள் நுழைதற்கு அவள் சிறிது பிந்திவிட்டாள். முன் அணியில் ஒரே ஒரு நாற்காலி காலியாக இருந்தது. கடைசியாக வந்த அவள் அமைதியாக அதில் சென்று அமர்ந்து கொண்டாள். அப்பொழுது அனைவரும் அவளை உற்றுப் பார்த்தார்கள். தனது எதிரே மேடையின் மீது பருத்த திருமேனி தாங்கிய மனிதர் ஒருவர் இனிமையும் சாந்தமும், கம்பீரமும் தாங்கிய பாங்கில் வீற்றிருந்தார். அவர் காவியுடை தரித்திருந்தார். தலையில் கட்டியிருந்த காவித் தலைப்பாகை அவருடைய தோற்றத்துக்குச் சோபை தந்தது. வட்ட வட்டமாக நறுமணப் புகையைக் கிளப்பிக் கொண்டிருந்த ஊதுவர்த்தி ஒன்று அவர் அருகில் எரிந்துகொண்டிருந்தது. குறித்த நேரத்தில் அப்பெரியாரும் பேசத் தொடங்கினார்.

தெள்ளத் தெளிந்த ஆங்கில மொழி, அமைதியில் நிலை பெற்றிருந்த மனநிலை, சீரிய கருத்துக்கள், கேட்போரது ஐயத்தையெல்லாம் அகற்றி வைக்கக்கூடிய நிறைஞான மொழிகள். அவர் பகர்ந்ததை யெல்லாம் மார்கரெட் கவனித்துக் கேட்டாள். தான் அது பரியந்தம் கற்றிருந்தது பொருளற்றது என்று உணர்ந்தாள். அவளுடைய பிடிவாதத் தன்மையும் ஆராய்ச்சித் திறமையும் தகர்ந்தெறியப்பட்டன. புதியதொரு அருள் சக்தி அவளை வசப்படுத்திக் கொண்டது. அவளுடைய மனது புதிய ஞான பூமிகளில் விரிந்தோடியது. ஏனென்றால் கடவுளை நேரே கண்டறிந்தவர் போன்று அம்முனிவர் பேசினார். பிரபஞ்சம் அனைத்துடனும் சொந்தம் பாராட்டிய பரம புருஷனாக அவர் இருக்கக்கூடுமோ என்று அவள் உணர்ந்தாள். ஆனால் அப்பொழுது அவள் கேள்வி யொன்றும் கேட்கவில்லை. மேலும் எண்ணிப் பார்க்க அவள் தீர்மானம் செய்தாள். சற்றுப் பொறுத்திருந்து அப்பெரியவருடன் பேசிப் பார்க்க வேண்டுமென்றும் அவள் தீர்மானித்தாள்.

சந்தேகம் தெளிதல்

அம்மஹான் யார் என்பதை மார்கரெட் இப்பொழுதுதான் அறிந்துகொண்டாள். மற்றவர் பலபேர் அவரைப் பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தார்கள். ஆனால் மார்கரெட்டோ அவரை நேரில் பார்த்த பிறகே அவருடைய வரலாற்றைத் தெரிந்துகொண்டாள். அவர் உலகப் பிரசித்தி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தர். இந்தியாவின் தவச் செல்வர் அவர். அமெரிக்காவில் நிகழ்ந்த சர்வமத மஹாசபையின் வெற்றி வீரர் அவர். மேல் நாட்டவர்களுடைய மனநோயை அகற்றி வைக்க வந்திருந்த மற்றொரு புத்தர் போன்றவர் அவர். ஒரு குழந்தையின் களங்கமற்ற தன்மையும், ஒரு ஞான பண்டிதனது சீரிய பாங்கும் ஒன்று சேர்ந்து அவரிடம் மிளிர்ந்தன. கீர்த்திக்கு அவர் சிறிதேனும் வசப்பட்டவர் அல்லர். இதையெல்லாம் கேட்டறிந்த மார்கரெட்டுக்குத் திகைப்பு மிக உண்டாயிற்று.

london-1896-standing-side

லண்டனில் விவேகானந்த சுவாமிகள் நிகழ்த்திய இன்னும் இரண்டு சொற்பொழிவுகளை இந்த ஆசிரியை கேட்டு மகிழ்ந்தாள். ஆனால் அதற்கெல்லாம் மேலாக சுவாமிகளுடன் நிகழ்த்திய சம்பாஷணைகள் வாயிலாகத் தனக்குத் தேவையான ஞானோபதேசத்தை அவள் பெறுவாளாயினள். அவள் பெற்ற புதிய கோட்பாடுகளைச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம். பௌதிக விக்ஞானக் கோட்பாடுகளை ஆராய்ச்சி செய்வது போன்று கடவுள் தத்துவங்களையும் யுக்தி பூர்வமாக ஆராய்ச்சி செய்யலாம். மானுட அமைப்பு உண்மையில் ஆத்ம சொரூபம் என்பதும், தெய்விகம் யாவும் அந்த ஆத்ம சொரூபத்தில் அமைந்திருக்கின்றன வென்பதும் தன் சொந்த அனுபவத்தில் அறிந்துகொள்ளக் கூடியவைகளாம். ஒழுங்குப்பாடான ஞான வாழ்க்கை வாழ்ந்து வருபவர்களுக்கு ஆத்ம ஞானத்துக்கு ஏற்ற பரிபாகம் நாளடைவில் வந்துவிடுகிறது. மக்கள் பாபத்தில் கட்டுண்டு கிடக்கிற கொள்கையைத்தான் மார்கரெட் இதுவரையில் நம்பி இருந்தாள். பாபம் என்பது அறியாமையின் விளைவு என்பதையும், மெய்யறிவு பெற்றவர் பாபத்தை முழுதும் கடந்துவிடலாம் என்பதையும் இப்பொழுது அவள் அறிந்துகொண்டாள். அதிவிரைவில் இத்தகைய விவேகம் அவளுக்கு வந்துவிட்டது.

குருநாதர் இந்தியா திரும்புதல்:

இந்தியாவில் பொதுமக்களுடைய நலத்துக்காகவும் பெண்பாலருடைய முன்னேற்றத்துக்காகவும் தாம் கொண்டிருந்த பணிவிடைத் திட்டங்கள் சிலவற்றைப் பற்றி சுவாமிகள் தமது ஆங்கிலேய சிஷ்யர் சிலர்க்கு எடுத்துச் சொன்னார். மார்கரெட்டின் மனது இப்பொழுது முற்றிலும் மாறிவிட்டது. தனது வரலாற்றை யெல்லாம் அவள் சுவாமிகளிடம் தங்குதடையின்றித் தெரிவித்தாள். அவரைக் குருநாதர் என்று அழைக்கவும் ஆரம்பித்துவிட்டாள். தான் மணம்புரிந்துகொள்ள இரண்டு தடவை முயன்றதும், அதில் தான் தோல்வியுற்றதும் இறுதியில் தனக்கு நலந்தருவனவாயினவென்று அவள் தெரிவித்தாள். இப்பொழுது தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் சுவாமிகளிடம் ஒப்படைத்துவிடுவதாகவும், இந்தியாவில் அவர் இட்டபணிவிடையை சிரமேற்கொண்டு ஆற்றி வருவதாகவும் அவள் தெரிவித்தாள். ஆனால் சுவாமிகள் அதற்கு உடனடியாக நேர்விடை ஒன்றும் கொடுக்கவில்லை. அவள் கொண்டிருந்த லட்சியத்தை இன்னும் நன்றாக எண்ணிப்பார்க்கும்படி அவர் தூண்டினார்.

தமது மேல்நாட்டு சிஷ்யர் பலர் புடைசூழ சுவாமி விவேகானந்தர் 1897ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்குத் திரும்பினார். ஆனால் அக்கூட்டத்தில் மார்கரெட் நோபில் சேர்ந்துகொள்ளவில்லை. அவள் இன்னும் சிறிது காலம் லண்டனிலேயே தங்கியிருக்க வேண்டுமென்றும், அதற்கிடையில் அவள் தன் மனதை நன்றாகப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமென்றும் சுவாமிகள் கட்டளையிட்டிருந்தார். மார்கரெட்டும் அந்த நிபந்தனைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டாள். விவேகானந்த சுவாமிகளைச் சந்தித்தான பிறகு லண்டனில் வேதாந்த விசாரம் செய்தவர்கள் ஒரு சிறு சங்கமாகக் கூடினர். தத்துவ விசாரம் செய்வதும், ஆத்ம சாதனங்கள் புரிவதும் அவர்களின் நோக்கமாயிற்று. அந்த ஸத் சங்கத்தவர்களுக்கிடையில் மார்கரெட் நோபில் முக்கியமான இடம் பெற்றிருந்தாள்.

நாள் ஏற ஏறத் தான் இந்தியாவுக்கே போய்விட வேண்டுமென்ற அவா மார்கரெட்டுக்கு மிகுதியாக உண்டாயிற்று. அவள் சுவாமிகளுக்கு எழுதிய கடிதத்தில் அடங்கியிருந்த கருத்தாவது:

“இந்திய மக்களுக்கு நான் எவ்விதத்திலாவது பயன்படுவேனா என்பதைப் பற்றி வெளிப்படையாகவும், தெளிவகவும் எனக்கு எடுத்துச் சொல்லுங்கள். இந்தியாவுக்கே வந்துவிட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். வாழ்க்கைப் பயனை நான் அடைவது எங்ஙனம் என்பதை இந்தியாதான் எனக்குப் புகட்டியாக வேண்டும்.”

sister_nivedita

இதற்கு விடையாக விவேகானந்த சுவாமிகள் எழுதிய கடிதத்தின் சுருக்கம்:

“இந்தியாவுக்குப்  பணிவிடை செய்ய வேண்டும் என்ற  மனப்பூர்வமான எண்ணம் உனக்கு உண்டு. நீ தூய்மைக்கு இருப்பிடம். உள்ளன்போடு மன்னுயிர்களை நீ நேசிக்கின்றாய். நீ உறுதியான உள்ளம் படைத்தவள். இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக உன் உடலில் வீர ரத்தம் (Celtic blood) ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே ஈண்டு ஆற்றுதற்கிருக்கும் அரும்பெரும் செயலுக்கு நீயே தகுதி வாய்ந்தவள்.

இத்தகைய செயலிலே இறங்குதற்கு முன்பு நீ நன்றாய் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு வேளை உனது முயற்சியில் நீ தோல்வியடைந்துவிட்டாலோ, அல்லது உனக்குச் சலிப்புத் தட்டிவிட்டாலோ அதைக் குறித்து நான் ஏமாற்றம் அடைந்துவிட மாட்டேன். நீ இந்தியாவுக்குப் பணிவிடை செய்தாலும் சரி; செய்யாது விட்டுவிட்டாலும் சரி. நீ வேதாந்தக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டாலும் சரி; ஏலாது புறக்கணித்துவிட்டாலும் சரி. என்னைப் பொறுத்தவரையில் என் உயிர் இருக்கும் பரியந்தம் நான் உனக்கு உதவி செய்வேன். யானையின் தந்தங்கள் வெளியே வருகின்றன; பிறகு உள்ளே போவதில்லை. நல்லான் ஒருவன் கொடுத்துள்ள உறுதி மொழியைத் திருப்பி எடுத்துக்கொள்ளமாட்டான். என் உதவி யாண்டும் உனக்கு உண்டு என்று நான் உறுதி கூறுகிறேன். பிறகு எச்சரிக்கையொன்று உனக்குச் செய்கிறேன். தன் கையே தனக்கு உதவி என்னும் பாங்கில் இங்கு நீ வாழ்ந்திருக்க வேண்டும். பிறர் ஆதரவில் இங்கு நீ வாழ்ந்திருக்க விரும்ப வேண்டாம்.”

இந்த பாங்கில் விவேகானந்த சுவாமிகள் மார்கரெட்டுக்குக் கடிதம் எழுதியனுப்பினார். இது அவளை உற்சாகப் படுத்தியது. இந்தியாவுக்குப் போக வேண்டுமென்று தீர்மானப்படுத்திக் கொண்டாள். அமைதியாக அதற்கு ஏற்பாடுகள் ஆய்க்கொண்டிருந்தன. தான் நடாத்தி வந்த பள்ளிக்கூடத்தைத் தனது தங்கை மே நோபிலிடம் ஒப்படைத்தாள். இனி, தனது சீரிய நோக்கத்தைப் பற்றியும், உற்றாரை விட்டுப் பிரிந்துபோக வேண்டிய அவசியத்தைப் பற்றியும் தாயிடம் சொல்லியாக வேண்டும். அது பெருந்துன்பத்துக்கு ஏதுவான செயல். ஆயினும் அமைதியாகவும், உறுதியாகவும் மார்கரெட் விஷயத்தை எடுத்துத் தாய்க்கு விளக்கிச் சொன்னாள். தெய்வாதீனமாக தாய் மேரி நோபில் அதைக் குறித்துத் துயரப்படவில்லை. “இறைவா, உன் திருவுளம் அங்ஙனம் இருக்குமாயின் என் குழந்தையை உனக்கு ஒப்படைக்கிறேன்.” அன்று சொன்ன அந்தப் பிரார்த்தனையை இன்று திரும்பவும் நினைவுக்குக் கொண்டு வந்தாள். தன் கணவன் சாமுவேல் நோபில் இறுதிக் காலத்தில் சொல்லி வைத்துவிட்டுப் போனதையும் இப்பொழுது நினைவுக்குக் கொண்டுவந்தாள். “செயற்கரியது ஏதாவது ஒன்றை மார்கரெட் செய்து சாதிப்பாள். அவள் போக்குக்கு இடைஞ்சல் ஒன்றும் செய்ய வேண்டாம்.” இங்ஙனம் இயம்பிவிட்டு அவர் இவ்வுலக வாழ்வை நீத்துவிட்டார்.

“மகளே, உன் விருப்பப்படி செய்” என்ற ஆசீர்வாதம் தாயின் வாயினின்று வெளியாயிற்று. மார்கரெட்டுக்கு மனம் குளிர்ந்தது.

குறித்த நன்னாளும் வந்தது. மார்கரெட் கப்பல் ஏறியாய்விட்டது. அது புறப்படும் வரையில் தாயும், உடன் பிறந்தவர்களும், சிநேகிதர்களும் துறைமுகத்து மேடையிலேயே நின்று கொண்டிருந்தனர். மூடுபனியில் கப்பல் மறைந்தது. தான் நாடிச் சென்ற ஞான ஒளியினிடத்து மார்கரெட் தன் கருத்தைச் செலுத்தினாள்.

மார்கரெட் இந்தியா வருகை:

கல்கத்தா வந்து சேர்ந்த மார்கரெட்டை உடனே அன்னை சாரதா தேவியாரிடம் அழைத்துச் செல்வது விவேகானந்தருடைய கடமையாயிற்று. அந்த சந்திப்பு ஒரு சரித்திரபூர்வமான நிகழ்ச்சியாகும். மேல் நாட்டுப் பண்புக்கு இருப்பிடம் மார்கரெட் என்பவள். இந்தியப் பண்பின் உச்சநிலை அன்னை சாரதா தேவியார். தயங்கிக்கொண்டு மார்கரெட் அன்னையின் முன்னிலையில் வந்து நின்றாள்.

அன்பினுக்கும் உண்டோ அடைக்குந்தாழ்!:

sarada_devi_and_sister_nivedita

“மகளே, அருகில் வந்து அமர்ந்திரு” என்ற அமுதமொழி அன்னையின் வாயினின்று வெளியாயிற்று.  மெய்ம்மறந்தவளாய் மார்கரெட் பக்கத்தில் சென்று உட்கார்ந்தாள். அவளுடைய தலையைத் தடவிக் கொடுத்தார் அன்னையார். நீங்காத தொடர்வும் அப்பொழுதே உண்டாய்விட்டது. மார்கரெட் ஆங்கிலத்தில் மொழிந்தாள். அன்னையார் வங்காளத்தில் பேசினார். ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டார்கள். அன்பினுக்கும் உண்டோ புறமொழி என்னும் அடைக்குந்தாழ்!

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பிறந்த தின விழா நிகழ்ந்த பிறகு மாதம் ஒன்று கடந்து சென்றது. மார்கரெட்டுக்கு ஞான தீக்ஷை செய்து வைக்க வேண்டிய காலமும் அணுகியது. 1898ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதியன்று அப்புனிதச் சடங்கு நிறைவேறியது. அதற்காக அவள் ஒருநாள் முழுதும் பட்டினியிருந்து மௌனமாகப் பிரார்த்தனை பண்ண வேண்டியதாயிற்று. ஞான குருவாகிய விவேகானந்த சுவாமிகள் அதற்கேற்ற பூஜை ஒன்றைச் செய்து முடித்தார். தமது எதிரில் மார்கரெட்டை அமர்ந்திருக்கச் செய்து ஆழ்ந்து தியானத்தில் மூழ்கினார். அப்பொழுது அவள் மனத்தகத்து ஞான விளக்கேற்றி வைக்கப்பட்டது போன்று உணர்ந்தாள். புதிய ஞானப் பிறப்பு எடுத்ததற்கு அறிகுறியாக நெற்றியிலே திருநீறு பூசப்பட்டது. சிஷ்யை ஜபம் செய்ய வேண்டிய திருநாமம் ஓதப்பட்டது. பிறகு ‘நிவேதிதை’ என்னும் புதிய தீக்ஷாநாமம் அவளுக்கு அளிக்கப்பட்டது. கடவுளுக்குப் படைக்கப்படும் பொருள் நிவேதனம் என்று அழைக்கப்படுகிறது. நிவேதிதை என்பது கடவுளுக்குப் படைக்கப்பட்டவள் எனப் பொருள்படுகிறது.

தீக்ஷை பெறுதல்:

முப்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு மார்கரெட் மண்ணுலகில் பிறந்தபொழுது, ஈன்றெடுத்த தாய் அவளை இறைவனுக்கு ஒப்படைப்பதாகப் பிரார்த்தனை பண்ணினாள். அப்பொழுது வெறும் எண்ணமாயிருந்தது இப்பொழுது முற்றிலும் மெய்யாய்விட்டது. நிவேதிதை என்று அவளுக்கு அமைந்த தீக்ஷாநாமமும் முற்றிலும் பொருத்தமானதே. பரம்பொருளை சாக்ஷாத்கரித்துள்ள பரமாசாரியராகிய விவேகானந்த சுவாமிகள் அவளுக்கு ஞான குருவாக வாய்த்தது அவள் பெற்ற பாக்கியமாகும்.

பழைய பெயர், பழைய ஊர், பழைய வாழ்க்கை முறையாவும் புறக்கணிக்கப்பட வேண்டியவை. அவைகளின் ஞாபகமே இனி மனதைவிட்டுப் போய்விட வேண்டும். புதிய பெயர், புதிய வாழ்வு, புதிய சூழ்நிலை, புதிய சொரூபம் – ஆகியவைகளை இப்பொழுது எடுத்தாய்விட்டது. முயன்றால் மனிதன் துவிஜன் – இருபிறப்பாளன் ஆகக்கூடும் என்பதன் கருத்து இதுவே. வெறும் சடங்கின் வாயிலாக ஒருவன் இரு பிறப்பாளன் ஆய்விட முடியாது. வாழ்க்கை முறையே மேலானதாக மாறியமைகின்றபொழுது ஒரு மனிதன் இரு பிறப்பாளன் ஆகின்றான். இப்பொழுது சகோதரி நிவேதிதைக்குப் புதிய பிறப்பு வந்துவிட்டது. ஞான குருவிடம் தன்னை ஒப்படைக்குமளவு ஞான குருவின் மூலமாக தெய்வத்தின் அருள் தனக்குக் கிட்டுமென்பதை அப்பொழுது அவள் அறியலானாள்.

swami-and-sis-niveditasm

சுவாமி விவேகானந்தர் – சகோதரி நிவேதிதை

அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்

கோயிலாய், அடியேன் நெஞ்சில்

இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா

டாம்பயிர்க்கு மழையாய், இங்கு

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.

-சி. சுப்பிரமணிய பாரதியார்.


இன்று சகோதரி நிவேதிதை அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் இயற்றிய ‘சகோதரி நிவேதிதை’ என்ற புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி மட்டும் பதிவேற்றிப்பட்டுள்ளது.

Advertisements