Category Archives: Sri Ramakrishna Paramahamsa

Sri Paramahamsarin Apta Mozi – 121

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 121

Apta mozi

[முந்தைய பகுதி – மொழி 120: https://swamichidbhavananda.wordpress.com/2017/03/09/sri-paramahamsarin-apta-mozi-120/ ]

தொண்டர்தம் பெருமை

பரமஹம்ஸர் பகர்ந்ததின் கருத்து யாதாயிருக்குமோ என்று மஹேந்திரர் தமக்குள்ளே எண்ணிப் பார்த்தார். ‘இப்பிரபஞ்சம் என்னும் சிறையினுள் இவர்கள் எல்லாரும் அடைபட்டுக் கிடக்கின்றனர் என்கிற கருத்துப்பட பரமஹம்ஸர் பேசினாரா என்ன? அவர்களுடைய பரிதாபகரமான நிலையை முன்னிட்டே பரமஹம்ஸர் இத்தகைய விண்ணப்பத்தை அம்பிகையிடம் தெரிவித்தார்.’

புறவுல உணர்வு இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பரமஹம்ஸருக்கு உண்டாயிற்று. காசிப்பூரிலிருந்து வந்திருந்த நீலமாதவன் என்கின்ற அன்பரும் மற்றொரு பிரம்ம சமாஜத்து அங்கத்தினரும் அவ்வூரிலே அக்காலத்தில் வசித்திருந்த பாவாஹாரி பாபாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பிரம்ம சமாஜத்து அங்கத்தினர்களில் மற்றொருவர் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் செய்தி ஒன்று தெரிவித்தார்: “ஐயனே, இவர்கள் இருவரும் காசிப்பூரில் வசித்துவரும் பாவாஹாரி பாபாவை நேரில் சென்று பார்த்து வந்திருக்கிறார்கள். ஆகையினால்தான் இவர்கள் அந்த மஹானைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சான்றோர் திருக்கூட்டத்தில் அவரைப் பணிந்து சேர்த்துவிடலாம்.”

பரமஹம்ஸ தேவர் அடைந்திருந்த பரவசநிலை இன்னும் முற்றிலும் மாறவில்லை. ஆதலால் வாய் திறந்து பேச அவருக்கு இயலவில்லை. இச்செய்தியைக் கேட்டு அவர் வெறுமனே புன்னகை பூத்தார்.

பிரம்ம சமாஜத்து அன்பர் மேலும் பகர்வாராயினர்: ‘அந்த மஹான் தங்களுடைய திருவுருவப் புகைப்படம் ஒன்றைத் தமது அறையில் வைத்திருக்கிறார்’

அதைக் கேட்ட பரமஹம்ஸர் புன்சிரிப்புடன் தமது மேனியைச் சுட்டிக் காட்டி, “இது வெறும் தலையணை உறை போன்றது” என்றார். சிறிது பேச ஆரம்பித்ததும் பரமஹம்ஸருக்குப் புறவுலக உணர்வு முற்றிலும் வந்துவிட்டது. மேலும் அவர் இயம்பினதாவது: “தொண்டர்களுடைய உள்ளம் தெய்வத்துக்கு இருப்பிடம் என்பதை நீ நன்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்வாயாக. கடவுள் எங்கும் நிறைபொருள் என்பது உண்மை. ஆனால் தொண்டன் ஒருவனுடைய உள்ளத்திலே அவர் சிறப்புற்று வீற்றிருக்கிறார். மிராசுதார் ஒருவருக்கு நிலங்கள் பல இருக்கின்றன. வெவ்வேறு நிலங்களில் வெவ்வேறு இடங்களில் அவர் வாழ்ந்திருப்பார். ஆயினும் அவர் பெரிதும் வாழ்ந்திருக்கும் மாளிகை ஒன்று இருக்கும். அந்த மிராசுதார் எங்கே இருக்கிறார் என்று யாராவது கேட்டால் இன்ன இல்லத்தின் முன்மண்டபத்தில் அவரைக் காணலாம் என்று ஏனையோர் இயம்புவார்கள். அதேபாங்கில் எங்கும் நிறைந்திருக்கின்ற கடவுள் சிறப்பாக பக்தனுடைய உள்ளத்தில் எழுந்தருளி இருக்கின்றார். இக்கடவுளைப் பல பாங்குடைய மக்கள் பல பெயரிட்டு அழைக்கின்றனர். ஞானிகள் அவரைப் பிரம்மம் என்றும் பகர்கிறார்கள். யோகிகளோ அதே மெய்ப்பொருளை ஆத்மன் என்று அழைக்கின்றனர். இனி, பக்தர்களுக்கிடையில் அவர் பகவான் எனப் பெயர் பெற்று இலங்குகின்றார். மக்களுள் பிராம்மணன் என்று அழைக்கப்படும் மனிதன் ஒருவன் இருக்கிறான். அவன் கோயிலிலே பூஜை பண்ணும்பொழுது அவனுக்கு அர்ச்சகர் என்றோ, பூசாரி என்றோ பெயர் வருகிறது. அதே மனிதன் மடைப்பள்ளியில் அமுது ஆயத்தப்படுத்தும்பொழுது அவனுக்குச் சமையல்காரன் என்னும் பெயர் வந்துவிடுகிறது. ஞானி ஒருவன் கடவுளைக் குறித்து விசார மார்க்கத்தில் செல்லுகிறான். கட்புலனாகும் பொருள்களையெல்லாம் மெய்ப்பொருள் இது அல்ல, இது அல்ல என்று அவன் விசாரித்துத் தள்ளுகிறான். இப்படி ஆராய்ச்சி செய்துகொண்டு போகிற ஞானி முடிந்த நிலைக்கு வருகிறான். மெய்ப்பொருளைக் குறித்து என்னென்று பகர்வதென்று அவன் திகைக்கிறான்”

(தொடரும்…)

 

Advertisements

Sri Ramakrishna Jayanthi-2017-English/Tamil

(Scroll down to read in Tamil)

The Truly Educated

(Part – IV)

-Swami Chidbhavananda

(Special article for the rememberance of Sri Ramakrishna Paramahamsa’s Birth Day 2017.)

Drawback of British Education System:

Every educated individual clamours for his rights; and he struggles to obtain them. The political movements that sprout are all calculated to fight for rights. The educated on the other hand are expected to discharge their duties irrespective of the rights; but that is exactly what our educated ones do not. These horridly self-centred ones are out to grab and not to give. People at all levels are feverishly fighting for more privileges and this idea of claiming more and yet more originated with the educated ones. They do in fact today receive more and yet more, but there is not in them any appreciable discharge of duty. In short, all rights and hardly and duty – is the motto that is gaining ground in the minds of the educated.

Dedication:

The Paramahamsa and his apostle have set on foot a movement which if faithfully pursued is bound to arrest this depraving trend of selfishness. That service to humanity is on a par with adoration of the Almighty is the divine touch in this movement. It is the duty of each and every one to render some kind of service to fellow beings. Remuneration is completely beside the point here. For an hour a day or for aday in the month if one forgets oneself in the pious service of others one becomes worthy of divine grace. Modern education is singularly devoid of this noble element. But the Paramahamsa has resuscitated that element from the ancient scheme of life. Service to humanity ought to get its place in the future education of the land.

Gurudevar at Panchavati

Our nation culture is based on dedication and service. Indian national education should therefore be based as in the distant past on the right attitude and its translation into action. The child should cultivate the attitude of belongingness to the parents. This attitude has to be developed into manifesting itself in service to the parents to start with. In the name of so-called basic education there is a tendency today to make the child do some labour in order to earn some remuneration. This practice is pronounced in some of the western countries. For rendering some domestic service parents liberally pay their children. And those children are nurtured in the feeling that they have started earning something on their own. And this feeling is the nursery of selfishness. The child instead of forgetting itself in the way of claiming remuneration for service.

Ramakrishna started his education in tune with the ancient way, by serving his parents to begin with. He never for a moment harboured a thought for himself. High ideas came to him unconsciously from his parents and he as a matter of course rendered physical service to them. This is the ancient Indian basic education. Education started with service to parents, but did not stop there. Untutored by anybody Ramakrishna even as a boy volunteered to serve the holy men who halted in his village on their way to Jagannath. He would gather faggots for their fire, scrub their vessels and bring water for them. Here there was no thought of self or of remuneration. An attitude of devotion and humility characterized his service on the ancient Indian pattern.

The ancient Indian education recognized two factors, nature and nurture, in the human life. The inborn tendencies and stored-up attitudes constitute nature. That is the capital with which the student has to start his career. Now through nurture this nature can be modified and sublimated and turned to advantage. This constituted the entire scheme of education of our ancients. How one lived and disciplined one’s life was all in all then. What attitude one took towards society was what mattered. Gathering knowledge and information came last. With ease and naturalness Ramakrishna lived this ideal. It is for us to catch it if we are earnest about our national regeneration. The Upanishadic injuction

मातृदेवो भव, पितृदेवो भव, आचार्यदेवो भव, अतिथिदेवो भव ||

Matrudevo bhava, pitrudevo bhava, acharyadevo bhava, atithidevo bhava ||

“May the mother be a god to you. May the father be a god. May the teacher be a god. May the guest be a god to you” found a literal expression in this modern Master.

Paramahamsa has actually lived the Upanishadic ideal. His life is an endless and bounteous gift to humanity. Dedication and service cannot better be expounded than through his personality and life. Serving the Maker and serving mankind are on apar with each other. The one is as sacred and all-embracing as the other.
Modern education is claimed to be liberal and nationwide. But is inculcates the demoniac attitude of self and individualism. Our duty now is nothing short of weaning ourselves from this evil. All that we have to do today is not to cry to scrap the prevailing education system, but enshrine in it the Vedic ideal of reverence and service.

[Today (28.02.2017), Sri Ramakrishna Paramahamsa’s Birth day. So, we published an article in 4 parts were taken from “Ramakrishna lives Vedanta” book (chapter no.16) written by Swami Chidbhavananda, originally written in Tamil as “Paramahamsarin perumai”.]


கல்விமான்

(பகுதி-4)

-சுவாமி சித்பவானந்தர்.

(குருதேவரின் ஜெயந்தியையொட்டிய சிறப்புப் பகிர்வு 2017.)

மேல் நாட்டுக் கல்வியின் குறைபாடுகள்:

மேல் நாட்டுக் கல்வியினின்று நமது மனதில் புகுந்துள்ள இரண்டு பெரிய குறைபாடுகள் நம்மை விட்டு இன்னும் அகன்றுபோனபாடில்லை. கல்வி கற்றிருக்கும் ஒவ்வொரு மனிதனும் தனது உரிமையைப்பற்றி மிகைப்படப் பேசுகிறான். உரிமையைப் பெறுதற்குப் பாடுமிகப்படுகிறான். இப்பொழுது உதிக்கின்ற அரசியல் இயக்கங்கள் எல்லாம் விதவிதமான உரிமைகளைக் கைப்பற்றுதல் பொருட்டேயாம். தம் கடமைகளை நன்கு நிறைவேற்றுகின்றவர்களே கற்றறிந்த மேன்மக்கள் ஆவர். தங்கள் உரிமைகளைத் தங்களுக்கு முறையாக நல்கியாக வேண்டுமென்று கிளர்ச்சி செய்கின்றவர்கள் கயவர்கள் ஆகின்றனர். இன்றைக்கு நாடெங்கும் தென்படுகிற கிளர்ச்சிகளெல்லாம் அவரவர்க்குச் சேரவேண்டிய உரிமைகளைப் பெறுதல் பொருட்டேயாம். தொழிலாளர்கள் தங்கள் கூலியை அதிகப்படுத்த வேண்டுமென்று கிளர்ச்சிகள் செய்கின்றனர். அப்படிக் கிளர்ச்சி செய்யும்படி அவர்களுக்குப் பாடம் புகட்டியவர்கள் கற்றறிவாளர்களேயாம். ஏற்றுக்கொண்ட கூலிக்கேற்ப தொழிலாளர்கள் பாடுபடுவதில்லை. மாடு போன்று உழைத்துப் பாடுபட வேண்டாமென்று அவர்களுக்குத் துர்புத்தி புகட்டியவர்களும் கற்றறிவாளர்களேயாம். தொழிலாளிகளுடைய மனப்பான்மையைவிட கல்வி கற்றவர்களுடைய மனப்பான்மை அதிகமாகக் கெட்டுப்போயிருக்கிறது. கல்வியையும் அறிவையும் பயன்படுத்தி உத்தியோகம் பார்க்கின்றவர்கள் பொறுப்பற்றவர்களாக நடந்துகொள்கின்றனர். தங்கள் சம்பளம் மேலும் மேலும் அதிகரிக்க வேண்டுமென்று அவர்கள் போராடுகின்றனர். அதற்கேற்ற கிளர்ச்சிகளையும் உண்டு பண்ணுகின்றனர். ஆனால் தங்களுடைய ஆற்றல் முழுவதையும் பொது நலத்துக்காகப் பயன்படுத்த வேண்டுமென்ற மனப்பான்மை அவர்களுக்கு வருவதில்லை. அதிகப்படியான சம்பளத்தைப் பெறுவதும் குறைந்த வேலையைச் செய்வதும் தங்களுடைய வாழ்க்கையின் குறிக்கோளாகக் கல்வி கற்றுள்ளவர்கள் கருதி வருகின்றனர்.

இத்தகைய மனப்பான்மைக்கு முட்டுக்கட்டைபோடுகின்ற முறையில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும், சுவாமி விவேகானந்தரும் புதியதொரு இயக்கத்தைத் துவக்கி வைத்திருக்கின்றனர்.

கல்வித் திட்டத்தில் வரவேண்டிய மாற்றம்:

மானுடர்க்குச் செய்கின்ற சேவை ஈசுவரனுக்குச் செய்கின்ற ஆராதனைக்கு ஒப்பாகிறது. ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒருவிதத்தில் பிறர்க்குப் பணிவிடை செய்து பழக வேண்டும். அதற்குக் கைம்மாறாக அவர் எதையும் ஏற்றுக்கொள்ளலாகாது. ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்தில் ஒரு மனிதன் சுயநலப்பற்றை மறந்தவனாகப் பிறர்க்குப் பணிவிடை செய்வானாகில் அவன் கடவுள் அருளைப் பெறத் தகுதியுடையவனாகின்றான். இங்ஙனம் மானுடர்க்குச் சேவை செய்தல் என்னும் பயிற்சியை இக்காலத்திய கல்வித் திட்டம் வழங்கவில்லை. பண்டைப் பண்பினின்று பரமஹம்சரின் மூலமாகத் தோன்றிய புதிய இயக்கம் ஆகும் இது. இனி வரும் கல்வித் திட்டத்தில் மானுட சேவை முக்கியமான இடம் பெற்றாக வேண்டும்.

நம் தேசியப் பண்பு தியாகத்தையும், தொண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இப்பொழுது கல்வித்திட்டத்தில் விரைவில் மாறுதல் ஒன்று உண்டாய் வருகிறது. எல்லார்க்கும் அடிப்படைக் கல்வி (Basic Education) வழங்கவேண்டுமென்று பலர் பேசி வருகின்றனர். எது அடிப்படைக் கல்வி என்பதைப் பற்றி அவர்களுக்கிடையில் இன்னும் தெளிவு உண்டாகவில்லை. ஒவ்வொரு மாணாக்கனும் தனக்குத்தானே தொழில்புரிந்து சிறிது சம்பாத்தியம் செய்ய வேண்டும் என்னும் கருத்தைப் பெரும்பாலர் கொண்டிருக்கின்றனர். பிறர் உதவியை நாடியிருப்பதைவிடத் தன் கையே தனக்குதவியாயிருப்பது மேலானது. உழைத்துப் பாடுபடுதலில் ஊக்கம் கொண்டிருக்க வேண்டுமென்று சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் பாடம் புகட்ட வேண்டும். ஆனால் அதிலுள்ள குறைபாடு ஒன்றைத் தவிர்ப்பது முற்றிலும் அவசியமாகிறது. தன் பொருட்டு ஒவ்வொருவனும் உழைக்க வேண்டும் என்ற அடிப்படைக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சிறுவனாயிருந்தபொழுதே செய்த செயல் இதைவிடச் சிறந்ததாகும். அவருடைய செயல் இந்தியப் பண்புக்கு விளக்கமாகிறது. தம் பொருட்டு அவர் எதையும் செய்யக்கிடையாது. முதியோர்களுக்குப் பணிவிடை செய்வதன் மூலம் கல்வியும், பயிற்சியும் வந்தமைய வேண்டுமென்பது பண்டைப் பண்பு. சீரிய கருத்துக்கள் பலவற்றை அவர் தாய் தந்தையாரிடமிருந்து பெற்றார். தாய் தந்தையாருக்கு அவர் ஓயாது பணிவிடை செய்துகொண்டிருந்தார். நவீன உலகம் இந்தப் பண்பை அறவே மறந்துவிட்டது. சிறுவனாக அவர் இருந்தபொழுது கிராமத்துப் பக்கம் வந்த சாது மகாத்மாக்களுக்கு அவர் பணிவிடை செய்தார். அவர்கள் சமைப்பதற்கு விறகு தேடிக்கொடுப்பது, நீர் எடுத்து வருவது, பாத்திரம் துலக்கித் தருவது போன்ற பணிவிடைகளை பக்தியுடனும் பணிவுடனும் அவர் செய்து வந்தார்.

இப்பொழுது நாம் நல்கிவரும் அடிப்படைக் கல்வியானது அவரவர்க்குத் தேவையானதை அவரவரே தேடிக்கொள்ளுதல் என்னும் கோட்பாட்டைக் கொண்டுள்ளது. ஆனால் சின்னஞ்சிறு வயதிலேயே தனக்காகவென்று வேலை செய்வதைவிடத் தன்னைப் பேணிவரும் தாய் தந்தையருக்காகப் பணிவிடை செய்தல் சீரிய பயிற்சியாகும். யான் என்னும் அகங்காரத்தை அது துடைத்துவிடுகிறது. பிறகு கல்வி புகட்டும் ஆசிரியருக்குப் பணிவிடை செய்து பழக வேண்டும்.

मातृदेवो भव, पितृदेवो भव, आचार्यदेवो भव, अतिथिदेवो भव ||

‘மாத்ரு தேவோ பவ’, ‘பித்ரு தேவோ பவ’, ‘ஆசார்ய தேவோ பவ’

என்னும் வேதவாக்குகளைப் பணிவிடையின் மூலமாகச் செயலுக்கு கொண்டு வருவதே சிறந்த கல்வி முறையாகும். இதைத்தான் அடிப்படைக் கல்வி என்று இயம்ப வேண்டும். யான், எனது என்கின்ற எண்ணத்தை வளர்க்கின்ற கல்வி நாளடைவில் பல கேடுகளை உண்டுபண்ணிவிடும். நான் எனக்காக வாழ்பவன் அல்ல, சமுதாயத்துக்காக வாழ்பவன் என்னும் எண்ணத்தை வளர்க்கிற கல்வி சிறந்த கல்வியாகும். உடல் நலத்துக்காக உறுப்புகள் இருக்கின்றன. உடல் நலத்திலிருந்தே உறுப்புகள் நலனைப் பெறுகின்றன. அங்ஙனம் சமுதாய நலத்துக்குத் தனி மனிதர்கள் உரியவர்கள் ஆகிறார்கள். அது பரமஹம்சர் பயின்ற கல்வி. அவர் பெற்றிருந்த மனப்பான்மையை நாட்டு மக்கள் அனைவரும் பெற்றாக வேண்டும். அந்தச் சீரிய மனப்பான்மையுடன் கூடிய கல்வியை வேண்டியவாறு புகட்டலாம். அது தியாக புத்தியை அடிப்படையாகக் கொண்டது. சுயநல உணர்வு கேடுகளை வளர்க்கும். தியாக புத்தியோ கேடுகளைத் தவிர்க்கும். கடவுளுக்காகத் தன்னை ஒப்படைப்பதும் பொதுநலத்துக்காகத் தன்னை ஒப்படைப்பதும் ஒரே குறியின்கண் மனிதனை எடுத்துச் செல்கின்றன. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் காட்டியுள்ள கோட்பாடு இதுவேயாம்.

[இன்று (28.02.2017) ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த தினமாகும். சுவாமி சித்பவானந்தர் அவர்கள் இயற்றிய ‘பரமஹம்சரின் பெருமை’ என்னும் நூலில் ‘கல்லூரிப் படிப்பு’ என்ற தலைப்பின் கீழ் உள்ள செய்திகளை ‘கல்விமான்’ என்ற தலைப்பில் குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஜெயந்தி தினத்தையொட்டி 4 பகுதிகளாக பதிவேற்றப்பட்டுள்ளது.]