Category Archives: Thiruppalliyezuchi

Thiruppalliyezuchi – 10

தை 1

15.01.2016-வெள்ளி

மாணிக்கவாசகர் இயற்றிய

திருப்பள்ளியெழுச்சி

10

புவனியிற் போய்ப்பிற வாமையி னாணாம்

போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி

சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலா

மவன்விருப் பெய்தவு மலரவ னாசைப்

படவுநின் னலர்ந்தமெய்க் கருணையு நீயு

மவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள வல்லா

யாரமு தேபள்ளி யெழுந்தரு ளாயே.


புவனியில் போய்ப் பிறவாமையின் நாள் நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி

சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கித்

திருப்பெருந்துறை உறைவாய் திருமால் ஆம்

அவன் விருப்பு எய்தவும் மலரவன் ஆசைப்

படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்

அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்

ஆர் அமுதே பள்ளி எழுந்தருளாயே.


அருஞ்சொற்பொருள்:

புவனியில், அவனியில் – நிலவுலகில்.

அவமே – வீணிலே,

மலரவன் – பிரம்மதேவன்.


பொழிப்புரை:

சுகபோகம் வேண்டி சுவர்க்கத்தை நாடிய தேவர்களுக்குப் பிறகு அதில் சலிப்பு உண்டாகிறது. சிவனுடைய அருளுக்குப் பாத்திரமாகிச் சிவஞானம் பெற அவர்கள் மண்ணுலகில் வந்து பிறக்க விரும்புகின்றனர். அடியார்களை ஆட்கொள்ள அருள் சக்தியுடன் மண்ணுலகுக்கு எழுந்தருள்பவனே பள்ளி எழுந்தருள்வாயாக.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)

Advertisements

Thiruppalliyezuchi – 9

மார்கழி 29

14.01.2016-வியாழன்

மாணிக்கவாசகர் இயற்றிய

திருப்பள்ளியெழுச்சி

9

விண்ணகத் தேவரு நண்ணவு மாட்டா

விழுப்பொரு ளேயுன தொழுப்படியோங்கண்

மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே

வண்டிருப் பெருந்துறை யாய்வழி யடியோங்

கண்ணகத் தேநின்று களிதரு தேனே

கடலமு தேகரும் பேவிரும் படியா

ரெண்ணகத் தாயுல குக்குயி ரானா

யெம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே.


விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா

விழுப்பொருளே உன தொழும்பு அடியோங்கள்

மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே

வண் திருப்பெருந்துறையாய் வழி அடியோம்

கண் அகத்தே நின்று களிதரு தேனே

கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார்

எண் அகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.


அருஞ்சொற்பொருள்:

நண்ணவும் மாட்டா – அடைய முடியாத.

வண் – வள், வளம் நிறைந்த.

கண் அகம், எண் அகம் – ஆகிய இரண்டும் நெஞ்சைக் குறிக்கின்றன.


 

பொழிப்புரை:

தேவர்களுக்கு எட்டாத அதீதனே, நீ நிலவுலகுக்கு இறங்கி வந்து உன் தொண்டர்களை உய்வித்துள்ளாய். யாண்டும் போற்றுபவர் உள்ளத்தில் நீ பேரின்பமாய்த் திகழ்கின்றாய். உலகெங்கும் தென்படுகிற சேதனம் நீயே.


சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்:

காண்போனாயிருக்கும் சிவன் என்றைக்குமே திருசியம் அல்லது காணப்படுபொருள் ஆவதில்லை. ஆதலால் தேவர்களுக்கு அல்லது இந்திரியங்களுக்கு அவன் புலப்படான். உயிர்க்கு உயிராய், உணர்வுக்கு உணர்வாய் அவன் இலங்குகிறான்.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)