Category Archives: Thiruvembavai

Thiruvembavai – 20

மார்கழி – 20

05.01.2016-செவ்வாய்

மாணிக்கவாசகர் இயற்றிய

திருவெம்பாவை

20

போற்றியருளுகநின் னாதியாம் பாதமலர்

போற்றி யருளுகநின் னந்தமாஞ் செந்தளிர்கள்

போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்

போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றியெல் லாவ்யிர்க்கு மீறா மிணையடிகள்

போற்றிமா னான்முகனுங் காணாத புண்டரிகம்

போற்றியா முய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றியா மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.


போற்றி அருளுக நின் ஆதி ஆம் பாதமலர்

போற்றி அருளுக நின் அந்தம் ஆம் செம் தளிர்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன்பாதம்

போற்றி எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூங்கழல்கள்

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறுஆம் இணை அடிகள்

போற்றி மால் நால்முகனும் காணாத புண்டரிகம்

போற்றி யாம் உய்ய ஆள்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம் மார்கழி நீர் ஆடு ஏல் ஓர் எம்பாவாய்.


அருஞ்சொற்பொருள்:

செம்தளிர்கள் – செவ்விய இளம் தளிர் போன்ற திருவடிகள்.

போகம் ஆம் – இன்புற்றிருப்பதற்கு ஏது ஆகிய.

ஈறு – முடிவு.

புண்டரிகம் – தாமரைத் திருவடி.


பொழிப்புரை:

அனைத்துக்கும் முந்தியிருக்கும் உன்னைப் போற்றுகிறோம், அருள்புரிவாயாக. அனைத்துக்கும் பிந்தியிருக்கும் உன்னைப் போற்றுகிறோம், அருள்புரிவாயாக. உயிர்கள் அனைத்துக்கும் பிறப்பிடமாயிருக்கும் உன்னைப் போற்றுகிறோம். உயிர்களுக்கு இருப்பிடமாயிருந்து இன்பம் ஊட்டும் உன்னைப் போற்றுகிறோம். உயிர்கள் அனைத்துக்கும் ஒடுங்குமிடமாயிருக்கும் உன்னைப் போற்றுகிறோம். அரிக்கும் அயனுக்குமே விளங்காது மறைந்திருக்கும் உன்னைப் போற்றுகிறோம். எங்களை ஆட்கொண்டு அருள்புரிகிற உன்னைப் போற்றுகிறோம். நாங்கள் மார்கழி நீர் ஆட அனுக்கிரகம் செய்த உன்னைப் போற்றுகிறோம். எமது பாவாய் இக்கோட்பாடுகளை ஏற்றுக்கொள். அவைகளை ஓர்ந்து பார்.


சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்:

நிர்விகாரியாய், கிரியை அனைத்துக்கும் அப்பால் நிர்க்குண பிரம்மமாய் இருக்கும் பரமன் குணத்தோடு கூடியவனாய் வந்து பஞ்சகிருத்தியங்களைச் செய்கிறான். ஜீவர்கள் சிறு நிலையிலிருந்து பெருநிலைக்குப் பரிணமித்து உய்வு அடைதற்கு இப்பஞ்ச கிருத்தியங்கள் பயன்படுகின்றன.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)

Advertisements

Thiruvembavai – 19

மார்கழி – 19

04.01.2016-திங்கள்

மாணிக்கவாசகர் இயற்றிய

திருவெம்பாவை

19

உங்கையிற் பிள்ளை யுனக்கே யடைக்கலமென்

றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் மச்சதா

லெங்கள் பெருமா னுனக்கொன் றுரைப் போங்கே

ளெங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க

வெங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க

கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க

விங்கிப் பரிசே யெமக்கெங்கோ னல்குதியே

லெங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.


உங்கையிற்பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று

அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்

எம்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க

எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க

இங்கு இப்பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்

எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏல் ஓர் எம்பாவாய்.


அருஞ்சொற்பொருள்:

புதுக்கும் – புதிதாக்கும்.

கங்குல் – இரவு.

நல்குதியேல் – தருவாயாகில்.

எங்கு எழில் என் – எந்தத் திசையில் உதித்தால் தான் எங்களுக்கு என்ன?


பொழிப்புரை:

உனது கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அந்தப் பழமொழியைப் புதுப்பிக்க நாங்கள் அஞ்சுகிறோம். ஏனென்றால் அது தேவையில்லை. எங்கள் பெருமானே, உனக்கு ஒன்று சொல்லுகின்றோம், கேட்பாயாக. நாங்கள் உன்னுடைய செய்யன்பர்களையே மணந்துகொள்வோம். உனக்கே நாங்கள் பணிவிடை செய்வோம். இரவும் பகலும் நாங்கள் உன்னையே யாண்டும் காண வேண்டும். இந்த வாய்ப்பை இறைவா, நீ எங்களுக்குக் கொடுத்தருள்வாயாகில் பிறகு சூரியனே திசைமாறிப் போய்விடினும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. பாவாய், இப்பெருநிலையை ஏற்றுக்கொள். பின்பு ஓர்ந்து பார்.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)