Category Archives: Uncategorized

Question & Answer – 43

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 43: “நாராயணனே எல்லாம்” என்று போக்கிரியின் செயலைக் கண்டிக்காவிட்டால் அவன் தீய செயல் அதிகரிக்காதா?

பதில்: பரம்பொருள்தான் உலகனைத்தும் ஆகியிருக்கிறது என்பது உண்மை. “உலகனைத்தும் ஆனாய் நீயே”, என்று பக்தர் ஒருவர் பகர்கிறார். “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பது குறளின் கோட்பாடு. என்னுடைய ஓர் அம்சத்தைக் கொண்டு ஜீவலோகமும், பூதங்கள் யாவும் ஆகியிருக்கிறேன் என்பது பகவத்கீதை வாக்கியம். சிருஷ்டியிலே நலமும் கேடும் நிறைந்திருப்பது கண்கூடு. இது உலகைப் பற்றிய உண்மை. ஆயினும் இவ்வுலகில் வாழ்ந்து வருகிற நாம் நலனை நாடவும், கேட்டைத் தவிர்க்கவும் செய்கிறோம். மரம் ஒன்றில் முள்ளும் இருக்கிறது. கனியும் இருக்கிறது. முள்ளைத் தவிர்க்கவும் கனியை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறோம். மக்களுள் நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவர்களும் இருக்கிறார்கள். நலனை நாடும் நாம் கெட்டவர்களிடத்திலிருந்து விலகியிருக்கவும் வேண்டும். கெட்டவர்களிடத்திலிருக்கும் ஒழுக்கமின்மை அவர்களோடு நின்றுவிடுமாகில் நாம் அவர்களை விட்டு விலகி இருப்பது போதுமானது. ஆனால் கெட்டவர்களுடைய கேடு நிறைந்த செயல் ஏனையவர்களை வந்து பாதிக்குமானால் அக்கெட்டவனைக் கண்டிப்பது முற்றிலும் அவசியம். இக்கேள்வியில் அடங்கியுள்ள கருத்துப்படியே துஷ்ட நாராயணனைக் கொடியவர் எனக் கருதி அவன் மீது நடவடிக்கை எடுப்பது முற்றிலும் பொருந்தும். அவனை நாராயணனாகக் கருதுதலில் பலன் ஒன்றும் உண்டு. அன்னவன் மீது எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை யாண்டும் வரம்புக்கு உட்பட்டதாயிருக்கும். அவனும் நாராயணன் என்னும் அடிப்படை உண்மையை அறியாதிருந்தால் அல்லது அதை மறந்து போனால் அவன் மீது எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை பெரிதும் வரம்பு கடந்ததாய்ப் போய்விடும். கெட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளுவது அறச்செயல். ஆனால் அந்த நடவடிக்கை அவர்களைத் திருத்தியமைத்தற்பொருட்டு இருத்தல் வேண்டும். அவனை ஒழித்தல் முறையாகாது. நாராயணனே அனைத்துமாய் இருக்கிறான் என்னும் அடிப்படை உண்மையை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு நம்முடைய நடவடிக்கை, செயல் வரம்பு கடந்து போகாது. அந்த ஞானம் அந்த அளவில் ஆத்ம சாதகனுக்குப் பயன்படுகிறது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Sri Paramahamsarin Apta Mozi – 120

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 120

Apta mozi

[முந்தைய பகுதி – மொழி 119: https://swamichidbhavananda.wordpress.com/2017/03/02/sri-paramahamsarin-apta-mozi-119/ ]

இனிய சூழ்நிலை

கேசவ சந்திரசேனர் என்னும் பெரியார் வங்காளத்தில் அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த பிரம்ம சமாஜத்துக்குத் தலைவராய் திகழ்ந்தார். அவரிடத்து மேலாம் பாங்குகள் பல அமைந்திருந்தன. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடத்து அவருக்கு அளப்பரிய அன்பு. இருவரும் அடிக்கடி அளவளாவி உறவாடுவார்கள். பகவத் விஷயங்களைப் பற்றி அவர்களுக்கிடையில் அடிக்கடி அரிய சம்பாஷணைகள் நிகழும். வங்காளத்தில் துர்க்கை பூஜை, லக்ஷ்மி பூஜையன்று வந்து சந்தித்தார். அன்று வெள்ளிக்கிழமை. பரமஹம்ஸரைத் தமது நீராவிக் கப்பலில் கங்கையில் அழைத்துச் செல்ல அவர் தீர்மானித்திருந்தார். பிற்பகல் சுமார் நாலுமணி நேரத்துக்கு அவருடைய நீராவிக் கப்பல் தட்சிணேசுவர ஆலயத்துக்கு எதிரே வந்து நங்கூரம் போட்டது. அக்கப்பலினுள் பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்த அன்பர்கள் பலர் இருந்தனர். அவர்களுக்கு எதிரே தட்சிணேசுவரத்தின் ஸ்நான கட்டம் தென்பட்டது. அந்தக் கட்டத்தினின்று ஆலயத்துக்குள்ளே பிரவேசிக்கும் வாயிலும் தென்பட்டது. இந்த ஸ்நான கட்டத்தின் வடபுறத்திலும் தென்புறத்திலும் முறையே ஆறு சிவாலயங்கள் வரிசையாக அமைக்கப்பெற்றிருந்தன. காளி கோயிலின் கர்ப்பக்கிரகக் கோபுரம் வெள்ளைவெளேரென்று ஆகாயத்தை அளாவி நின்றது. நீல நிறமான ஆகாயம் அந்த வெண்கோபுரத்துக்கு உள்ளத்தைக் கவரும் சோபை தந்தது.  தட்சிணேசுவர ஆலயத்தில் ஓங்கி வளர்ந்திருந்த விதவிதமான மரங்களும் வானை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆலயத்தின் வடபுறத்திலும் தென்புறத்திலும் பாணர் மண்டபங்கள் இரண்டு அமைக்கப் பெற்றிருந்தன. அவைகளுக்கிடையிலே நெடுந்தூரத்துக்கு அணியணியாக நறுமணப் பூஞ்செடிகள் வைக்கப்பட்டிருந்தன. மாரிகாலம் அப்பொழுதுதான் முடிவு பெற்றிருந்தமையினால் கங்கை நீர் சிறிது சேறு படிந்திருந்தது. அதன்மீது நீல நிறமான வானத்தின் பிம்பம் தென்பட்டது. சேறு படிந்தது எனினும் கங்கையின் நீர் யாண்டும் ஹிந்துக்களுக்குப் புண்ணிய தீர்த்தமாகிறது.

dakshineswar_1945

அந்தச் சூழ்நிலையின் தோற்றம் மென்மையும் இனிமையும் வாய்க்கப்பெற்றதாய் இருந்தது. அங்கு அப்பொழுது வந்திருந்த பிரம்ம சமாஜத்து அன்பர்களின் உள்ளத்தில் அமைதி நிலவியது.

(தொடரும்…)