THE GARLAND OF PARAPARAM – 54

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக்கண்ணி

photofunia-1475564811

கண்ணி 53:

கொல்லா விரதம் குவலயம்எல்லாம் ஓங்க

எல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே.

விளக்கம்:

  • குவலயம் – உலகம்.

விரதங்களுள் சிறந்தது கொல்லா விரதம். இவ்விரதத்தை உலக நடைமுறையோடு சீர்தூக்கிப் பார்க்குமிடத்து வாழ்வில் பெரிய முரண்பாடு ஒன்றைக் காண்போம். மண்ணிலுள்ள பேக்டீரியா என்னும் அணுவுயிரைத் தின்று புல் பூண்டுகள் பயிர் பச்சைகள் உயிர் வாழ்கின்றன. அவைகளைத் தின்று மான் முதலியன உயிர் வாழ்கின்றன. மானைத் தின்று சிங்கம் புலி முதலியன உயிர் வாழ்கின்றன. பூச்சியைத் தின்று பல்லி உயிர் வாழ்கிறது. பல்லியைத் தின்று கோழி உயிர் வாழ்கிறது. கோழியைத் தின்று பருந்தும் மனிதனும் உயிர் வாழ்கின்றனர். இங்ஙனம் வாழ்வென்பது உயிரை உயிர் மாய்ப்பதின் வாயிலாக அமைந்துள்ளது. இத்தகைய நெருக்கடியான திட்டத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிற மனிதன் எங்ஙனம் கொல்லா விரத்தைக் கடைப்பிடிக்க முடியும்? கொல்லா விரதம் மனிதனுக்கே சாலும் என்பது சான்றோர் துணிபு. எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருக்க மனிதனுக்கு இயலும். எவ்வுயிர்க்கும் மனம் மொழி மெய்யால் தீங்கு செய்யாதிருக்க மனிதனுக்கு இயலும். தான் உணவுண்பதையே தனது சுக ஜீவனத்துக்காகவென்று கருதாது ஈஸ்வர ஆராதனைக்கென்று கருதி உண்பவன் அச்செயலிலுள்ள தோஷத்தினின்று விடுபடுகிறான். தான் உயிர் வாழ்ந்திருப்பது தனக்காகவன்று. கடவுள் வழிபாட்டிற்கே தன் உயிர் வாழ்வு அமைந்திருக்கிறது. இடையறாது கடவுல் வழிபாடு செய்வதற்கிடையில் தன்னுடைய ஜீவ வியக்தியைச் செத்ததற்கு நிகராக ஒதுக்கி வைக்க வல்லவன் கொல்லா விரதத்தில் நிலைபெற்றவனாகிறான். அஹிம்சையிலே நன்கு நிலைபெற்றிருக்கும் யோகி ஒருவனுடைய முன்னிலையில் ஏனைய உயிர்களும் பகைமையை ஒழித்துவிடுகின்றன என்பது கோட்பாடு. ஆக, ஆழ்ந்து கடவுள் பக்தியில் ஈடுபட்டிருப்பவர்களெல்லாம் கொல்லா விரதியர் ஆகின்றனர். அவர்களின் எண்ணிக்கை உலகெங்கும் அதிகரிக்க வேண்டும் என்பது அடியேனது பிரார்த்தனை என்கிறார் தாயுமானவர்.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


The Garland of Paraparam

by

Sri Tayumana Swami

கொல்லா விரதம் குவலயம்எல்லாம் ஓங்க

எல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே.

kollA viratham kuvalayam yellAm Onga

ellArkkum solluvathu en ichchai parAparamE.

-கண்ணி 53

HYMN:

To proclaim aloud to one and all,

All the world over

The penance of non killing

Is my desire intense,

Oh Para Param!

-‘Kaviyogi’ Suddhananda Bharathi.

TRANSLATION:

Paraaparam, it is my desire to declare to the world at large the merit of the vow of non-injury.

-Swami Chidbhavananda.

Advertisements

Question & Answer – 47

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 47: இறந்து போன ஜீவன் மறுபடியும் எந்தவிதமாக மற்றோர் ஜீவனிடத்தில் போய்ப் பிறக்கிறான்?

பதில்: இறத்தல் என்னும் செயல் ஓர் இடத்தை விட்டு மற்றோர் இடத்திற்குப் பயணம் போவது போன்றது அன்று. இறந்துபோன ஜீவன் உடலை அறவே மறந்துவிட்டான். “போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியங்கள்” என்னும் கோட்பாடு ஈசுவரனுக்கு உண்டு. அதே கோட்பாடுதான்  சிறிய அளவில் ஜீவனுக்கு உண்டாகிறது. அயர்ந்து உறங்குதற்கு நிகர் மரணம். உறங்குகின்றவன் தாற்காலிகமாக உடலை மறந்திருக்கிறான். இடம் அல்லது தேசம் என்பது மனதின் கற்பனையாம். அதேபாங்கில் காலம் என்பதும் மனதின் சிருஷ்டியாம். மனதற்ற நிலையில் காலமில்லை, தேசமில்லை, செயலில்லை. தூங்குகின்றவன் தாற்காலிகமாகக் காலதேச நிமித்தத்தை மறக்கிறான். விழித்துக் கொண்டவுடன் பழைய இடத்தைப் பற்றிய ஞாபகமும், தான் குடியிருக்கும் உடலைப் பற்றிய ஞாபகமும் அவனுக்கு வருகிறது. இறந்து போகின்றவன் நிரந்தரமாகத் தான் வாழ்ந்து வந்த உடலை ஒதுக்கித் தள்ளுகிறான். இறந்தவன் மறு லோகத்திற்குப் போவதும், அங்கு சுகம், துக்கம் ஆகியவைகளை அனுபவிப்பதும் இகலோகத்தில் இருப்பவர்களின் கற்பனையாம். ஓர் உடலை விட்டு ஒதுங்கிய ஜீவன் தன்னில் தானாக இருக்கிறான்.

ஸ்தூல சரீரம், சூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் ஆகிய மூன்று கூறுகளுள் ஜீவன் ஒதுக்கித் தள்ளியது ஸ்தூல சரீரம் ஒன்றுதான். மற்று, மாண்டுபோனவனோ தன்னுடைய சூக்ஷ்ம சரீரத்திலும், காரண சரீரத்திலும் ஒடுங்கியுள்ளான். பொருத்தமான சூழ்நிலை தனக்கு அமைகின்றபொழுது அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அவன் தனக்குத்தானே புதிய உடல் ஒன்றைச் சிருஷ்டி பண்ணுகிறான். மாதாவின் உதரத்தில் வடிவெடுத்து மறுபடியும் பிறக்கின்றான். போதல் வருதல் என்னும் செயல் பூதவுடல் மயமாயுள்ள இப்பிரபஞ்சத்திற்கு உரியது. சூக்ஷ்ம சரீரத்தில் இருக்கின்ற ஜீவனுக்குப் போக்கும் வரவும் புணர்வும் இல்லை.

சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். விதை செடியிலிருந்து உண்டாகிறது. பிறகு செடி பட்டுப்போகின்றது. விதை தன்மயமாயிருக்கின்றது. அதற்குப் பொருத்தமான சூழ்நிலையை மக்கள் செய்து வைக்கின்றனர். மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப ஓரிடத்தினின்று எடுத்து வந்த விதை மற்றொரு இடத்தில் பொருத்தமான சூழ்நிலை அமையுங்கால் ஆங்கு அது வளர ஆரம்பிக்கின்றது. அதைக் கவனிக்கின்ற மற்றவர்களுக்கு அச்செடியானது புதிய இடத்தில் வடிவெடுக்கிறது. செடியைப் பொருத்தவரையில் தன்னைத்தான் அது தோற்றுவித்துக் கொள்ளுகிறது. பொருத்தமான சூழ்நிலை அல்லது மண்ணில் அது முளைக்குமிடத்துப் புதிய பிறப்பில் அது மேல்நிலைக்கு வந்துள்ளது. பொருத்தமற்ற இடத்தில் அது முளைத்து வருமிடத்தில் அது கீழ்நிலையில் பிறந்துள்ளதாகிறது. அது இடம் மாறிய செயல்; தனக்குத்தானே செய்து கொண்டது அன்று.

ஜீவன் ஒருவன் புதிய பிறப்பு எடுக்கின்றபொழுது தன் பாங்குக்கேற்றா சூழ்நிலையைத் தனக்குத்தானே செய்து கொள்கின்றான். சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் மடிந்துபோன மாணாக்கன் ஒருவன் அமெரிக்காவில் தனக்குப் பொருத்தமான தந்தை தாய்க்கு மகவாகப் பிறந்தான். அப்படிப் பிறந்தவனுக்க்குத் தற்செயலாய்ப் பூர்வஜன்ம ஞாபகம் வந்தது. அதை மற்றவர்களுக்கு அவன் எடுத்துச் சொன்னான். அவன் கூற்றை ஆராய்ச்சி செய்து பார்த்தபொழுது அவன் கூற்று உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. பொதுவாக மடிந்துபோன ஜீவன் ஒருவன் பழைய சூழ்நிலையை மறந்துவிடுகின்றான். இயற்கையின் நியதிப்படி அது மறைத்தல் என்னும் பெயர் பெறுகின்றது. மறைத்தல் என்னும் செயல் இறைவனுக்குரியது. பழைய ஜன்மத்தின் ஞாபகம் உயிர்களனைத்திற்கும் உண்டாகுமானால் அது பெரிய குழப்பத்தில் வந்து முடியும். ஆதலால்தான் இறைவன் கிருபைகூர்ந்து அதை மறைத்து வைத்திருக்கின்றான். இலங்கையில் மடிந்துபோன மாணாக்கன் கப்பலிலோ அல்லது ஆகாய விமானத்திலோ அமெரிக்காவுக்குப் பயணம் போனவன் அல்லன். இடத்தைப் பற்றிய உணர்ச்சி ஸ்தூல சரீரம் எடுத்திருக்கிறவனுக்கு உண்டாகிறது. மற்று, சூக்ஷ்ம சரீரத்தில் இருக்கின்றவன் ஒரு பிறவியில் ஏதேனும் ஓர் உலகில் தோற்றத்திற்கு வந்தவனாக இருக்கலாம். அல்லது அடுத்த பிறவியில் பலகோடி மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற மற்றோர் உலகத்தில் அவன் பிறக்கலாம். ஆதலால்தான் போக்கும் வரவும் ஆத்மாவுக்கு இல்லை என்ற கோட்பாடு வந்திருக்கிறது. வினைக்கேற்றபடி ஜீவன் ஒருவன் மேல்நிலையில் அல்லது கீழான நிலையில் மறுபிறப்பு எடுக்கிறான் என்பது தேற்றம்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.