Tag Archives: தத்துவ விசாரம்

Question & Answer – 48

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 48: ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எண்ணுகிற எண்ணங்களுக்குக் கணக்கேயில்லை. ஆனால் மனிதன் உயிர் துறக்கும்போது எண்ணுகிற எண்ணம் எதுவோ அதுவாக அடுத்த பிறவி வந்து வாய்க்கிறதென்று கைவல்யத்தில் சொல்லியிருக்கிறது. பகவத்கீதையில் நீண்டநாள் சொர்க்கத்தில் தேவபோகங்களை அனுபவித்துவிட்டுப் புண்ணியம் தேய்ந்த பிறகு மறுபிறவி எடுக்கிறான் என்று சொல்லியிருக்கிறது. ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு பிறவி எடுத்தாக வேண்டுமா? கைவல்யம், பகவத் கீதை இவைகளில் சொல்லியிருக்கும் மறுபிறப்பைப் பற்றி விளக்க வேண்டுகிறேன்.

பதில்: மனிதனுக்கு வினை இருக்கும் பரியந்தம் பிறவி உண்டு. வினைக்கு மூலகாரணமாய் இருப்பது எண்ணம். ஓர் எண்ணத்தை எண்ணும்பொழுதே சூக்ஷ்ம நிலையில் அது ஒரு வினை ஆய்விடுகிறது. எண்ணத்துக்கு ஏற்றாற்போன்று வாழ்க்கை மாறி அமைந்து வருகிறது. ஸ்தூல சரீரம் ஒன்றில் இருக்கின்ற காலம் முழுதையும் தொகுத்து ஒரு பிறவி என்று சொல்லுவது உலக வழக்கு. ஆனால் தத்துவ பூர்வமாகப் பார்க்குமிடத்து ஓர் எண்ணத்தை எண்ணும்பொழுதே அந்த எண்ணமயமான புதிய பிறவி மனத்தகத்து அம்மனிதனுக்கு அமைந்துவிடுகிறது. எனவே ஒரு நாளில் ஒரு மனிதனுடைய மனதில் எத்தனைவித எண்ணங்கள் வந்தமைகின்றனவோ அத்தனைவிதமான பிறவிகளை அந்தச் சிறிது நேரத்துக்குள் மன அமைப்பில் அவன் எடுத்தவனாகிறான். இப்படி உண்டாகின்ற பிறவிகளைத்தான் கணக்கெடுக்க யாருக்கும் இயலாது.

இனி, ஓர் உடலை உகுக்கின்ற வேளையில் அந்த ஜீவன் அது பரியந்தம் ஆழ்ந்து எண்ணிய எண்ணங்கள் ஒன்றுகூடி மனதுக்கு ஒரு வடிவைத் தருகின்றன. மேற்போக்காக எண்ணிய எண்ணங்களுக்கு ஆங்கு இடமில்லை. கடலில் உண்டாகிய சிற்றலைகள் போன்று அவைகள் மறைந்து போய்விடுகின்றன. மனத்தகத்து உண்டாயிருக்கின்ற ஆழ்ந்த வடிவுக்கு ஒப்ப புதிய ஸ்தூல சரீரம் அமைகிறது. சாகின்றபொழுது தான் விரும்புகிற ஓர் எண்ணம் முன்னிலையில் வந்து நிற்காது. தான் நெடுங்காலம் எண்ணிய எண்ணங்களின் தொகையே முன்னணியில் வந்து நிற்கும். அதற்கேற்ற படி அடுத்த பிறவி அமைகிறது. ஆண்டு முழுதும் செய்த வியாபாரத்தின் தொகுப்பை ஆண்டு இறுதியில் கணக்குப் பார்த்து லாபநஷ்டத்தை முடிவு கட்டுவது போன்று வினையின் தொகையை முன்னிட்டே அடுத்த பிறவி அமைகிறது.

வினைக்கு ஏற்பச் சூக்ஷ்ம சரீரத்தில் வேறு ஒரு நிலையில் ஜீவன் இருப்பதுண்டு. அந்த நிலை இன்பகரமானதாயிருந்தால் அதைச் சொர்க்க வாழ்வு என்கிறோம். துன்பகரமானதாயிருந்தால் நரகம் என்கிறோம். சொர்க்கமும், நரகமும் கனவு உலகங்களுக்கு ஒப்பானவை. ஸ்தூல சரீரத்தின் துணையின்றிக் கனவு நிலையில் இன்பத்தையோ துன்பத்தையோ ஜீவன் அனுபவிக்கின்றான். அந்தச் சரீரம் அனுபவிக்கின்ற இன்ப  துன்பமும் வினைப்பயனேயாம். கனவு முடிந்ததும் அவன் விழித்துக்கொள்வது போன்று சொர்க்க வாழ்வுக்கு ஏற்ற வினை முடிவுறுங்கால் அவ்வாழ்வை முடித்துவிட்டுத் திரும்பவும் மண்ணுலகில் ஒரு மனிதன் பிறக்கிறான். எனவே பல சாஸ்திரங்கள் சொல்லுகின்ற கோட்பாடுகளைத் தொகுத்து ஆராயுமிடத்துத் தனது எண்ணத்துக்கு ஏற்ப மனிதன் தனது வாழ்வை ஓயாது மாற்றி அமைத்துக் கொண்டு போகின்றான். மாறி அமைகின்ற நிலைக்கே மறுபிறப்பு என்று பெயர். எண்ணங்களற்ற பெருநிலையை ஆத்மா அடைந்துவிடுமிடத்து அது முக்தியாகிறது.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.

Advertisements

Question & Answer – 47

ஐயம் தெளிதல்

தத்துவ விசாரம்

கேள்வி எண் 47: இறந்து போன ஜீவன் மறுபடியும் எந்தவிதமாக மற்றோர் ஜீவனிடத்தில் போய்ப் பிறக்கிறான்?

பதில்: இறத்தல் என்னும் செயல் ஓர் இடத்தை விட்டு மற்றோர் இடத்திற்குப் பயணம் போவது போன்றது அன்று. இறந்துபோன ஜீவன் உடலை அறவே மறந்துவிட்டான். “போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியங்கள்” என்னும் கோட்பாடு ஈசுவரனுக்கு உண்டு. அதே கோட்பாடுதான்  சிறிய அளவில் ஜீவனுக்கு உண்டாகிறது. அயர்ந்து உறங்குதற்கு நிகர் மரணம். உறங்குகின்றவன் தாற்காலிகமாக உடலை மறந்திருக்கிறான். இடம் அல்லது தேசம் என்பது மனதின் கற்பனையாம். அதேபாங்கில் காலம் என்பதும் மனதின் சிருஷ்டியாம். மனதற்ற நிலையில் காலமில்லை, தேசமில்லை, செயலில்லை. தூங்குகின்றவன் தாற்காலிகமாகக் காலதேச நிமித்தத்தை மறக்கிறான். விழித்துக் கொண்டவுடன் பழைய இடத்தைப் பற்றிய ஞாபகமும், தான் குடியிருக்கும் உடலைப் பற்றிய ஞாபகமும் அவனுக்கு வருகிறது. இறந்து போகின்றவன் நிரந்தரமாகத் தான் வாழ்ந்து வந்த உடலை ஒதுக்கித் தள்ளுகிறான். இறந்தவன் மறு லோகத்திற்குப் போவதும், அங்கு சுகம், துக்கம் ஆகியவைகளை அனுபவிப்பதும் இகலோகத்தில் இருப்பவர்களின் கற்பனையாம். ஓர் உடலை விட்டு ஒதுங்கிய ஜீவன் தன்னில் தானாக இருக்கிறான்.

ஸ்தூல சரீரம், சூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் ஆகிய மூன்று கூறுகளுள் ஜீவன் ஒதுக்கித் தள்ளியது ஸ்தூல சரீரம் ஒன்றுதான். மற்று, மாண்டுபோனவனோ தன்னுடைய சூக்ஷ்ம சரீரத்திலும், காரண சரீரத்திலும் ஒடுங்கியுள்ளான். பொருத்தமான சூழ்நிலை தனக்கு அமைகின்றபொழுது அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அவன் தனக்குத்தானே புதிய உடல் ஒன்றைச் சிருஷ்டி பண்ணுகிறான். மாதாவின் உதரத்தில் வடிவெடுத்து மறுபடியும் பிறக்கின்றான். போதல் வருதல் என்னும் செயல் பூதவுடல் மயமாயுள்ள இப்பிரபஞ்சத்திற்கு உரியது. சூக்ஷ்ம சரீரத்தில் இருக்கின்ற ஜீவனுக்குப் போக்கும் வரவும் புணர்வும் இல்லை.

சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். விதை செடியிலிருந்து உண்டாகிறது. பிறகு செடி பட்டுப்போகின்றது. விதை தன்மயமாயிருக்கின்றது. அதற்குப் பொருத்தமான சூழ்நிலையை மக்கள் செய்து வைக்கின்றனர். மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப ஓரிடத்தினின்று எடுத்து வந்த விதை மற்றொரு இடத்தில் பொருத்தமான சூழ்நிலை அமையுங்கால் ஆங்கு அது வளர ஆரம்பிக்கின்றது. அதைக் கவனிக்கின்ற மற்றவர்களுக்கு அச்செடியானது புதிய இடத்தில் வடிவெடுக்கிறது. செடியைப் பொருத்தவரையில் தன்னைத்தான் அது தோற்றுவித்துக் கொள்ளுகிறது. பொருத்தமான சூழ்நிலை அல்லது மண்ணில் அது முளைக்குமிடத்துப் புதிய பிறப்பில் அது மேல்நிலைக்கு வந்துள்ளது. பொருத்தமற்ற இடத்தில் அது முளைத்து வருமிடத்தில் அது கீழ்நிலையில் பிறந்துள்ளதாகிறது. அது இடம் மாறிய செயல்; தனக்குத்தானே செய்து கொண்டது அன்று.

ஜீவன் ஒருவன் புதிய பிறப்பு எடுக்கின்றபொழுது தன் பாங்குக்கேற்றா சூழ்நிலையைத் தனக்குத்தானே செய்து கொள்கின்றான். சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் மடிந்துபோன மாணாக்கன் ஒருவன் அமெரிக்காவில் தனக்குப் பொருத்தமான தந்தை தாய்க்கு மகவாகப் பிறந்தான். அப்படிப் பிறந்தவனுக்க்குத் தற்செயலாய்ப் பூர்வஜன்ம ஞாபகம் வந்தது. அதை மற்றவர்களுக்கு அவன் எடுத்துச் சொன்னான். அவன் கூற்றை ஆராய்ச்சி செய்து பார்த்தபொழுது அவன் கூற்று உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. பொதுவாக மடிந்துபோன ஜீவன் ஒருவன் பழைய சூழ்நிலையை மறந்துவிடுகின்றான். இயற்கையின் நியதிப்படி அது மறைத்தல் என்னும் பெயர் பெறுகின்றது. மறைத்தல் என்னும் செயல் இறைவனுக்குரியது. பழைய ஜன்மத்தின் ஞாபகம் உயிர்களனைத்திற்கும் உண்டாகுமானால் அது பெரிய குழப்பத்தில் வந்து முடியும். ஆதலால்தான் இறைவன் கிருபைகூர்ந்து அதை மறைத்து வைத்திருக்கின்றான். இலங்கையில் மடிந்துபோன மாணாக்கன் கப்பலிலோ அல்லது ஆகாய விமானத்திலோ அமெரிக்காவுக்குப் பயணம் போனவன் அல்லன். இடத்தைப் பற்றிய உணர்ச்சி ஸ்தூல சரீரம் எடுத்திருக்கிறவனுக்கு உண்டாகிறது. மற்று, சூக்ஷ்ம சரீரத்தில் இருக்கின்றவன் ஒரு பிறவியில் ஏதேனும் ஓர் உலகில் தோற்றத்திற்கு வந்தவனாக இருக்கலாம். அல்லது அடுத்த பிறவியில் பலகோடி மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற மற்றோர் உலகத்தில் அவன் பிறக்கலாம். ஆதலால்தான் போக்கும் வரவும் ஆத்மாவுக்கு இல்லை என்ற கோட்பாடு வந்திருக்கிறது. வினைக்கேற்றபடி ஜீவன் ஒருவன் மேல்நிலையில் அல்லது கீழான நிலையில் மறுபிறப்பு எடுக்கிறான் என்பது தேற்றம்.

தெளிவித்தவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.