மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியின் பேராசிரியர் முனைவர் இளங்கோ ராமானுஜம் அவர்கள் அக்கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அவர் Youtube தளத்தில் “பாரதத்தின் பொக்கிஷங்கள்” என்ற பெயரில் Channel துவங்கி ஆன்மிகம் சார்ந்த Videoக்களை பதிவேற்றம் செய்துவருகிறார். ஆன்மீகம் மட்டுமல்லாது பல்சுவையாக பல்வேறு நிகழ்வுகளை பதிவேற்றம் செய்துவருகிறார்.
பேராசிரியர் அவர்கள் ஆன்மிகம் சார்ந்து பேசுகின்ற காணொளிகளில் (Videos) தாம் பணியாற்றியபோது திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் தமக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை சிறு சிறு துணுக்குச் செய்தியாகக் குறிப்பிடுவார். அக்காணொளிகளைக் காணும் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்துடன் தொடர்புடைய யாவருமே காலச்சக்கரத்தில் பின்னோக்கி பயணம் செய்து அன்றைய தினங்களுக்கே சென்றுவிடுவதுபோல் உணர்வார்கள். சுருக்கமான 1 நிமிடம் அல்லது 2 நிமிட காணொளிகளில்கூட (Short Videos) மிகப்பெரிய விஷயங்களை நம் சிந்தனைக்கு எட்டுமாறு பேசுவது நன்றாக உள்ளது.
விவேகானந்தா கல்லூரியில் பணியாற்றியபோது சுவாமி சித்பவானந்தர் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்ற இப்பேராசிரியர் அவருடனும் சக பேராசிரியர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை காணொளிகளில் சுவைபட எளிய நடையில் பேசி வருகிறார். அவற்றில் சிலவற்றை கீழே பதிவேற்றி இருக்கிறேன். தமிழ்நாட்டின் ஆன்மிகப் பொக்கிஷங்களான மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம் போன்ற திருக்கோயில்கள் பற்றியும் காணொளிகளை பதிவேற்றியிருக்கிறார். காணொளியைக் காணும் வாசகர்கள் இந்த Channelல் உள்ள அனைத்து Videoக்களையும் கண்டு பயன் அடையுங்கள். (ஆங்கிலத்திலும் சில காணொளிகள் உள்ளன.)
அது மட்டுமல்லாது https://porulputhithu.com/ என்ற இணையதளத்தில் 2022, 2023 ஆண்டுகளில் பல கட்டுரைகளையும் வரைந்துள்ளார். கட்டுரைகளின் தலைப்புக்கள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
இன்று ஆடி மாதம் பௌர்ணமி நன்னாள். நமது பெரிய சுவாமிஜி சந்நியாசம் ஏற்று “சித்பவானந்த” என்ற நாமம் சூட்டப்பெற்ற திருநாள். அந்நிகழ்வை கொண்டாடும்விதமாக “சந்நியாசி கீதம்” என்ற தலைப்பில் உள்ள 13 கவிதைகளை சுவாமி சித்பவானந்தர் இயற்றிய “ஞான யோக விளக்கம்” (தபோவன பதிப்பு. ஆண்டு: 1976) புத்தகத்திலிருந்து எடுத்து பதிவிட்டிருக்கிறோம்.
Mahapurush Maharaj with Swami Chidbhavananda and Swami Yatiswarananda at Ooty Sri Ramakrishna Math.
மனவலி படைத்த மாசிலாத் துறவி!
சுவைமலி இன்பச் சுரந்தனை எழுப்புதி!
மகிதலக் கறைஉறா வெகுதொலைக்கப்பால்,
புலப்பகை வெறுக்கை புகழிவை அமைதியைக்
கலைப்பதற் கென்றும் தலைப்படாத் தலத்தை
அறிவுமெய் என்னும் அருவிகளுடனே
பரமானந்தத் திருமா நதிபாய்
வெற்புறு குகையைப் பொற்புறு வனத்தைப்
பிறப்பிட மாக்கொடு சிறப்புமிக் கார்ந்தே
எழும் கீதத்தை முழங்குதி நன்கு!
ஓதுக நீ ‘ஓம் தத் ஸத் ஓம்’ என. ( 1 )
திடன்உறு நெஞ்சத் தடல் மிகு துறவி!
இறுக்கிடு தளைகளை நொறுக்குதி அவைதாம்
ஒள்ளிய அரும் பொற் றளையாயினும்சரி,
எள்ளிய கரும்பொற் றளையாயினும்சரி,
சுகமுறு விருப்பும் அகம் வெறு வெறுப்பும்,
நன்மையும் நன்மை இன்மையு மாதித்
தொந்தம் தாம் இப்பந்தத் தொகுதி.
பசையொடு தழீஇயினும் கசையடி தரினும்
அடிமை அடிமை ஆகுவ னேயலால்,
சற்றும் சுவேஸ்சை உற்றவன் அலன்அறி
பொற்றனை ஆயினும் பற்றிப் பிணிப்புழிக்
குன்றா வலிஉடைத் தன்றோ? ஆதலின்
ஆங்கவை களைந்து நீங்குதல் நெறியே
ஓதுக நீ ‘ஓம் தத் ஸத் ஓம்’ என. ( 2 )
எதற்கும் அஞ்சா இயல்புடைத் துறவி!
இடுக்கண் மேன்மேல் அடுக்கும் பொருட்டுச்
சிமிட்டிச் சிமிட்டிச் சிற்றொளி காட்டி
இட்டுச் செல்லும் துட்டத் தீப்பேய்
அந்த காரம் அடியொடு தொலைத்தி!
வாணாள் ஆசையைப் பேணாதொழிதி
ஆ!ஆ!! அதுவே ஜீவாத்மாவைப்
‘புநரபி ஜநநம் புநரபி மரணம்’
என்னும் இவற்றிற் கீர்த்துச் செல்லும்
தான் அடங் கொருவன் தான் அடக்குவன் எலாம்
ஈதறிந் தென்றும் இடங்கொடா திருத்தி!
ஓதுக நீ ‘ஓம் தத் ஸத் ஓம்’ என. ( 3 )
அஞ்சுதல் அறியா நெஞ்சநற் றுறவி!
எவன் விதைப்பவனோ அவன் அறுப்பவனே!
காரணம் உளவேல் காரியமும் உள.
நன்மை விதைத்தவன் நன்மை அறுப்பன்.
தீமை விதைத்தவன் தீமை அறுப்பன் இவ்
விதியினின்றும் விலக்காவார் இலர்
உருப்பெற்றோர்க் கெலாம் உறுதளை உண்டெனப்
புகல்வர் – இதனிற் பொய்இலை ஆயினும்,
நாம ரூபம் ஆம் இவற்றப்பால்
என்று தடையற நின்றுள தான்மா
அதுதான் நீஎன் றறியக் கடவை
ஓதுக நீ ‘ஓம் தத் ஸத் ஓம்’ என. ( 4 )
ஒன்றினும் திரியா உளம் உடைத் துறவி!
பெற்றோர் மக்கள் உற்றோர் பெண்டிர்
இத்தகை யாவும் மித்தையே என்னக்
காணாதார் மெய் காணாதாரே
ஆண், பெண் இல்லா ஆன்மா வானது
எவர்க்கே தந்தை? எவர்க்கே மைந்தன்?
எவர்க்கே பகை அது? எவர்க்கே உறவது?
யாவற் றுள்ளும் யாவுமாய் அவ்
ஒன்றே உளதஃ தன்றிமற் றிலையால்
அதுதான் நீ என்றறியக் கடவை
ஓதுக நீ ‘ஓம் தத் ஸத் ஓம்’ என. ( 5 )
சலியா மனத்து வலியார் துறவி!
ஓன்றே உளதவ் ஒன்றும் என்றும்
தன் வயத்துவமாய்த் தான் இருப்பதுவே
யாவையும் உணர்ந்த தாவிலாத்தனிமை
நாம ரூபம் ஆம் இவை இல்லது.
களங்கம் இன்றி விளங்கும் பொருள் அது
இவ்வெளி மயக்கெலாம் அவ்வொரு பொருட்கண்
உளதே ஆகும் பளகறு லோகக்
காட்சியாகவும், சாட்சியாகவும்
ஆன்மா ஆகவும், அப்பொருள் தோன்றும்
அதுதான் நீ என் றறியக் கடவை
ஓதுக நீ ‘ஓம் தத் ஸத் ஓம்’ என. ( 6 )
ஸாகஸம் மிகுந்த யூக சந்நியாஸி!
இவ்வுலகேனும் அவ்வுலகேனும்
ஈயாச் சுவேச்சை எங்கே தேடுவை?
ஏடு கோயிலிற் றேடுதல் வீணே.
நின்கரமே தான் நின்னை மேன்மேல்
ஈர்த்துச் செல்லும் இரும் பாசத்தைப்
பற்றிய தால்அப் பற்றினை உதறுக
புந்தி மயங்கிச் சிந்தை மாழ்கலை
ஓதுக நீ ‘ஓம் தத் ஸத் ஓம்’ என. ( 7 )
சாற்றற் கருமன ஆற்றல் சால் துறவி!
“பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.
இன்னா வேண்டாம் என்னால் உயிர்க்கே
உயர்ந்தோர் மாட்டும் இழிந்தோர் மாட்டும்
யாவற்றுள்ளும் மேவியோன் யானே
இம்மையும் அம்மையும் வெம்மைகூர்நரகும்
மண்ணும் விண்ணும் எண்ணும் நலமும்
தீதும் வேண்டிலன்” எனஓதி, அவ்வணமே
உறுதளை அனைத்தும் அறவொழித்திடுக
ஓதுக நீ ‘ஓம் தத் ஸத் ஓம்’ என. ( 8 )
உறுதிகொள் உள்ளத் தொருபெருந் துறவி!
இந்தச் சடலம் இங் கெவ்வா றாக
ஆம் போம் என்னா ஆய்ந்திடல் ஒழிக
அதற்குள வேலையை அது முடித்திடுக
கர்ம வெள்ளத்தின் கதி அது செல்க
ஏய நன்மாலை வேயினும் அதன்மேல்
மன விருப்பெய்தி மகிழவும் வேண்டாம்
யாக்கையை ஒருவன் தாக்கி உதைப்பினும்
கோப தாபம் கொள்ளவும் வேண்டாம்
புகழ்கின்றோனும், புகழ் உறுவோனும்
இகழ்கின்றோனும் இகழ் உறுவோனும்
ஏகனே அன்றி அநேகரோ? அலரால்
இகழ்ச்சி புகழ்ச்சிகள் எண்ணில் ஒன்றேஎனத்
தேறி உணர்ந்தே ஆறுதல் அடைக
ஓதுக நீ ‘ஓம் தத் ஸத் ஓம்’ என. ( 9 )
தைரியம் மிகுந்த செயிரறு துறவி!
காமம் புகழ் பொருள் தாமுள இடத்து
வாய்மை எந் நாளூம் வரமாட்டாது
மாதரை மனைவியா மதிப்பவன் எவனும்
பூரணத்துவம் உறக் காரணமே இலை
தினை அளவேனும் தனதெனக்கொள்வோன்
சினமெனும் தளையிற் சிக்குவோன் இவர்கள்
மாயை என்னும் வாயிற் கடவார்
ஆதலின் இவற்றை அறவொழித்திடுக
ஓதுக நீ ‘ஓம் தத் ஸத் ஓம்’ என. ( 10 )
திறம்பெறு நெஞ்சத் தறம்பெறு துறவி!
உறைவிடம் எதுவும் உனக்கென வேண்டாம்
நின்னைக் கொள்ளும் வீடெது? நேய!
விசும்பே கூரை, பசும்புல் படுக்கை
தற்செயலாகத் தான் கிடைப்பதுவே
உண்டி ஆகும் அவ்உண்டி நன்றாக
அட்டிருப்பினும் அது கெட்டிருப்பினும் எணேல்
அன்ன பானியமெதும் தன் இயல் புணர்ந்த
மன்னிய தூயனை மாசுறுத் தாதே
ஓடிப் புரளும் ஒரு நதிபோல
என்றும் சுவேச்சை ஒன்றி இருத்தி
ஓதுக நீ ‘ஓம் தத் ஸத் ஓம்’ என. ( 11 )
உரனுடை உள்ளத் தொருபெருந் துறவி!
ஆனமெய்ப் பொருளை அறிபவர் சிலரே
ஏனையோர் நின்னை இழிப்பர் வெறுப்பர்
மேலோய்! அதை ஓர் காலும் கருதேல்
இஷ்டப் படிஎங்கெங்குமே நீ
எய்தும் இன்பமும் நைதரு துன்பமும்
எண்ணா தேகி அன்னோர் போர்த்த
மாயை என்னும் மாயிருள் நீக்குதி
ஓதுக நீ ‘ஓம் தத் ஸத் ஓம்’ என. ( 12 )
புலப்பகை வெல் மனப் பலப்பெருந் துறவி!
கர்ம பந்தம் கழியும் மட்டும்
ஒவ்வொரு நாளும் இவ்விதம் முயன்று
சேதநன் தன்னைத் தீதுறு தளையின்
நின்றும் விடுக்குதி என்றும் பிறப்பிலை
‘நானும்’ ‘நீயும்’ நரரும் சுரருமில்
‘யான்’ என்பதுவே யாவும்; யாவும்
யானே; அதுவே தான் ஆநந்தம்
அதுதான் நீ என் றறியக் கடவை.
ஓதுக நீ ‘ஓம் தத் ஸத் ஓம்’ என. ( 13 )
ஸ்ரீமத் சுவாமி விவேகானந்தர் இயற்றிய ஆங்கிலக் கவிதைகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்தவர் தமிழறிஞர் ம. கோபாலகிருஷ்ண ஐயர். ஆங்கிலத்தில் சுவாமி விவேகானந்தர் எழுதிய “The Song of the Sanyasin” என்பதை “சந்நியாசி கீதம்” என்று தமிழில் மொழிபெயர்த்து 1904ஆம் ஆண்டு “மதுரை விவேகானந்த சபை”யின் வெளியீடாக வெளியிட்டவர் ம. கோபாலகிருஷ்ண ஐயர் (1878 – 1927) அவர்கள்.