Thiruvembavai – 16

மார்கழி – 16

01.01.2016-வெள்ளி

மாணிக்கவாசகர் இயற்றிய

திருவெம்பாவை

16

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையா

ளென்னத் திகழ்ந்தெம்மை யாளுடையா ளிட்டிடையின்

மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்

பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவ

மென்னச் சிலைகுலவி நந்தம்மை யாளுடையா

டன்னிற் பிரிவிலா வெங்கோமா னன்பர்க்கு

முன்னி யவணமக்கு முன்சுரக்கு மின்னருளே

யென்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.


முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்

என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்

மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்

பொன் அம் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலை குலவி நம் தம்மை ஆள் உடையாள்

தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு

முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன் அருளே

என்னப் பொழியாய் மழை ஏல் ஓர் எம்பாவாய்.


அருஞ்சொற்பொருள்:

முன்னி – முற்பட்டு.

இட்டிடையின் – சிறிய இடைபோன்று.

சிலை – வானவில்.

குலவி – விளங்கப்பெற்று.

முன்னி – முந்தி.

மழை – மேகம்.


 

பொழிப்புரை:

மேகமே! இக்கடலைக் குடித்து அதன் நீரைக் குறைத்து மேலே கிளம்பி உமாதேவியாரின் கார் நிறத்தைப் பெற்றாய். நீ மின்னலாக மின்னியது அம்பிகையின் சிறிய இடையை ஒத்திருந்தது, நீ இடியக இடித்தது தேவியின் திருவடியில் பொன் சிலம்பு ஒலித்தது போன்றிருந்தது. நீ வானவில் வீசியது அம்பிகையின் புருவத்தை ஒத்திருந்தது. எம்மை ஆளுடையாளாகிய அம்பிகையின் பாகன் சிவனாருடைய அன்பர்க்கு முதலில் அருள் சுரந்துவிட்டுப் பிறகு எங்களுக்கும் அருள் மழையாகப் பொழிவாயாக. பெண்ணே, இக்கோட்பாட்டை ஏற்கவும் எண்ணிப் பார்க்கவும் செய்வாயாக.


சுவாமி சித்பவானந்தரின் விளக்கம்:

அருளைப் பெறுதலில் மற்றவர்களை முன்னணியில் வைத்துத் தங்களைப் பின்னணியில் வைப்பது பக்தி படைத்தவர்களது பேரியல்பாகும்.

நாரத பக்தி சூத்திரம் 54:

गुणरहितं कामनारहितं प्रतिक्षणवर्धमानमविच्छिन्नं सूक्ष्मतरम् अनुभवरूपम् ॥

குணரஹிதம் காமனாரஹிதம் ப்ரதிக்ஷணவர்தமானம் அவிச்சின்னம் ஸூக்ஷ்மதரம் அனுபவரூபம்.

பொருள்:

பக்தியானது குணங்குறியற்றது; அது பிரதிபலனை எதிர்பார்ப்பதில்லை; க்ஷணந்தோறும் மேலும் மேலும் பெரியதாக வளர்கிறது; அதில் இடையீடு இல்லை; அது நுண்ணியதினும் நுண்ணியது; அது அனுபவத்துக்கு உரியது.

ஒரு மனிதனிடத்து உள்ள பண்பைப் பார்த்து நான் அவனை நேசிக்கிறோம். ஆனால் அப்பண்பு அவனைவிட்டு அகலுங்கால் நமது நேசமும் மறைந்து போகிறது. பக்தியோ ஏதேனும் பண்பைப் பார்த்து பெருகுவதன்று. குணத்தினையோ குணக்கேடதனையோ அது பொருள்படுத்துவதில்லை. காரணமும் காரியமும் அதில் இடம் பெறுவதில்லை. அது அஹேது பிரேமையாகப் பொலிகிறது. ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணத்தையும் தாண்டியது அது. ஆதலால் அதைச் சொல்லால் விளக்க முடியாது.

பிரதிபலனை எதிர்பார்ப்பது பக்தியின் பாங்கு அன்று. தன்னிடத்து இருப்பதையெல்லாம் பக்தம் தெய்வத்துக்கும் உயிர்வகைகளுக்கும் கரவாது வழங்குகின்றான். முக்தி உட்பட எதையும் அவன் தெய்வத்திடமிருந்து கேட்பதில்லை. தன்னிடத்திருப்பதை ஓயாது கொடுத்துக் கொண்டிருப்பது அவன் போக்கு. ஆதலால் பகவானே அவனுக்குக் கடமைப்பட்டவர் ஆகின்றார்.

பக்திக்கு உச்சநிலை என்பது ஒன்றுமில்லை. அது ஓயாது வளர்கிறது; அதற்குத் தேய்வு கிடையாது. எவ்வளவு மேலே போனாலும் இன்னும் மேலே போக அது முயலுகிறது. அகண்டாகாரமாவது அதன் இயல்பு.

உலகப் பற்றுதலிலும் உலக அன்பிலும் தோற்றமும் மறைவும் மாறி மாறி வருகின்றன. ஆனால் பக்தியோ இடையீடின்றி வெட்டவெளி போன்று எங்கும் வியாபகமாகப் பரவுகிறது.

ஆத்ம சொரூபத்துக்குப் பக்தி விளக்கமாதலால் ஆத்மாவைப் போன்று அது அதி சூக்ஷ்மமானது. ஆனால் எல்லாருடைய அனுபவத்துக்கு அது எட்டக்கூடியது. பக்திவலையில் பகவான் மட்டும் படுபவர் அல்லர்; உயிர்கள் அனைத்தும் பக்திக்கு உடன்படுகின்றன.


(இங்கு அச்சடித்துள்ளவற்றை Admin அனுமதியின்றி copy செய்து, வேறு தளங்களில் paste செய்யக்கூடாது. Face book, Twitter தளங்களில் share செய்துகொள்ளலாம் அல்லது Print செய்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் கட்டுரைக்குக் கீழே SHARE THIS: பகுதியில் குறியீடுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. Print செய்ய More கிளிக் செய்யவும். உதவுங்கள்!)

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Leave a comment