Sri Paramahamsarin Apta Mozi – 97

ஸ்ரீ பரமஹம்ஸரின் ஆப்த மொழி – 97

wpid-paramahamsarin-apta-mozi.png.png

(முந்தைய பகுதி – மொழி 96: https://swamichidbhavananda.wordpress.com/2016/07/21/sri-paramahamsarin-apta-mozi-96/)

வறுமைக்குப் பக்தன் அஞ்சுவதில்லை

கிருஷ்ணகிசோரைப் பற்றிய மற்றொரு சம்பவத்தைப் பரமஹம்ஸர் இங்ஙனம் பகர்ந்தார்: “கிருஷ்ணகிசோரைச் சந்திக்க ஒரு தடவை நான் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நான் அவரைப் பார்த்தபொழுது அவர் ஏதோ வியாகூலத்தில் மூழ்கியிருந்தது போன்று தென்பட்டது. ‘ஏன் மனவாட்டமுற்று இருக்கின்றீர்கள்?’ என்று நான் அவரைக் கேட்டேன். அதற்கு அவரிடமிருந்து விடை வந்தது. ‘வீட்டுவரி வசூல் பண்ணுகின்றவன் இன்று காலையில் வந்தான். இன்னும் இரு தினங்களில் வரி செலுத்தாவிட்டால் என்னிடம் இருக்கும் பித்தளைப் பாத்திரம், தட்டு முதலியவைகளை வரிக்கு ஈடாக எடுத்துச் சென்றுவிடுவேன் என்று பயமுறுத்திச் சென்றான். அதைக் குறித்து நான் சிறிது வியாகூலமடைந்தவனாக இருக்கிறேன்’ என்றார்.

அதைக் கேட்டதும் நான் அவருக்கு உற்சாகமூட்டினேன்: ‘நீங்கள் ஏன் அதைக் குறித்துக் கவலைப் படுகிறீர்கள். வீட்டில் சில பாத்திரங்கள் இருக்கின்றன. வேண்டுமானால் அப்பாத்திரங்களையெல்லாம் அவன் தூக்கிக்கொண்டு போகட்டும். வீட்டையே வேண்டுமென்றாலும் அவன் ஜப்தி செய்து கொள்ளட்டும். அல்லது உங்கள் உடலத்தையே அவன் கைதுசெய்து கொள்ளட்டும். அதனால் உங்களுக்கு வரும் குறை என்ன? நீங்கள், சிதாகாசம் உங்களுடைய நிஜ சொரூபம் என்று சொல்லுகின்றீர்களே! எங்கும் பரந்துள்ள இந்த ஆகாசத்தை யார் எங்கிருந்து எங்கே தூக்கிச் செல்ல முடியும்?’ புன்னகை பூத்தவனாக நான் இங்ஙனம் பகர்ந்தபொழுது அவரும் தமது வியாகூலத்தை அக்கணமே ஒதுக்கிவிட்டார். போலி பக்தன் ஒருவனுக்குத் துன்பம் வரும்பொழுது அவன் பக்தி பறந்தோடிவிடுகிறது. உண்மையான பக்தன் விஷயம் அத்தகையதன்று, துன்பத்தில் அவன் பக்தி அதிகரிக்கிறது. கிருஷ்ணகிசோர் ஓர் உண்மையான பக்தர்.

மனம் என்னும் கண்ணாடி

அன்பர்கள் பலர் பரமஹம்ஸருடைய அறையில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அன்னவர்களுக்கு அவர் இயம்பிய மேலாம் கருத்துக்கள் பலவற்றினுள் இவைகளும் வருவனவாயின:

“நான் ஆத்ம சாதனையிலிருந்தபொழுது எனக்கு ஒருவிதமான மனநிலை ஏற்பட்டிருந்தது. கண்ணுக்குத் தென்படுபவர் ஒவ்வொருவருடைய மன அமைப்பும் உள்ளபடி எனக்கு விளங்கிவிடும். கண்ணாடிப் பெட்டிக்குள்ளிருக்கும் வஸ்துக்களை நாம் காண்பது போன்று மனத்தகத்திருக்கும் கருத்துக்களும், இயல்புகளும் அப்பொழுது எனக்கு விளங்கிவிடும். அவைகளை நான் தங்குதடையின்றி எடுத்துப் பேசுவதுண்டு. சமுதாயத்தில் பெரிய அந்தஸ்து வகித்திருந்தவர்கள் விஷயத்தில் பலவாறாகப் பேசலாகாது என்று பொதுப்பட மக்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அந்த மனநிலையில் எனக்குப் பெரியவர் என்றும், சிறியவர் என்றும் வேற்றுமை தென்படவில்லை. என்றும் எதிரில் வருபவர் யாராயிருந்தாலும் அவர்களுடைய மனப்போக்கை நான் அப்படியே எடுத்துப் பகர்ந்துவிடுவதுண்டு. அவர்களுடைய தாட்சண்யத்தைப் பற்றியோ, செல்வாக்கைப் பற்றியோ நான் சிறிதும் சிந்திப்பது கிடையாது.”

(தொடரும்…)

Leave a comment